Monday, July 27, 2020

/ தொட்டால்_தொடரும் ! #குறுந்தொடர்_3 / அபு ஹாஷிமா

தொட்டால்_தொடரும் ! குறுந்தொடர்_3
அபு ஹாஷிமா




இதை நான் தொடராக எழுத எண்ணவில்லை. என் கருத்தை சொல்லிவைக்கலாம் என்றுதான் ஆரம்பித்தேன். நண்பர்கள் பலர் அதை தொடர் என்று எண்ணி நிறைய எதிர்பார்த்ததால் 2012 ல் இதை
#அதிரை_வலைதளத்தில்
தொடராக எழுதினேன்.
இதில் வெளிநாட்டு வாழ்க்கையை பற்றிய இன்ப துன்பங்கள் எல்லாமே கலந்து வரும்.
கடைசியில் ஒரு புள்ளியில் முடியும்.

வெளிநாட்டில் இருந்தவர்களுக்கும்
இருப்பவர்களுக்கும் இந்தத் தொடர் ஒரு ஆறுதலாகவும் தங்கள் உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவும் இருப்பதால்
தொட்டால் தொடரும் தொடர்கிறது.

வெளிநாடுகளில் உழைப்வர்களின்
பின்னூட்டங்களில் அவர்கள் படும் வேதனையின் உச்சம் தெரிகிறது. வறுமை,வேதனை மற்றும் இக்கட்டுகளில் இருந்து விடுபட முடியாத ஏராளமான இளகிய உள்ளங்கள் வெயில் தேசத்தின் பாலை அடுப்புகளுக்கு விறகாகிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். தங்கள் துன்பங்களை துயரங்களை நம்மில் ஒருவர் பகிர்ந்து கொள்கிறார் என்பதை எண்ணி அவர்களுக்கு ஒரு நெகிழ்ச்சியும் ஆறுதலும் ஏற்படுகிறது. அந்தத் துன்பங்களை அனுபவித்த அனுபவசாலிகளில் நானும் ஒருவன் என்பதால் சகோதரர்களின் இன்ப துன்பங்களை அவர்களோடு பகிர்வதில் எனக்கும் ஒரு ஆறுதல்தான்.


துன்பங்களைக்கூட அதை அனுபவிக்கும்போது அவ்வளவாகத் தெரியாது . சுட்டெரிக்கும் வெயிலில் நடந்துவந்து ஒரு நிழலைத்தேடி அதில் இளைப்பாறும் போதுதான் கடந்துவந்த பாதையும் காலில் உள்ள கொப்புளங்களும் கண்ணுக்குத் தெரியும்.

தொண்டை வறண்டு, விம்மல்களை விழுங்கியே தாகத்தைத் தணித்துக் கொண்ட அந்த வேதனைகளை பெற்றோருக்கும் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லாமல்
தன் நெஞ்சில் வைத்து வெந்து கொண்டிருப்பான் அந்தக் குடும்பத் தலைவன்.

இந்த மனித எரிமலை
குமுறிக் கொண்டிருக்குமேத் தவிற எப்போதுமே வெடிக்காது.

என்னைக் கேட்டால் ....
பத்து மாதம் சுமந்து பெறுகின்ற தாயின் சுமையைவிட பெற்றோர் மனைவி மக்களை வாழ்நாள் முழுவதும் சுமக்கின்றானே ஒரு குடும்பத் தலைவன்....
அவன் சுமை உயர்வானது.
விலை மதிப்பில்லாதது.
எதைக் கொண்டும் எடைபோட முடியாத தியாகத்தின் வடு அது.

அந்த தியாகத்தின் வடுவைத்தான் நீங்கள் சுமந்து கொண்டிருக்கிறீர்கள். அது
#பாரத_ரத்னா அவார்டைவிட
புனிதம் மிக்கது.

வெளிநாட்டு வேலை -
வறுமைக்கும்
வாழ்வுக்கும் இடையே
நடக்கும் சமர் !

களத்தில் நிற்பவனுக்கு
வெற்றி மட்டுமே குறிக்கோளாக
இருக்க முடியும்!

அவன் வீசுகின்ற
ஒவ்வொரு வீச்சும்
வறுமையை வீழ்த்தும்!

அவன் வீட்டுக்கு
வெற்றியைச் சேர்க்கும்!

காதலும் காமமும் இல்லாமல்
வாழ்க்கை இல்லைதான்.
ஆனால் காதலையும் காமத்தையும் இரு கோப்பைகளில் எடுத்து வந்து
"காதலாய் கசிந்துருகி"
இன்ப ரசத்தில் மூழ்கிக் கிடந்தவர்கள் வாழ்ந்ததும் தெரியவில்லை..
வீழ்ந்ததும் தெரியவில்லை.

ஆனால் அவற்றை
#டானிக்கைபோல் பருகிவிட்டு களத்துக்கு ஓடியவர்களின் வாழ்வை வரலாறு சொல்கிறது.

விலைபேச முடியாத தியாகத்தைத்தான் வெளிநாட்டில் வாழும் அன்பு சகோதரர்கள் செய்து வருகிறார்கள். இதன் அருமை இப்போது தெரியாவிட்டாலும் ...

" நான் பெற்ற பிள்ளை என்னைப்போல் கஷ்டப்படாமல் நல்லா இருக்கான்.... படைச்ச ரஹுமானே என் பிள்ளையை மேலும் மேலும் நல்லாக்கி வை..." என்று வாழ்வின் கடைசி நாட்களை நிம்மதியாக வாழ்ந்து உங்களுக்காக துஆ கேட்கிறார்களே....
உங்கள் பெற்றோர்.
அதன் பலன் மறுமையில் தெரியும்.

"எங்க வாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி விட்டாங்க...அவங்க எப்போதும் கண் கலங்காம வாழணும்.." என்று உங்கள் மகனும்

" என் செல்ல வாப்பா.... உங்களுக்கு என்ன வேணும்...." என்று கேட்டு தான் பெற்ற பிள்ளையை உங்கள் மடியில் தவழவிட்டு ...
"இதுதான் அப்பா...(அப்பா என்றால் தாத்தா) ....அப்பாக்கு முத்தம் கொடு..." என்று உங்கள் அன்பு மகளும் உங்களைச் சூழ இருந்து வாழும்போது உங்கள் உழைப்பின் அருமையும் உங்கள் தியாகத்தின் ருசியும் உங்களுக்குத் தெரியும்.

#இன்ஷா_அல்லாஹ்
நாளை தொடர்வேன்..
அபு ஹாஷிமா

* இந்த பதிவுக்கு
#கலாம்_ஷெய்க்_அப்துல்_காதர்
#kalamshaikAbdulkader அவர்கள்
புதன், மே 02, 2012 10:53:00 பிற்பகலில்
இட்டிருந்த பின்னூட்டம் இது ...

//"எங்க வாப்பா எவ்வளவு கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கி விட்டாங்க...அவங்க எப்போதும் கண் கலங்காம வாழணும்.." என்று உங்கள் மகனும் " என் செல்ல வாப்பா.... உங்களுக்கு என்ன வேணும்...." என்று கேட்டு தான் பெற்ற பிள்ளையை உங்கள் மடியில் தவழவிட்டு "இதுதான் அப்பா...(அப்பா - பாட்டா) ....அப்பாக்கு முத்தம் கொடு..." என்று உங்கள் அன்பு மகளும் உங்களைச் சூழ இருந்து வாழும்போது உங்கள் உழைப்பின் உங்கள் தியாகத்தின் "ருசி" உங்களுக்குத் தெரியும்.//
இவ்வரிகள் என் எண்ணங்களை அப்படியே நகலெடுத்துப் பதிவாக்கி விட்டனவா? என்றும் சிறிது கண் கலங்க அழுதும் விட்டேன்! ஆம். என் உள்ளத்தின் உணர்வுகளில் ஓடும் இவ்வரிகளை இக்கட்டுரை ஆசிரியர் எப்படி உணர்ந்தார்?!

கஷ்டப்பட்டு சம்பாத்தித்துச் சேமித்த பணத்தால் கட்டப்பட்ட என் மாளிகையின் ஒவ்வொரு கல்லும் அல்லாஹ் எனக்கு வழங்கிய நிஃமத் மற்றும் என் உழைப்பின் பலனைச் சொல்லும்! ஒவ்வொரு முறையும் அம்மாளிகையின் ஒவ்வொரு இடத்திலும் நின்று யோசிப்பேன்,”இதனைக் கட்டி முடிக்க எவ்வளவு கஷ்டங்களை இந்த மேனி அனுபவித்தது?” என்று! ஆம். அன்று கஷ்டப்பட்டேன்; இன்று சந்தோஷமாக உள்ளொம்; நானும், மனைவி, மகள், மருமகன், பேரன், மகன் என்று எல்லாரும் அம்மாளிகையை அனுபவிக்கும் நேரமெல்லாம், இக்கட்டுரை ஆசிரியரின் இறுதி வரிகள் உணர்வுபூர்வமாய் அனுபவித்து எழுதியுள்ளது போல் அடியேனும் எண்ணிக் கொள்வேன்; அல்ஹம்துலில்லாஹ் ஷுக்கூர்!!

Abu Haashima

No comments: