சென்னை: தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதில் இருப்பதையும் இழக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அதில், அருந்ததியருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.
தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு என நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என, உச்சநீதிமன்றத்தில் 1994ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை கடக்க வேண்டும் எனில், தேவையான புள்ளி விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அதை ஆணையம் ஆராய்ந்து இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தேவைப்படும் 400 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டுப் பெறலாம் என, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்தில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுத்தால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பிரச்சனையில் அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு, உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை இதில் அவசரம் காட்டினால், பிரச்சனை திசை திரும்பி இருப்பதையும் இழந்துவிடக் கூடாது எனவே அனைவரும், இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/201007299636/reservation-tamilnadu-lose-ramadass-karunanithi
No comments:
Post a Comment