Thursday, July 30, 2020

Abu Haashima #தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_6

அபு ஹாஷிமா

அரேபியா
தமிழக முஸ்லிம்களுக்கு
ஒரு வாழ்நாள் கனவு !
அதை நினைவாக்குவதற்காக
அன்றைய முஸ்லிம்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
சொந்த ஊரில் உறவுகளைப் பிரிந்து
செய்து வந்த தொழிலைத் துறந்து
பாஷை தெரியாத பாம்பே நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.
உம்மா கழுத்திலும்
மனைவி கழுத்திலும் கிடந்த தாலிக் கொடிகளையும் விற்று
ஏராளமான பணத்தை அரபு நாட்டு விசாவுக்காகக் கொடுத்துவிட்டு
விமானம் ஏறும் நாளுக்காக காத்திருந்தார்கள்.

அவர்கள் ...
எட்டுக்கு எட்டு அளவுள்ள அறைகளில்
பத்துபேர் தங்கினார்கள்.
படுக்க இடமில்லாதவர்கள்
வராண்டக்களிலும் பாத்ரூம் வாசல்களிலும் படுத்துறங்கினார்கள்.
இதற்காகவே ரெயில்வே குவார்டர்ஸ்கள்
இருந்தன. ரெயில்வேயில் வேலை செய்பவர்கள் தங்களுக்கு ஒதுக்கிய அடுக்குமாடி குடியிருப்புகளின் அழுக்குப் படிந்த சின்ன அறைகளில் கணிசமான பணத்தை பெற்றுக்கொண்டு கள்ளத்தனமாக அரேபியாவுக்கு ஏற்றுமதியாக வந்திருக்கும் குதிரைகளைத் தங்க வைத்தார்கள்.

இவர்கள் ஆங்காங்கே இருக்கும் சின்னச் சின்னக் கடைகளில் சப்பாத்தி பூரியை தின்று ஓரளவு தாக்குப் பிடித்தார்கள்.
கையில் காசு தீர்ந்தவுடன்
வண்டிகளில் விற்கும் பாவு பன்களைத்
தின்று ஒரு சாயாவும் குடித்து பசியை தீர்த்துக் கொண்டார்கள்.
பல நாட்கள் மதிய உணவு இல்லாமல்
பட்டினியோடு வாழ்ந்த அனுபவங்கள்
கொடூரமானவை.
பாம்பே வந்து ஒரு சில மாதங்களில்
அரேபியா போனவர்களும் உண்டு.
பல வருடங்கள் காத்துக் கிடந்து போக முடியாதவர்களும் உண்டு.
பலருக்கு அந்த அரேபியாக் கனவு
கடைசிவரை நினைவாகவேயில்லை.

அப்போதெல்லாம் அமிதாப் பச்சன்,
தர்மேந்திரா, ராஜேஷ்கன்னா போன்ற நடிகர்கள் இந்தி படவுலகின் முன்னணி
கதாநாயகர்கள்.
இவர்கள் நடித்த படங்கள் பாம்பே தியேட்டர்களில் அமர்களமாக ஓடிக்கொண்டிருக்கும்.
பார்ப்பதற்கு ஆசை இருந்தாலும்
பையில் பணமிருக்காது.
அப்போது பாந்த்ராவில் டிரைவ் இன் தியேட்டர் திறந்த நேரம்.
பிரபல நடிகர்கள் நடித்த படங்கள் அங்கே
ஓடும். திரையில் ஓடும் காட்சிகள் ரொம்ப தூரத்தில் நின்றாலும் நன்றாகத் தெரியும். ஒலியில்லாத ஒளிப்படத்தை மட்டும் அடிக்கடி போய் பார்த்து வருவதுண்டு.

அஷிசியா டிராவல்ஸ் என்ற நிறுவனம்
மாஹிமில் செயல்பட்டு வந்தது.
அந்த நிறுவனம் வழியாகத்தான் நான்
சவுதி நேப்கோ கம்பெனிக்கு வேலைக்கு வந்தேன். மாலை நேரங்களில் அந்த டிராவல்சுக்கு வரும் முக்கிய விஐபி
நடிகர் அம்ஜத்கான்.
அங்கே தன்னுடைய நண்பர்களோடு
எந்த பந்தாவுமில்லாமல் கலகலப்பாக பேசிக் கொண்டிருப்பார்.
நான்கூட ஓரிருமுறை அவரோடு பேசி இருக்கிறேன்.
அந்த டிராவல்சுக்கு எதிர்புறம்தான்
மாஹீம் பெரிய பள்ளிவாசல் .
பள்ளிவாசலின் எதிரே சாலையின்
இருபுறமும் நம்முடைய நோன்பு கஞ்சிபோல் பலவிதமான ருசிகளில்
கறிக்கஞ்சி , காய்கறிக்கஞ்சி , கோதம்பு கஞ்சி என்று கஞ்சி வியாபாரம் செய்து கொண்டிருப்பார்கள்.
ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்தான் விலை.
மிக அருமையான சுவையாக இருக்கும்.

பாம்பேயின் மற்றொரு சிறப்பம்சம்
அங்கே ஓடிக் கொண்டிருக்கும் எலக்ட்ரிக் டிரெய்ன்.
சாந்தாகுரூஸ் முதல் சர்ச்கேட் வரை
ஒர்லி முதல் விக்டோரியா டெர்மினஸ்வரை இரு தடங்களில்
24 மணிநேரமும் ஓடிக் கொண்டே இருக்கும்.மந்த்லி பாஸ் எடுத்துக் கொண்டால் எப்போது வேண்டுமானாலும் எங்கே வேண்டுமானாலும் போய் வரலாம்.

அங்கே தங்கியிருந்த நாட்களில்
ஊரைச் சார்ந்த சிலர் அரேபியாவிலிருந்து வருவார்கள்.
அவர்களை வரவேற்க நண்பர்கள் நாங்கள் ஏர்போர்ட் போவதுண்டு.
அவர்களும் எங்களுடனேயே தங்கி இருந்து இரண்டு நாட்கள் கழித்து
ரெயிலில் ஊருக்குப் போவார்கள்.
அவர்கள் வெகேசன் முடிந்து
மறுபடியும் அரேபியா போவதற்காக
பாம்பே வருவார்கள்.
அவர்களை அனுப்பி வைக்கவும்
நாங்கள் ஏர்போர்ட் போவோம்.
அப்போது அவர்களில் சிலர்
#வாய்க்_கொழுப்பெடுத்து பேசும்
சில பேச்சுக்களை கேட்கும்போது
வயிறு எரியும்.
" நீங்க இன்னும் போகலையாடே ...
ஒங்களையெல்லாம் பார்த்தா அரேபியா போக வந்தது மாதிரி தெரியல்லியே " ன்னு ரொம்ப நக்கலா பேசிட்டு போயிருவானுங்க.
மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கும். ராத்திரி தூக்கம் வராது.
கவலையும் கண்ணீருமா இரவு கழியும்.
அப்படி எளக்காரமா பேசிட்டுப்போன ஒருத்தன் அடுத்த மாசமே வேலை இழந்து திரும்பி வந்தான்.
நாங்கள் அவனை திரும்பியும் பார்க்கவில்லை.

அரேபியாவில் அனுபவித்த வேதனைகளை விட அதிகமான வேதனைகளை பாம்பேயில் அனுபவிக்க
நேர்ந்ததால் இந்த அத்தியாயத்தை
அதற்காகவே ஒதுக்கி இருக்கிறேன்.
இந்த அரபு நாட்டு வாழ்க்கையின்
ஆரம்ப வாழ்க்கை பாம்பே வாழ்க்கைதான். இப்போதைய தலைமுறை அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் அதை தொட்டுக் காட்டி இருக்கிறேன்.

இன்னும் ஏராளமான சுவாரஸ்யமான
திகில் நிறைந்த சம்பவங்கள் பாம்பே வாழ்க்கையில் உண்டு.
இனியொரு சந்தர்ப்பத்தில் அவற்றை சொல்ல முயற்சிக்கிறேன்.

#இன்ஷா_அல்லாஹ் ...
இரு தினங்களுக்குப் பிறகு
அடுத்த அத்தியாயம் தொடரும்.


#அபு_ஹாஷிமா






No comments: