Monday, August 3, 2020

தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_11 / Abu Haashima




ஒரு வழியாக அரேபியா வந்து வேலையிலும் சேர்ந்து விட்டேன்.
உடலையும் உள்ளத்தையும்
அரித்துக் கொண்டிருந்த பெரிய கவலை
ஒன்று காணாமல் போயிருந்தது.
அரேபியாக் கனவு கனவாகவே
ஆகி விடுமோ ...
ஒருவேளை அரேபியாபோக முடியாத நிலை ஏற்பட்டால் ....

எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஊருக்குப் போவது ?
வீட்டிலுள்ளவர்கள் குறிப்பாக மனைவி
எவ்வளவு ஏமாற்றத்துக்கும் துக்கத்துக்கும் ஆளாவார் என்பன போன்ற எலும்பை உருக்கும் வருத்தங்கள் மறைந்து போயிருந்தன.

நாமளும் அரேபியா வந்து விட்டோம்
என்பதை எண்ணிப் பார்க்கவே சந்தோஷமாக இருந்தது.
அந்த சந்தோஷத்தை வாப்பா உம்மாவிடமோ மனைவியிடமோ
மனம் விட்டுச் சொல்ல முடியாத
தவிப்பில் மனம் பரிதவித்துக் கொண்டே
இருந்தது. யாரிடமாவது விசாரித்து
போஸ்ட் ஆபீசைக் கண்டு பிடித்து
ஒரு கடிதம் எழுதிப் போடலாம் என்று
தீர்மானித்துக் கொண்டேன்.
எதிர்பார்த்ததைவிட நல்ல கம்பெனியும்
நிறைய தமிழர்கள் அங்கே வேலை பார்த்ததும் மனசுக்குத் தெம்பாக இருந்தது.

* போன அத்தியாயத்தில் ஒரு செய்தியைச் சொல்ல மறந்து விட்டேன்.
அது ...
நாங்கள் வந்தவுடன் டிரைவர் அலீ எங்களை ரூமில் கொண்டு வந்து விட்டு
விட்டு சென்று விட்டார்.
எங்களுக்கோ சரியான பசி.
எங்கே போய் சாப்பிடுவது என்று தெரியவில்லை.
யாரோ ஒருவர் கீழே கடை இருக்கிறது.
ஏதாவது வாங்கிச் சாப்பிடலாம் என்றார்.
கையில் பணம்இருந்த தெம்பில் கடைக்குப்போய் என்ன வாங்குவது என்று தெரியாமல் முழித்தோம்.
அங்கே ஒரு இந்திக்காரன் வேலைக்கு இருந்தான்.
அவன் ஒரு பாக்கெட் குபுசும் சில முட்டைகளும் சில அத்தியாவசிய பொருட்களும் தந்து முட்டையை ஆம்லெட் போட்டு குபுசோடு சேர்த்து சாப்பிடு என்றான் .
தண்ணி சூடாக்கவே தெரியாதவனுக்கு
ஆம்லெட் போடத் தெரியுமா ?

வாழ்க்கையில் முதன் முறையாக
அப்போதுதான் குபுசையே பாரக்கிறோம்.
ஒருவழியாக அடுப்பை பற்ற வைத்து
புதுச்சட்டியில் எண்ணெய் ஊற்றி
நாலஞ்சு முட்டையை உடைத்து ஊற்றி
மகா கண்றாவியான சகிக்க முடியாத ஆம்லெட் என்ற பெயரில் எதையோ ஒன்றை போட்டு ஒரு குபுசை
நான் தின்று முடித்தேன்.
இதுதான் சவுதியில் நான் உண்ட
முதல் ஆகாரம்.
நண்பர்களும் அவ்வாறே தின்று முடித்தார்கள்.

மாலையில் முதல் ஷிப்ட் வேலை முடிந்து
வந்த பக்கத்து ரூம் நண்பர்கள் பலரும்
தஞ்சை மாவட்டத்துக்காரர்கள்.
அவர்கள் எங்களை அன்போடு அரவணைத்து அன்றைய இரவில்
எங்களுக்கு விருந்தளித்தார்கள்.
ஆடுதுறை பஷீர்
சிராஜுதீன்
அலி அக்பர் போன்ற நண்பர்களை மறக்க முடியாது.

முதல்நாள் கம்பெனியை சுற்றிக்காட்டி விட்டு எங்களை அனுப்பி விடுவார்கள் என்று பள்ளிக்கூட பிள்ளைகளைப்போல
நாங்களும் நம்பி ஏமாந்தோம்.
முதல்நாளே வேலையைத் தந்து விட்டார்கள்.
சாப்பாடும் இல்லை.
அப்போதும் இந்த நண்பர்கள்தான் தங்கள் உணவை எங்களோடு பகிர்ந்துண்டார்கள்.

மறுநாள் வியாழக்கிழமை.
அரைநாள்தான் வேலை.
வெள்ளி விடுமுறை நாள்.
மக்களுக்கெல்லாம் ஏகப்பட்ட சந்தோஷம்.
அந்த வியாழனும் வெள்ளியும்
எங்களுக்கு நண்பர்கள் பலர் விருந்தளித்து உபசரித்தார்கள்.
அவர்கள் வாங்கி வைத்திருந்த டிவி விசிஆரில் இரண்டு தமிழ் படங்களைப் போட்டுக் காட்டி எங்களை சகஜ நிலைக்கு கொண்டு வந்தார்கள்.
டிவி , வி.சி.ஆர். இதெல்லாம்
எங்களுக்கு அபூர்வமான பொருட்கள்.
முதன் முதலில் நாம் விரும்பிய படங்களை டிவியில் பார்க்க முடியும் என்பதை நம்பவே முடியாமல் நம்பினோம்.
" அது ஒரு பொன்மாலைப் பொழுது ..." ன்னு டிவியில் பாடல் காட்சி வந்தபோது
பாம்பேயில் அலைந்து திரிந்த காட்சிகள்
மனத் திரையில் வந்து போயிற்று.

எங்கள் பில்டிங்கை தொட்டு இருந்தது
பெரிய பள்ளிவாசல்.
அடுத்த நாள் அங்கே ஜும்மாத் தொழுகை .

நபிகள் ( ஸல் ) அவர்கள் வாழ்ந்த
அந்த அரபு நாட்டு மண்ணில்
#முதல்_ஜும்மா .
மனசு கொள்ளாத மகிழ்ச்சி.
இமாம் அரபியில் பயான் செய்ய
பாஷை புரியாவிட்டாலும்
ஏதோ ஒரு உலகத்தில் சஞ்சாரிப்பது போன்ற மனநிலையில் அதை உன்னிப்பாக கேட்டுக் கொண்டிருந்தேன்.
அந்த அரபி உச்சரிப்பும் தொழுகையில் ஓதிய சூராக்களும் என்னை மக்கா மதினாவுக்கே அழைத்துச் சென்று விட்டன.
அதுவும் 1400 ஆண்டுகளுக்கு முந்திய
அரபு நாட்டுக்கு.
ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு
உடல் உள்ளம் உயிர் மூன்றும்
ஒன்று கலந்து இறையைத் தொழுதேன்.
உருவமில்லா அந்த ஏகனுக்கு
நன்றியைச் சொன்னேன்.

மறுநாள் சனிக் கிழமை.
வேலைக்குப் போகும் காய்ச்சலோடு
படுத்தால் படுக்கையும் முள்ளாய் குத்தியது.
உறவுகளை நினைத்து ஏக்கம் வந்து தூக்கத்தைத் தொலைக்க உருண்டு புரண்டு எழுந்து டைனிங் ஹாலுக்கு வந்தேன்.
அங்கே ....
எனக்கு முன்னால் மூன்றுபேர் வந்து உட்கார்ந்திருந்தார்கள்.
எல்லாம் சேம் பிளட்.

பதிவில் தொடரும் இந்தக் கவிதை
2005 ல் எழுதியது .
இந்த அத்தியாயத்திற்கு இது பொருத்தம் என்பதால் இதையும் இத்துடன் இணைக்கிறேன்.

#உடலெங்கும்_ஊரும்_கம்பளிப்_பூச்சிகள் ... !

விடிந்தால் சனிக்கிழமை
வாரத்தின் முதல் நாள் !
உடலெங்கும்
கம்பளிப் பூச்சிகள்
ஊர்வது போன்ற அவஸ்தையில்
உறக்கம் தொலையும் இரவு !

விழித்துக் கொண்டே விடியும்
விடிகாலை வேளை ....
ஏக்கம் நிறைந்த கண்களோடும்
துக்கம் கனத்த இதயத்தோடும்
ஆரம்பமாகும் !

காலை உணவு
வெறும் சாயாதான் !

அடித்துப் பிடித்து ஏறி
"ஏஸி " பஸ்ஸில் பயணித்தாலும்
மனதில் மட்டும்
குறையவே குறையாத சூடு !

வேலை செய்யும் வேளையிலும்
உறவுகளைத் தேடி
தளையறுத்து ஓடும்
மனக் குதிரை !

பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்த
வாலிபத்தின்
வசீகர நாட்கள்
வசந்த நினைவுகளாய் வந்து
நெஞ்சில் முட்டும் !

வேதனையின் விம்மல்களோடு
வேலை முடியும்போது
வானத்தின் ஓரத்திலும்
அடிமனத்தின் ஆழத்திலும்
உற்பத்தியாகும் இருட்டு !

விரக்தியை வளர்க்கும் விடியல்கள்
துயரம் தொடரும் இரவுகள் !

* * * * * *

இன்று வியாழக்கிழமை !
விடியும்போதே
தொலைந்துபோன ஆட்டுக் குட்டியாய்
காணாமல் போன சந்தோசம்
ஓடோடி வந்து
உற்சாகமாய் ஒட்டிக் கொள்ளும் !

ஆறுநாள் இம்சைகள்
நண்பகலோடு
நகர்ந்து போகும் !

அரைநாள் வேலை முடிந்தால்
அப்பொழுதே
பெருநாள்தான் !

வியாழனும் வெள்ளியும்
ஆசீர்வதிக்கப்பட்ட நாட்கள் !

விடிய விடியத் தொடரும்
அர்த்தமே இல்லாத
அரட்டை அரங்கம் !

மதியம் வரை நீளும்
தூக்கத்தின் நீளம் !

நெய்ச்சோறும்
ஆட்டுக்கறியும்
உண்ட களைப்பில்
மாலை வரை அடித்துப்போடும்
ஆனந்த மயக்கம் !

அரபு நாட்டு விடுமுறை நாளின்
மாலை நேரம்
நண்பர்கள்
கடை வீதி
கலகலப்பு என
மாயத்தோற்றம் காட்டும் !

உணர்சிகளை ஊனமாக்கிவிட்டு
உடல்கள் தேடும்
ஊமை சுகங்கள்
படுக்கையில் புரளும்
பாதி ராத்திரி வரையில் !

பார்க்கப் பார்க்க சலிக்காத
உம்மாவின்
கனிந்த முகமும்
கட்டிய மனைவியின்
கண்ணீரில் நனைந்த
கடைசி நேர முத்தமும்
தோள் சுமந்த
சின்னக் குழந்தையின்
தாள முடியாத
பாசக் கதறலும்
ஆழிப்பேரலையாய்
இதயத்தில் எழுந்து
அணு அணுவாய்
உயிரைக் கொல்லும் !

எதைக் கொண்டும்
குளிர்விக்க முடியாத
பிரிவுத் துயரின் வெம்மை
எரிமலையாய் குமுறிக் குமுறி
நெஞ்சை விட்டும் வெளியேறி
கண்ணீராய் கசியும் !

விடிந்தால் சனிக்கிழமை
வாரத்தின் முதல்நாள் ......

* விடுமுறை இருந்தும்
ஊருக்கு வர முடியாமல்
வெளிநாடுகளில்
பணியாற்றும்
என் அன்பு சொந்தங்கள்
நட்புகள் மற்றும்
உழைப்பாளிகள் அனைவருக்கும்
என் இதயம் நிறைந்த
#தியாகத்_திருநாள்_வாழ்த்துக்கள் !

இன்ஷா அல்லாஹ்
அடுத்த அத்தியாயம்
பெருநாள் விடுமுறை முடிந்து
ஞாயிறன்று தொடரும்.



No comments: