Saturday, August 1, 2020

தொட்டால்_தொடரும் குறுந்தொடர்_7 / அபு ஹாஷிமா

அபு_ஹாஷிமா


இந்த தொடருக்கு தொட்டால் தொடரும் என்று தலைப்பு வைத்ததே தப்பாகி விட்டதோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஒவ்வொரு அத்தியாயமும் எழுத எழுத 
மனசை விட்டகலாத பல சம்பங்கள் வந்து 
கண்முன்னால் நின்று 
#என்னையும்_எழுது என்று அடம் பிடிக்கின்றன.
அவவைகளை துரத்தி விடவும் முடியவில்லை.
முடிந்தவரை சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன்.
நான் பாம்பே போனது 1978 ல்.
நான் போவதற்கு முன்னாலேயே
எங்கள் கோட்டாறு ஊர் ஆட்கள் 
நிறையபேர் அங்கேபோய் தங்கி இருந்தார்கள்.
#கார்ரோடு
#கோட்டாரோடு என்று சொல்லும் அளவுக்கு இருந்தது.
கார் ரோடில் மட்டும் கோட்டாறு ஆட்கள் 25 பேருக்குக் குறையாமல் இருந்தார்கள்.
ஆரம்பத்தில் நான் ரபீக்பாய் என்ற 
மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த பாயின் வீட்டில் வாடகைக்கு இருந்தேன்.
அவரும் அவர் மனைவியும் கடுகடுத்த முகத்தினர். வாடகை ஒழுங்காக கொடுத்தாலும் எப்போதும் சிடுசிடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
பணத்தாசை அதிகம்.
அதனால் நாலு பேர் கஷ்டப்பட்டு தங்கும் 
இடத்தில் பத்துபேரை அடைத்து வைத்தார்கள்.
மத்தாயின்னு ஒரு மலையாளி பையன் அங்கே தங்கி இருந்தான்.
என்னிடம் நல்ல சினேகம்.
அவன் திடீர் திடீர்னு கடுமையான வயித்து வலியால் துடிப்பான். 
அழக்கூட செய்வான். 
பார்க்க பரிதாபமாக இருக்கும். 
அங்கேதான் நண்பர் மன்னானும் தங்கி இருந்தார். மன்னான் ஜமாலியாவில் ஓதி பட்டம் வாங்கிய ஆலிம்.
என் உறவு என்பதை விட  அண்ணன் தம்பிகள் எங்களுக்கு நெருக்கமான நட்பு.
அண்ணன் ரஹீமுல்லாஹ்வின் மிக நெருக்கமான நண்பர்.
அவர் ரூமில் இருந்தால் கொஞ்சம் தண்ணீர் ஓதிக் கொடுப்பார்.
கொஞ்ச நேரத்தில் சரியாகும்.
அந்த வீட்டின் உள்ளே படுக்க இடம் கிடையாது. நானும் மன்னானும் வெளியே வராண்டாவில்தான் படுப்போம். மீதி இடத்தில் ஒரு ஆள் நடந்து போவது கூட சிரமமாக இருக்கும்.
மன்னான் உறங்கும்போது எப்போதும் 
வினோதமான சத்தங்களை எழுப்பிக் கொண்டே உறங்குவார்.
விடிந்த பிறகு காரணம் கேட்டால் திரு திருவென்று விழிப்பார்.
நானும் ஒருநாள் ஏஜென்டை பார்க்க வெளியே சுத்திவிட்டு வந்து அசந்து போய் தூங்கிக் கொண்டிருந்தேன். நள்ளிரவு கடந்து போன நேரம்.
திடீரென்று என் கழுத்து நெறிபடும் 
வேதனை. மூச்சு விட முடியவில்லை.
தூக்கம் கலைந்து எழுந்து உட்கார்ந்து விட்டேன். யாரோ இரண்டு கைகளாலும் என் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்தார்கள்.
உருவம் கண்ணுக்குத் தென்படவில்லை.
ரொம்ப பிரயத்தனப்பட்டும் அந்த பிடியிலிருந்து என்னால் விடுபட முடியவில்லை. இன்னைக்கு சாவுதான் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.
ரொம்பவே சிரமப்பட்டு ...
வாயைத் திறந்து ...
" அப்துர் ரஹ்மான் சாஹிபப்பா ... " என்று சப்தமிட்டேன்.
ஏன் இப்படி சத்தமிட்டேன் என்று எனக்குத் தெரியாது.
ஆனால் ...
இப்படி சப்தம் எழுப்பிய உடன் 
என் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த 
பிடி விலகி விட்டது. கழுத்தைத் தடவி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
#யார்_அந்த_அப்துர்_ரஹ்மான்_சாஹிப் அப்பா ?
எங்கள் கோட்டாறில் அடங்கப்பட்டுள்ள 
இறைநேசச் செல்வர்.
பாக்தாதிலிருந்து வந்தவர்கள்.
அவர்களின் மீது எனக்கு மிகுந்த அபிமானம் உண்டு.
கழுத்து நெரிபட்ட அந்த நேரத்தில் 
தன்னிச்சையாக என்னையறியாமல் வெளிப்பட்ட பெயர்தான் அவர்களுடையது.
அதன் கூடுதல் ரகசியம் இன்று வரை 
எனக்குத் தெரியாது.
நாம் நேசிக்கின்ற அல்லாஹ்வுக்கு உவப்பான யாராவது ஒருவர்  நம்மை இக்கட்டான நேரங்களில் காப்பாற்றுவார்கள் என்று 
பெரியவர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன்.
அது எல்லாமே அல்லாஹ்வின் நாட்டம்.
அதன்பிறகு எனக்கு உறக்கம் வரவில்லை.
மன்னான் வழக்கம்போல் 
சப்தங்களை இசைத்துக்கொண்டு 
உறங்கிக் கொண்டிருந்தார்.
அதிகாலை நாலு மணிக்கு வெளியே போய் திவாரி சேட்கடையில் சூடாக ஒரு சாயா குடித்து விட்டு வந்தேன்.
காலையில் மன்னானிடம் இரவில் நடந்த சம்பவங்களைக் கூறினேன்.
பொறுமையாக அதைக் கேட்டு விட்டு ...
" நீ இப்படி ஒருநாள் சொல்லுவேன்னு எதிர்பார்த்தேன். அதனாலதான் ரூமில் படுக்காமல் உன்னை வரான்டாவில் படுக்கச் சொன்னேன் " என்றார்.
" ஏன் .. என்னவிஷயம் ?" என்று ஆர்வத்தோடு கேட்டேன்.
" ஒண்ணுமில்லே ... இந்த ரூமில் ரபீக்பாய் குடி வருவதற்கு முன்னால் 
இருந்த குடும்பத்தில் அடிக்கடி கணவன் மனைவிக்கிடையே தகராறு.
ஒருநாள் பொண்டாட்டி கழுத்தை தெரிஞ்சு புருஷன்காரன் கொன்னு போட்டான். அப்புறம் அவனும் செத்து போயிட்டான். வேற ரூம் கிடைக்காம ரபீக்பாய் இங்க குடி வந்திருக்காரு. அவங்களுக்குள்ளேயும் அடிக்கடி சண்டை. இந்த ரூம்ல யாரும் அதிக நாள் தங்குறதில்லே. நானும் வேற ரூமுக்கு போகப் போறேன். இனிமேல் நீயும் இந்த ரூமில் தங்க வேண்டாம். வேறு ரூம் பார்த்துத் தாறேன் "என்று சொன்னார்.
எனக்கு டிராகுலாகிட்ட இருந்து தப்பிச்ச மாதிரி ஒரு ஃபீலிங்.
உடனே ரூம் மாற வேண்டும்  என்று சொன்னேன்.
மன்னான் சொன்னதுபோலவே  அடுத்தத் தெரு பில்டிங்கில் மூன்றாம் மாடியில் ஒரு அறையில் எனக்கு தங்க ஒரு இடம் பிடித்துத் தந்தார்.
அந்த ரூமின் அனுபவ சொந்தக்காரர் 
#மாதவன்_சேட்டன்.
ரெயில்வேயில் வேலை.
திருச்சூர் பக்கம் சொந்த ஊர்.
கொடும் மலையாளம்.
மலையாள நடிகர் பகதூரைப்போல ஒடிசலான தேகம். பகதூரை விட கூடுதலாக ஒரு அடி உயரம்.
நல்ல சினேகமான முகம்.
வாழ்க்கையில் மறக்க முடியாத ஆட்களில் மாதவன் சேட்டனும் ஒருவர்.
மாதவன் சேட்டன் ரூமில் எங்க ஊர் ஆட்கள் இரண்டுபேர் ஏற்கனவே தங்கி இருந்தார்கள் . அதனால் மனசுக்குப் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.
மாதவன் சேட்டன் அறையில் இன்னொரு விஷேசம் ...
அங்கே சாப்பாட்டு வசதியும் இருந்தது.
சேட்டன் வேலைக்குப் போவதற்கு முன்னால் சமையல் எல்லாம் செய்து 
முடித்து விடுவார்.
சோறு , பருப்பு , பப்படம் , ஏதாவது ஒரு கூட்டு வைப்பார்.
காலையில் புட்டு பப்படம்.
மாதத் தவணையில் சேட்டனிடம் சாப்பிடும் வசதி கிடைத்தது.
எங்கள் ஊரைச் சேர்ந்த பலரும் அங்கே சாப்பிட வருவார்கள்.
ஒருவருக்கொருவர் அரேபிய வேலை வாய்ப்பு செய்திகளை பரிமாறிக் கொள்வதுண்டு.
சில நேரங்களில் ரம்மி விளையாடுவோம். மாதவன் சேட்டனும் 
அதில் கலந்து கொள்வார்.
சேட்டனுக்கு ஒரு பொண்ணு.
அதுவும் படித்து நல்ல வேலைக்கு போய் கொண்டிருந்தது.
அதற்கும் பக்கத்து வீட்டு பையனுக்கும் 
லவ். விஷயம் எல்லோருக்கும் தெரியும்.
கல்யாணம் செய்வது உறுதி என்றான பிறகு தாராளமாக எல்லோர் முன்னாலும் இருந்து பேசிக் கொண்டிருப்பார்கள்.
எங்களை அந்நியர்களாக யாரும் நினைப்பதேயில்லை.
அது ஒரு ரம்மியமான குடும்பச் சூழல்.
விநாயகர் சதுர்த்தி வந்தால் நாங்கள் இருந்த தெருவில்தான் பிரம்மாண்ட மேடை போட்டு விழா நடக்கும்.
பத்து நாட்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகத்தான் இருக்கும்.
பக்கத்து பில்டிங்கில் ராமச்சந்திரன் என்பவர் இருந்தார்.
சுவி்ஸ் ஏர்லைன்சில் ஆஃபீசர்.
எங்களோடு நல்ல பரிச்சயம்.
எந்த பந்தாவுமில்லாமல் சாதாரணமாகப் பழகுவார். மாலை நேரங்களில் 
ரெயில்வே காலனி திண்ணையில் எங்களோடமர்ந்து பல திடுக்கிடும் விஷயங்களை சொல்வார். கேட்கவே பிரமிப்பாக இருப்போம்.
அப்படி ஒரு சந்தர்ப்பத்தில்தான் 
ஆன்டனியை சந்தித்தேன்.
#ஆன்டனி
பாஷா படத்தில் வரும் ரகுவரனைப் போன்ற அதே கேரக்டர்.
நிஜ ஆன்டனி .
அவரைப்பற்றி 
இன்ஷா அல்லாஹ் 
நாளை சொல்கிறேன்.
#அபு_ஹாஷிமா



No comments: