Wednesday, July 29, 2020

Abu Haashima #தொட்டால்_தொடரும் ... #குறுந்தொடர்_4

அபு ஹாஷிமா

#எத்தனை_தொல்லைகள்
#என்னென்ன_துன்பங்கள்....

அரபு நாட்டுப் பயணத்தின் ஆரம்ப நாட்களில் மக்கள் இலவசமாகத்தான் அங்கே அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
சிலருக்கு 500 ரூபாய் கொடுத்து அவர்களே பாஸ்போர்ட் டிக்கெட் எல்லாம் எடுத்துக் கொடுத்து அழைத்துப் போனார்கள்.
ஆப்பிரிக்க நாட்டு கறுப்பர்களை
வெள்ளையர்கள் ஆசைகாட்டி கடத்திச் சென்றதுபோல பல இளைஞர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள்.
பெரிய பெரிய கட்டிடங்கள் கட்டுவது,
பாலைவனங்களில் சாலைபோடுவது போன்ற கடினமான பணிகள் அவர்களுக்குத் தரப்பட்டன.

ஊரில் மைனராகத் திரிந்த ஒருவர்
வேறு வழியில்லாமல் துபாய்க்கு போயே ஆக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
ஆபீஸ்பாய் போன்ற இலகுவான வேலைக்குப் போக வேண்டும் என்ற எண்ணத்தில் ரொம்ப பிரயத்தனப்பட்டு
ஒரு ஏஜென்ட் வழியாக துபாய்க்கு புறப்பட்டார். அவர் எதிர்பார்த்தமாதிரியே
இலகுவான வேலை.
பெரிய ஆஸ்பத்திரி ஒன்றில் வார்டுபாய் வேலை. இவரும் சந்தோஷமாக போய் சேர்ந்து விட்டார்.
அடுத்தநாள் அரபியின் டிரைவர் வந்து
இவரையும் இவரோடு வந்த ஆட்களையும் ஒரு வேனில் ஏற்றி வேலைக்கு அழைத்துச் சென்றார்.
சிட்டியைத் தாண்டியதும் பாலைவனத்தில் கனரக வாகனங்களும்
ஆட்களும் கூடி நின்ற இடத்தில் கொண்டு போய் இறக்கி விட்டார்.
இங்கே ஏன் கொண்டு வந்து இறக்கி விட்டான் என்று யோசித்து முடிப்பதற்குள்
சூப்பர்வைசர் ஒருத்தர் வந்து ...
" யாஅல்லாஹ் .... ஹாமி ஹாமி ... "
என்று சொல்லி வேலை செய்யச் சொன்னார்.
நம்ம மைனருக்கு இந்தியும் தெரியாது .
இங்கிலீசும் தெரியாது .
அரபியும் தெரியாது.
ஆஸ்பத்திரி எங்கேன்னு இவரு கேட்க
அங்கே ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்த தமிழர் ஒருத்தர் ...
" தம்பி ... இதான் ஆஸ்பத்திரி . நாமதான்
அதை கட்டணும். வந்து கடப்பாறையைப் போடு " ன்னு சொல்ல மைனர் ஒரே நாளில் பஞ்சராகி நூலாகி நொந்து போனார்.
" நான் ஊருக்குப் போறேன் " என்று
அழுது அடம் பிடித்த பிறகும் ஒன்றும் நடக்கவில்லை.
இரண்டு வருடம் கசக்கிப் பிழிந்த பிறகுதான் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஊரில் சுகமாக மூன்று வேளை சாப்பிட்டு , வேலை செய்தும் செய்யாமலும் வாழ்ந்தவர்களுக்கு அரபு நாட்டு வெயிலும் உணவும் வேலையும் இடுப்பை முறித்து விட்டன.
நண்பர் ஒருவர் சொன்ன வார்த்தை,"உம்மாட்டே குடிச்ச பாலு பூரா வெளியே வந்துட்டுது" இன்னும்
காதில் ஒலிக்கிறது.

பாவேந்தர் பாரரதிதாசன் பாடியதுபோல ....

"சித்திரச் சோலைகளே
உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே முன்பு எத்தனைத் தோழர்கள்
ரத்தம் சொரிந்தனரோ
உங்கள் வேரினிலே...." என்பது துபையின்
#புஜைரா_சாலைகளையும் #அபுதாபியின்_வானுயர்ந்த #கட்டிடங்களையும்
#அல்_அய்னின்
#பச்சை_மலைகளையும் பார்க்கும்போது புரிகிறது.

1980 க்குப் பிறகு பணம் கொடுத்துப் அரேபியாவுக்குப் போகும் நிலை ஏற்பட்டது. ஆரம்பத்தில் ரெண்டாயிரம் ரூபாயில் ஆரம்பித்து போகப்போக பல ஆயிரங்களைக் கடந்து லட்சங்களைத் தொட்டது "அரபு நாட்டு விசா ரேட்".

1960 லிருந்து 80 , 85 வரை சென்றவர்கள் பெரும்பாலும் லேபர்கள்தான்.
முக்கியமாக முஸ்லிம்கள்.
சம்பளம் 500 அல்லது 600 சவுதி ரியால்கள். ஊருக்கு 1000 ரூபாய் அனுப்ப வேண்டுமானால் கிட்டத்தட்ட 465 ரியாலாவது கொடுக்க வேண்டும். பலபேர் 500 ரூபாய்தான் அனுப்புவார்கள்.
அதுபோக சாப்பாடு செலவு , சிகரெட் , வீடியோவில் தமிழ் சினிமா பார்க்கக் கட்டணம் , இதர செலவுகள் என்று பல இருந்தன. வீட்டுக்கு அனுப்பும் 500 ரூபாய் அப்போது பெரிய தொகை. அதில்கூட சில இல்லத்தரசிகள் மிச்சம் பிடித்தார்கள்.

அன்று பத்து ரூபாய்க்கு வாங்கிய ஒரு பெரிய மீனின் இன்றைய விலை குறைந்தது 500 ரூபாய்.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 55 ரூபாய்.(1977 இல்).
இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய்: 4700 /-

அன்று அனுப்பிய ஐநூறு ரூபாயை வைத்து இன்று ஒரு நாளைக்குக் கூட மீன் வாங்க முடியாது.
அன்று ஒரு பஸ் கண்டக்டரின் சம்பளம் 300 ரூபாய்.
வாத்தியாருக்கு ஐநூறு.
போலிசுக்கு முன்னூறு.
இதுதான் அரசு வருமானத்தின் அளவு.

ஆனால் படிக்காத ஒரு பாமரனின் வருமானம் ஆயிரம் ரெண்டாயிரம் என்பது சமுதாயத்தில் பிரமிப்பை உண்டாக்கியது.
இன்னொரு விசேசம்...
ஹவ்ஸ் பாய் ஆபீஸ் பாய் வேலைக்குப் போன சிலர் பார்ட் டைமாக வெளியே வேலைப் பார்த்து கூடுதலாகச் சம்பாதித்தார்கள்.
அவர்கள் மூவாயிரம் நாலாயிரம் என்று வீட்டுக்கு பணம் அனுப்பி வைத்து சொத்துக்கள் வாங்கினார்கள்.
அன்று ஒரு சென்ட் விலை ஆயிரம் ரூபாய்.
இன்று ஒரு சென்ட் விலை பத்து லட்ச ரூபாய்.
பத்தாயிரம் ரூபாய் இருந்தால் ஊரிலுள்ள தெருவில் ஒரு வீடு வாங்கலாம். வாங்கினார்கள்.
இன்று அதே வீடு முப்பது லட்சத்துக்கு மேல். இது பொய்யில்லை......
சத்தியம் ...சத்தியம்.

"படிக்காதவன், வெவரமில்லாதவன் அரேபியாவிலே போயி சம்பாதிச்சு வயலு வீடு தோப்பு வாங்குறான்.
நாம முன்னூறு சம்பளத்துலே ஒன்றுமே வாங்க முடியாது"ன்னு தாலுகா ஆப்பீசிலும் கலெக்டர் ஆபீசிலும் வேலைப் பார்த்தவர்கள் கொதித்துப் போனார்கள். அப்புறம்தான் படித்தவர்களின் படையெடுப்பு அரேபியாவை நோக்கி நகர்ந்தது.
அரசு வேலையை துறந்தார்கள்.
மனைவி மக்களைப் பிரிந்தார்கள். ஊரைவிட்டுப் புறப்பட்டார்கள்.
மனசு முழுதும் "யா நப்சீ....யா நப்சீ..." என்பதுபோல் "பணம்....பணம்..." என்று அடித்துக் கொண்டது. விமானத்தில் பறக்கும்போதே "வயலும் வாழ்வும்" ஓட ஆரம்பித்தது. அரபு மண்ணில் காலை வைத்ததும் அந்த வெயிலும் சூடும் அவர்களை சுட்டது. அவர்கள் எதிர்பார்த்த வேலையும் சம்பளமும் கிடைக்கவில்லை. சிலர் ஓரிரு மாதத்தில் ஊருக்குத் திரும்பினார்கள்.
சிலர் தாக்குப் பிடித்தார்கள்.
அதுவரை சமுதாயம் ஓரளவுக்கு சமநிலையாகத்தான் இருந்தது.
அதன் பிறகு படிப்புக்குத் தகுந்த வேலை, அதிக சம்பளம் இவற்றை குறி வைத்து படித்தவர்களின் படையெடுப்பு நிகழ்ந்தது. அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச ஆரம்பித்தது. சமுதாயம் பணம் சம்பாதிக்கும் வழியை கண்டு கொண்டது.

இருபது வயது முடிந்த பிறகும் ஒருவன் ஊரில் நின்றால் அவனுக்கு மரியாதை இல்லை என்ற நிலை வந்தபிறகு ஊரில் இளைஞர் கூட்டமே குறைந்து போய்விட்டது.

அப்போதெல்லாம் செல்போன் வசதி என்ன.... டெலிபோன் வசதியே கிடையாது. பத்து வருஷம் சௌதியில் வேலை பார்த்த பலர் ஒருநாள்கூட மனைவியிடம் போனில் பேசியது கிடையாது.
கடிதம்தான்.
ஒரு கடிதம் அனுப்பி மறு கடிதம் வர ஒரு மாதம் முதல் ஒன்றரை மாதம் வரை கூட ஆகும்.

இப்போதுபோல் மனைவி மக்களின் முகத்தையோ அவர்களின் பேச்சையோ அன்றைய "தியாகிகள்" பார்த்ததுமில்லை.
கேட்டதுமில்லை.
ஆனாலும் அவர்கள் துன்பங்களைஎல்லாம் இன்பங்களாக எண்ணி உழைத்தார்கள்.
கப்பலுக்குப் போன மச்சானைத் தேடி வீட்டின் கரையில் மனைவி காத்திருந்தாள்.
பிள்ளையின் முகம் பார்க்க பெற்றவர்கள் காத்திருந்தார்கள் .
அப்புறம் ... ?

#இன்ஷா_அல்லாஹ்
#நாளை_சொல்கிறேன்.







No comments: