Wednesday, August 26, 2020

அந்த காலத் திருமணங்கள்..

 அந்த காலத் திருமணங்கள்..



காலத்திலிருந்து 1975-களின் வரை , பரங்கிபேட்டை , நாகூர், காரைக்கால் ,  நாகை, மற்றும் இதன் சுற்றுபுற ஊர்களில் வாழும் தமிழ் பேசும் முஸ்லீம் திருமணங்கள் இரவில் தான் நடக்கும்.

உருது பேசும் முஸ்லிம் வீட்டு திருமணங்கள் இதுபோல் நடந்தாலும் சற்று வித்தியாசப்படும். 

நான்கு நாட்களுக்கு ஒலிப்பெருக்கி குழாயில் பாட்டு சத்தம் கேட்டு கொண்டே இருக்கும்.

மாப்பிள்ளை பொன்னு வீட்டு வாசலில் பந்தல் போட்டு வருபவர்கள் அமர நீளமான பெஞ்ச்கள் போட்டும் இருப்பார்கள்.

பக்கத்து வீடு, எதிர் வீட்டுத் திண்ணைகளிலும் சுருணைப் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும். 

அந்தக்காலத்தில் தெருவெல்லாம் மணலாகதானிருக்கும். கல்யாணக்கார வீட்டு வாசலில் ஆத்து மண்ணுக் கொட்டி பரத்தி சில்லென்று இருக்கும்.

இரவு 7.30 மணியில் இருந்து 9.30 வரை அஞ்சு வகைக் கறி சோற்றுக் களறி விருந்து. அந்த நாளில் இல்லங்களும், உள் ளங்களும், எண்ணங்களும் விசாலமாக இருந்தன. 

முதலில் பெண்கள் களறி, அது முடிந்த பின்னே ஆண்கள் களறி. இரண்டு களறிகளும் தனி தனி பெரிய  வீடுகளில் நடைபெறும்.(m)வீட்டு வாசலில் ரோக்கா கொடுப்பவர் தண்ணீருடன் கையில் ஜெக்கை வைத்துக் கொண்டு கைக் கழுவ தண்ணீர் ஊற்றுவார்.

வீட்டுக்காரங்க பலர் வருகின்ற விருந்தாளிகளை அன்புடன் வாங்க, வாங்க என்று வரவேற்று உபசரிப்பார்கள்.

வீடுகளில் தாழ்வாரம் முற்றம் பகுதிகளில் சுப்ரா விரிக்கப்பட்டு  ஜெக்குகளில் தண்ணீரும் குவளைகளுடன் வைக்கப்பட்டிருக்கும்.

பெரிய பெரிய டிரம்களின் முற்றத்தில் தண்ணீர் இருக்கும். நான்கு பேர்கள் அமர்ந்து சாப்பிடும் சஹன் சாப்பாடு. நான்கு நான்கு பேர்களாக அமர்ந்து விடுவார்கள்.

சில நேரங்களில் உட்கார்ந்த உடன் கையலம்ப தண்ணீர் ஊற்றுவார்கள். அப்புறம் சோறு சஹன், கறியுடன் பரிமாறப்படும். 

எல்லோருக்கும் வைத்த பின் எல்லோரும் உண்ணாமல் யாரையோ எதிர்பார்த்து இருப்பார்கள். 

திருமண வீட்டுக்கார பெரிய மனுஷர் உள்ளே வந்து பிஸ்மில்லா எல்லாரும் நல்லா சாப்பீடுங்க என சொல்லியப் பிறகுதான் சாப்பிட ஆரம்பிப்பார்கள். 

எவ்வித கூச்சல் சத்தமும் இல்லாமல் அமைதியாக இன்முகத்துடன் நடக்கும். உழுந்து, உழுந்து கவனிப்பார்கள்.சீனித் தோவைச் சோறு பிசைவது அதுஒரு சுகமான சுவையான அனுபவம். (( இப்போது விருந்தாளிகளே சோத்து தட்டை எடுத்து சாப்பிடும் அவலம். பல இடங்களில் கண்டும் காணாமல் நமக்கென்னவென்று இருக்கின்ற அலங்கோலம்)) 

.

சாப்பிட்டு விட்டு வெளியாகும் போது வீட்டுத் திண்ணையில் பெரியவங்க யாராவது ஒருவர் உக்காந்து பீடா கொடுப்பார். பீடாவில் சின்ன பூச்செண்டு சொருகப்பட்டிருக்கும். அவரிடம் பொயிட்டு வாரேன் எனக் கூறி உண்டவர்கள் வெளியேறிய வண்ணம் இருப்பர்.

கைத் துடைக்க பெரிய டவலங்களும் தொங்கும். பெரியவர் துஆ செய்யுங்கன்னு சொல்வார்.( அந்தக் காலத்திலும் செருப்பு காணாமல் போவதுண்டு)

பிறகு வீடு சுத்தம் செய்யப்பட்டு மாப்பிள்ளையாக்கும் வேலைகள் தொடரும்.மாப்பிள்ளைத் தோழர்கள் வந்து மணமகனுக்கு அலங்காரம் செய்து ராஜ உடுப்பு எல்லாம் போட்டு விட்டு ரெடியாக இருப்பார்கள்.

அதுக்கப்பறம் அஹ வந்து இஹ வந்து மணமேடையில் உக்கார வச்சி, பாத்திஹா ஓதி, அணச்சி முச்சமிட்டு  மாலை சூட்டல் நடைபெறும். 

ஒத்தஹ மாலைப் போட்டு விட, இன்னொத்தஹ பூச்செண்டைக் கையில் கொடுக்க, இன்னும் ஒத்தஹ ஜிகுரா குஞ்சத்தை முகத்தில் கட்டி விட, இது முடிந்ததும் பைத்து சபாவினர் உள்ளே வந்து பாட்டு சலவாத்து சொல்லி ஆரம்பித்து, பாடி தப்ஸ் கொட்டிவிட்டு வெளியே சென்று விடுவார்கள். 

பைத்து சபாவினருக்கு சின்ன மெல்லிய மாலை எல்லோரும் அணிந்துக் கொள்ள கொடுப்பதுண்டு...

ஏதோ அவ்வப்போது கேமரா பிளாஸ் பளிச்சென்று அடிக்கும். மறுபடியும் அணச்சி முச்சமிட்டு வாழ்த்தி வழியனுப்பி வைப்பார்கள். 

மாப்பிள்ளையோ ஒருவரையும் விட்டு விடாமல் பொயிட்டு வர்றேன், பொயிட்டு வர்றேன் என்று சொல்லி விடைபெற்று வந்து பக்கி, அல்லது குதிரையில் ஏறுவார். 

பைத்து சபையினர் மீண்டும்  தொண்டைக் கிழிய சும்மாதான் கத்திப் பாடணும், அந்நாளில் பைத்து சபாவினர் பாட, மைக் செட்டெல்லாம் கிடையாது. அதுவும் பாட்டுப் பாடுபவர்கள்  வரிசைக்கு முன்புறத்தில் மாப்பிள்ளையின் முகத்தைப் பார்க்கும் படியாக நின்று back step வைத்துதான் நடக்க வேண்டும். இதனால் பலர் கல் தடுக்கிக் கீழே விழுந்ததும் உண்டு, சிலர் பதக்கென்று சாணியில் காலை விட்டதும் உண்டு ஒரே சிரிப்பு மயம்தான்.. 

வெளிச்சத்திற்காக ஊர்வலத்தின் இருபுறமும் பெட்ரோமாக்ஸ் விளக்குகளை தலையில் சுமந்து அதற்கான ஆட்களும் கூடவே வருவார்கள்.

பாட்டு பாட ஆரம்பித்து பொடி நடையா நத்தை ஊர்ந்துவதுபோல் ஊர்வலம் மெதுவா செல்லும். தோழமார்கள் ஜாலியா அரட்டை அடித்தபடி நடந்து வருவார்கள். 

மாப்பிள்ளைக்கு பக்கத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்ட வாண்டுகள் அமர்ந்து இருக்கும்.

.

1975க்குப் பிறகுதான்  ஊர்வலத்தில் மின் அலங்கார கார், கம்புகளில் கட்டிய டியூப் லைட்ஸ் பேண்டு வாத்தியக்  குழுவினர்கள் பங்களிக்கும் சீசனும் உருவானது.

சில வீடுகளில் ஊர்வலத்தின் கூடவே வருபவர்களுக்கு சோடா கலர் உடைத்து பருக அளிப்பார்கள்.

அந்தக்காலத்தில் மாப்பிள்ளை பெரும்பாலும் பக்கி வண்டி,அல்லது குதிரையில் ராஜ உடுப்பு அணிந்து பேட்டாக்கட்டி முகத்துக்கு ஜிகுரா குஞ்சமும் கட்டி பூச்செண்டைப் பிடித்தபடி ஊர்வலமாக வருவார்.

பேட்டா கட்டி விடுவதற்கென்று தனி நபர்கள் இருப்பார்கள். முன் கூட்டியே அவர் வீட்டுக்கு வந்து கட்டி தந்து விடுவார்.. 

பைத்து சத்தம், தப்ஸ் சத்தம் கேட்டதும் "அடியே மாப்பிள்ளை ஊர்வலம் வருது சீக்கரம் வாங்கடி பாக்கலாம்" என்று எல்லா வீட்டுப் பெண்களும் துப்பட்டியேப் போட்டுக் கொண்டு அவரவர் வீட்டு வாசலில் நின்று ரசிப்பார்கள்.

ஆண்களும் தான்.... 

மாப்பிள்ளையைப் பற்றி விமர்ச்சனங்கள் மணக்கும்..

ஊரில் இருக்கும்(m) சொந்தக்காரங்க ஒவ்வொரு வீட்டிலும் ஆரத்தி ரெடியாக இருக்கும்...எல்லா வீடுகளுக்கும் மாப்பிள்ளை போயாக வேண்டும். 

ஊர்வலம் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நிற்கும். மாப்பிள்ளை இறங்கி சலாம் சொல்லி உள்ளே போவார்.அந்த நேரத்தில் பைத்து குழுவினருக்கு இடைவேளை. தம்மடிப்பவர்கள் ஒதுங்கிச் சென்று கடமையை முடிப்பார்கள். 

அந்தந்த வீட்டில் உள்ள பெரிசுகள் அங்கேயும் அணச்சி முச்சமிட்டு அல்லாட உதவியாலே ஹயாத்தே நீளமாக்கி குடு, குடு கெழவங்கெழவி ராஜபோகமா வாழன்னு வாழ்த்தி நெஞ்சிலே மோந்து பாலும் பழமும் கொடுத்து சாப்பிட சொல்லி அன்பளிப்பு பணம் கொடுப்பார்கள்.அல்லது மோதிரம் இடுவார்கள்.

இதையெல்லாம் தோழமார்கள் பேப்பரில் குறித்துக் கொள்வார்கள். இப்படியாக எல்லா சொந்தக்கார வீடுகளுக்கும் செல்ல வேண்டும். 

ஆங்காங்கே அன்பளிப்பு வந்துக் கொண்டே இருக்கும். இதுமட்டுமின்றி தர்கா ஜியாரத், தைக்கால் ஜியாரத்துக்கு மாப்பிள்ளை கீழே இறங்கி தோழர்களுடன் ஜியாரத் செய்வார். 

யாராவது பாத்திஹா ஓதி துஆ கேட்பார். எல்லாரும் ஆமீன் சொல்லனும்.. நேரமோ ஓடிக் கொண்டே இருக்கும்.

ஏதாவது ஒரு வீடு விடுபட்டாலும் பிரச்சினை... கோபித்துக் கொண்டு சிலர் உறவையே துண்டித்து விடுவார்கள்.ஊரையெல்லாம் சுத்தி ஊர்வலம் பொன்னு வீட்டு வாசலையடைய பின்னிரவு ஒருமணி, இரண்டு மணியாகி விடும். 

.

1975-ல் நண்பர் புதுமனைத் தெரு பவுன் மரைக்கார் கல்யாணம். எங்கள் தலைமையில் நாகூர் கௌதியா பைத்து சபாவும், திட்டச்சேரி பூரான் சுல்தான் தலைமையில் திட்டச்சேரி பைத்து சபாவும் சேர்த்து ஊர்வலத்தை நடத்திச் சென்றோம். 

மாப்பிள்ளையை இரவு 10 மணிக்கு கிளப்பி அதிகாலை சுபுஹுக்கு பாங்கு சொல்லும் போது பொண்ணு வீட்டு வாசலை அடைந்தோம்..

அந்தக் கால பெரியோர்கள் பலர் ரவுண்டு உயர வெள்ளைக் குல்லா,வெல்வெட் குல்லா, துருக்கி குல்லா, நீள வெல்வெட் குல்லா தொப்பிதான் அதிகமாக அணிவார்கள்.

நிக்காஹ் சபையை கண்களால் காணும் போது கண்ணியமும், சங்கை மிகுந்ததாக வும் காட்சியளிக்கும்.. இப்போது உள்ள தொப்பி மாதிரியெல்லாம் அப்போது கிடையாது.

பல வாலிபர்களும் இதைதான் போட்டு வருவார்கள்.. பின்னிரவு ஆன போதிலும் யார் முகத்திலும் கொஞ்சம் கூட சோர்வு தெரியாது..அந்தகால உணவு, பழக்கவழக்கங்கள், சூழ்நிலைதான் இதற்கு காரணம்..

தோழம்பணம் கேட்டு மாப்பிள்ளைத் தோழர்கள் வம்படிப்பார்கள்.. அதைக் கொடுத்தப் பின்புதான் மாப்பிள்ளையை பக்கியில் இருந்து இறக்குவார்கள்.

(திஷ்டி சுற்றி ஆராத்தி எடுத்து புடவை சால்வைப் போத்தி, இன்னொரு புடவையை கம்பளமாய் தரையில் விரித்து அதில் நடந்து வரச் செய்து உள்ளே அழைத்து செல்வார்கள். 

உள்ளே மாப்பிள்ளையுடன் எல்லோரும் நுழையும் போது கதவருகே இருபக்கமும் இரண்டு சிறார்கள் பன்னீர் செம்பை மேலே தூக்கி தூக்கி பன்னீர் தெளிப்பார்கள். வாசம் கம கமக்கும்.

பொன்னு வீட்டு மணமேடையில் மாப்ளே கொஞ்ச நேரம் உக்காந்து இருப்பார். எல்லா முக்கியஸ்தர்களும் வந்தாச்சா என்று சோதனைப் பார்வை நோட்டம் விடுவார்கள்.யாராவது முத்தாப்பா, பெத்தாப்பா வராமல் இருந்தால் உடனே போய் கூட்டிக்கிட்டு வருவாங்க.

எல்லாரும் வந்தப் பிறகு மாப்பிள்ளைக்கு தலையணையை பின்னாடி முட்டு கொடுத்து பிஸ்மி கால் போட்டு தோழர்கள் உதவியுடன் விரித்து வைக்கப்பட்டிருக்கும் வில்லூரி கம்பளத்தில் உக்கார செய்வார்கள். 

பக்கத்தில் டிசைன் டிசைனா கலர் பேப்பர், கோல்டு பேப்பர் ஒட்டப்பட்ட சுத்திப்பால் மூடிய மரவையில் பால்,வாழைப்பழம்,தண்ணீரும் இருக்கும். 

ஆரம்பிக்கலாமா என்று கேட்டு விட்டு எல்லோரும் சரியென தலையாட்டியதும் டவுன் காஜி வாழ்க்கை ஒப்பந்த உடன்படிக்கையை வாசிப்பார்.

அதன்பின் பாலும் பழமும் ஊட்டி விடுவார்..அப்புறம் மாப்பிள்ளை கையெழுத்துப் போட பாட்டனா, வாப்பா, மற்றும் எதிரே உள்ள சொந்தக்காரர்களைப் பார்ப்பார்.போடலாம் என சைகைச் செய்ததும் கையெழுத்துப் போடுவார். 

.

அடுத்து பெண்ணிடம் கையெழுத்து வாங்க பெண்ணின் வாப்பாவோ ரத்த சொந்தமோ நோட்டு புக்குடன் அறைக்குள் சென்று பெண்ணிடம் கையெழுத்து வாங்கி விட்டு வெளியில் வரும் போது அஸ்ஸலாமு அலைக்கும் என நாகூர் ஹனிபா மாதிரி வேகமான சத்தத்துடன் அழுத்தந் திருத்தமாக சலாம் சொல்லுவார். எல்லாரும் பதில் சலாம் சொல்வார்கள்.

சாட்சிக் கையெழுத்துப் போட நீண்ட பட்டியல் இருக்கும். பல இடங்களில் சாட்சிக் கையெழுத்துக்கு அஹல போடல, இஹல போடல என்ற மனக்குறை ஏற்படுவதுமுண்டு.

அப்பாடா நிக்காஹ் முடிந்து துஆ ஓதுகையில், அதில் பாத்திமா நாயகி அவர்களின் பெயர் வரும்போது நல்லா செல்வீகமா வாழ்ந்துக் கொண்டிருக்கும் சீதேவியான மூத்த பெண்மணி ஒருவர் அறையில் பொன்னுக்கு கரியமணி கட்டி விடுவார். அப்போது குரவை விடுவார்கள். 

துஆ முடிந்தப் பின் சலாம் கொடுக்கும் சம்பிரதாயம் நிகழும்.கலர் பேப்பர்ல சுற்றிய லட்டு எல்லாருக்கும் கிடைக்கும். 

சலாம் கொடுக்கும் போது பெண்ணின்  தகப்பனார், அல்லது பாட்டனார் மாப்பிள்ளைக்கு தங்கச் சங்கிலியை கழுத்தில் போட்டு விட்டு விரல்களில் மோதிரங்களை மாட்டி விடுவார்.

போட்டோக்கு போஸும் கொடுப்பார். (( பணக்கார வீட்டு கல்யாணங்களில் மட்டும்)) மோதிரம் இடுபவர்களும், அன்பளிப்பு கவர் கொடுப்பவர்களும் சலாம் கொடுக்க முந்துவார்கள். 

வாழ்த்துப் பாட்டு நோட்டஸ் வினியோகிக்கப்படும், வாழ்த்துப் பாடல்களை தோழர்களோ அல்லது யாராவது பாடகரோ பாடி அசத்துவார்கள்.

(( 1970 தொட்டு 1995 வரை திருமண வாழ்த்துப் பாடல்கள், பரிகாசப் பாடல் மற்றும் எல்லா இனிய நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் வாழ்த்துப்பாடல்கள் மட்டும் 20 ஆயி்ரம் பாடல்களுக்கு மேலாக நான் எழுதி இருக்கிறேன்.

ஒரே வீட்டு கல்யாணத்திற்கு 10 பாடல்களும், ஒரே மெட்டில் 100 பாடல்களுக்கு மேலாகவும் எழுதிக் கொடுத்துள்ளேன். நான் எழுதிய பரிகாசப் பாடல்கள் ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள்,சிறுமியர் வரை ரொம்ப பேமஸ். அவைகளை இன்றும் என்னிடம் பலர் பாடி காண்பிக்கும் போது மகிழ்ச்சியாய் இருக்கிறது. தற்போதும் அது தொடர்ந்த வண்ணமே உள்ளது.))

.

அன்பளிப்பு செய்தவர்களின் பெயர்களை தோழர்கள் நா முந்தி நீ முந்தியென மைக்கில் சொல்வார்கள். இதிலும் எதாவது பெயர் விடுபட்டால் குறைப்பட்டு கொள்வார்கள். 

அதன் பிறகு மாப்பிள்ளையும் , தோழர்களும் ரெஸ்ட் எடுக்க நடுக்கட்டு அறையிலோ, யான்ஸிலோ கொண்டு போய் விடுவார்கள்.பிற்பாடு கை எணச்சி விட அழைப்பு வருவதற்கு முன்பாக பலவகையான பனியான், அல்வா, குலாப்ஜான், தம்ரோட்டு பசியாற வைப்பார்கள். தோழர்கள் அவற்றை வெளுத்துக் கட்டுவார்கள்.

இப்போ கை எணச்சி விடும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. பெரிய மனிதர் யாராவது ஒருவர் மணமகனை கைப்பிடித்து அழைத்து சென்று பாத்திஹா ஓதி துஆ செய்து தனி மணவறையில் முதல் சந்திப்பாக பொன்னையும் மாப்பிள்ளையையும் கையெழச்சி விடுவார்.உடனே அவர் வெளியில் வந்து விடுவார்.

அறைக்குள் சென்ற மாப்பிள்ளை அஞ்சி நிமிடத்தில் திரும்பி வெளியில் வருவார். மாப்பிள்ளையை பார்த்து பொண்டுவலுவோ நையாண்டி கேலி செய்வார்கள். அவருக்கு பூரிப்பு தாங்க முடியாதபடி பொங்கும்.. 

தோழமார்கள் மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு போய் அத பாத்தியா, இத பாத்தியா, பொன்னு எப்படி என்று கிண்டலடிப்பார்கள். 

மாப்பிள்ளையோ பேத்த பேத்தவென்று முழிப்பார்.இப்படி கொஞ்ச நேரம் கதாகலாச்சேபம் ஓடும்..மாப்பிள்ளை வீட்டு ஆண்களும் பெண்களும் அலங்காரம் செய்துக் கொண்டு பெண் வீட்டுக்கு கூட்டமாய் வருவார்கள். அப்படி அவர்கள் அனைவரும் வந்ததும் தாலிக் கட்டுதல் நிகழ்ச்சி தொடரும். 

.

மாப்பிள்ளைக்கு மீண்டும் மேக்கப் பண்ணி அத்தர் நறுமணம் பூசி மாலையை அணிவித்து மாப்பிள்ளைத் தோழர்கள் மாப்பிள்ளையை மணமேடையில் உக்கார வைத்து ஒரு மரப்பை தொங்க விடுவார்கள்.

முற்றத்திலே வெள்ளைத் துப் பட்டி அணிந்த இள, நடுத்தர, மூத்த வயசுடைய பெண்கள் முகத்தை இறுக்க மூடியபடி கண்கள் புன்னகைக்க சந்தோசமா நெருக்கடித்துக் கொண்டு கூடி அமர்ந்து இருப்பார்கள். சில மூத்த பெண்கள் தோழர்களோடு பேச்சு மன்றம் நடத்த தயார் நிலையில் இருப்பர்.

தோழர்கள் பெண்களோடு நையாண்டியாக பேசும் போது பனியாணைப்பற்றியே ரெட்டை அர்த்தத்தில் பேசுவார்கள்.நூறு லட்டு தந்தாதான் மரப்பை அவுப்போம் என வாதம் பண்ணுவார்கள். 

ஆவுகெச்சனம், அல்லாவச்சி காப்பாத்த என்று மூக்கில் விரலை வைத்து முக்கி முக்கி சிரிப்பார்கள்.அஹலுக்கு இப்படி பேசுவது ரொம்ப குஷியா இருக்கும்.

பேச பேச கிண்டிக் கிண்டி விடுவார்கள். சிரிப்பும், கொலவைச் சத்தமும் காதுகளை பிளக்கும்..இந்த பேச்சு மன்றம் முடிந்ததும், மாப்பிள்ளையை பெண் வீட்டார் கையில் ஒப்படைத்து விட்டு தோழர்கள் மூட்டையைக் கட்டிக் கொண்டு நடையைக் கட்டுவார்கள். இனி தாலிக் கட்டுதல்.  இதில் பெண்கள்  ராசாங்கம்தான்.

ஒருவர் பெண்ணை அறையில் இருந்து தூக்கிக் கொண்டு வந்து மாப்பிள்ளைக்கு பக்கத்தில் மணமேடையில் அமர்த்துவார்.

மாப்பிள்ளை நைஷாக பொண்ணை ஓரக் கண்ணால் பார்ப்பார்.மாப்புள்ளை, பெண்ணையும் மணமேடையில் வைத்து பரிகாசம் செஞ்சி கூடு விடுவார்கள்.. தென்னம்பூவால் அடிப்பார்கள்..

அப்படி இப்படி சுபுஹு நேரம் வந்து விடும்.. மாப்பிள்ளை தூக்கி தூக்கிக் காட்டி விட்டு தங்க கவர்னர் மாலையைப் பொன்னுக் கழுத்தில் போட்டு விடுவார்.

இடையிடையே என்னென்னமோ சடங்கெல்லாம் நடக்கும். பாவம் பொன்னு கண்ணையும் தொறக்காமே வாயையும் மூடி குனிஞ்சத் தலை நிமிராமே கூனி குறுகி உக்காந்து இருக்கும்.

மாப்பிள்ளைக்கி வாயெல்லாம் பல்லாய் இருக்கும்.எப்படா சீக்கினம் கூட்டிக் கிட்டு போய் அறையில உடுவாஹா என்று வேத்து விறுவிறுத்து போய் மூச்சி விட்டுக் கொண்டிருப்பார்.

பொடிசுகள் ரெண்டு பக்கத்தில் நின்று விசிறியால் வீசி விடுவார்கள்..சாக்லெட் இன்னும் பல மிட்டாய்களை சேர்த்து தலைச்சுற்றி பிடி பிடியாய் எதிரே உட்கார்ந்து இருப்பவர்கள் பக்கமாக எறிவார்கள். அதனைப் பொறுக்குவதை பார்க்கையில் ஆனந்தம் பெருகும்.

தாலிக்கட்டு முடித்த பின் வந்திருக்கும் எல்லோருக்கும் பெரிய கிளாஸில் நிறய நிறய ரோஸ் மில்க் சர்பத் கொடுப்பதும் வழக்கம்.

அதன் பிறகு மாப்பிள்ளை பொன்னைத் தூக்கிக் கொண்டு எல்லாரையும் தாண்டி முக்கி மோதிக்கிட்டு அறைக்குள் செல்வார்.மாப்பிள்ளையின் பின்னாடியே வயதான பெண் மணியும் சென்று வாப்பா கண்ணே பாத்து நடந்துக்குங்கோ.

இந்தாங்க கட்டில் ஏறும் பவுனு ( அல்லது பணம்) வச்சிக்குங்க நல்லபடியா எல்லாம் முடிஞ்சதும் அத பொன்னோட தாவணி முந்தானையில் முடிஞ்சி உட்டுடுங்க.. தூங்கிடாதிங்க வாப்பா என நாசூக்காக சொல்லி கதவை அந்த பெண்மணியே சாத்தி விட்டு வருவாஹா!!!  

அடிக்கடி கொலவை சத்தம் கேட்டவாறு இருக்கும். நாகூர் சாஹீப்மார்கள் வீட்டு திருமணங்கள் இன்னும் பற்பல விதங்களில் வெகு தடா புடலா நடக்கும். அப்புறம் என்ன அந்தரங்கம் ஊமையானது....... 

இப்படியாக அந்நாள் முஸ்லீம் வீட்டுக் கல்யாணம் வெகு சிறப்பாக நடைபெறும்.

1,கலயாணப் பேச்சு படலம்,

2, கல்யாண அழைப்பு படலம் ,

3, விருந்து, நிக்காஹ் படலம், 

4, நாலானீர் சீர் படலம்,

5,தோழஞ்சோற்றுப் படலம்,

6, நாற்பது நாள் வரை நிகழ் படலம் என 6 பகுதிகளாக எழுதி வைத்துள்ளேன்.. 

இதில் 3ம் படலத்தை மட்டுமே விருந்து, மாப்பிள்ளையாக்கல், மாலைச் சூடல், ஊர்வலம், நிக்காஹ், தாலிக் கட்டுதல் அதாவது மஹர் கொடை வழங்குதல் என சுருக்கி பதிந்துள்ளேன். 

இன்னும் இதனை தொடர்ந்து ஏராளமான சுவராசியமான நடப்புகள் பல இருக்கின்றன.

அந்நாளில் கல்யாணம் என்றாலே பூமணம்தான் வீசும். கல்யாண நடந்த வீட்டிற்கு ஒருமாதம் கழித்து போனாலும் வீசுகின்ற பூமணத்தைக் கொண்டு தெரியாதவர்கள் கூட இது கல்யாணம் நடந்த வீடு என கண்டு பிடித்து விடுவார்கள். 

அந்த மணங் கமழ்வதால் தானோ தமிழில் திருமணம் என சொல்கிறார்கள் போலும்..நினைக்கும் போதே நெஞ்சமெல்லாம் மணம் பெறுகிறது.

-  கவிஞர் நாகூர் காதர் ஒலி

https://www.facebook.com/photo?fbid=3719388704741884&set=a.1144348608912586


No comments: