S.A. மன்சூர் அலி M.A.,B.Ed.,
ஸஹீஹுல் புகாரி எனும் நபி மொழி நூலிலிருந்து ஒரே ஒரு ஹதீஸை எடுத்து ஆய்வோம் - இங்கே:
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றெhரு குழுவில் உம்மு சலமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்.
ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு சலமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர்.
அவ்வாறே உம்மு சலமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள்.
அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.
உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள்.
பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா(ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்க அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ குஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷா(ரலி)வின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.
நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி - மூன்றாம் பாகம் - ஹதீஸ் எண்: 2581)
என்ன அற்புதமான காட்சிகள் - நபியவர்களின் குடும்பத்தில்!
பெண்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கொப்ப அவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவும் - இந்த ஒரு நபி மொழியில் இருந்தே நாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
பாடங்களுக்குச் செல்வோமா?
1. குழுவாக செயல்படுவது பெண்களின் இயல்பு! (தனி ஆவர்த்தனம் வாசிப்பது எல்லாம் ஆண்கள் தாம்!) குடும்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் - அதன் பின்னணியில் "பெண்கள் குழு" ஒன்று இருந்திட அதிக வாய்ப்பு உள்ளது.
அதைக் கேள், இதைக் கேட்டு வாங்கு - என்று மாமியாரைச் சுற்றி - மகள், அக்கா, தங்கை - போன்ற உறவினர் கூட்டம் ஒன்று போட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பதனால் தான் வரதட்சனைப் பிரச்னைகள்.
2. பெண்கள் நம்மிடம் என்ன செய்தி கொண்டு வந்தாலும் - ஆண்கள் - அதனை சீர்தூக்கிப் பார்த்தே முடிவு செய்திட வேண்டும். கொண்டு வரப் படும் செய்தியில் நேர்மை இல்லை எனில் - ஆண்கள் உறுதியாக மறுத்து விட வேண்டும். நபியவர்களைப் போல! "நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள்" என்ற குற்றச்சாட்டில் என்ன நியாயம் உள்ளது? ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு நாளை ஒதுக்கியது நபியவர்களின் நீதியை உணர்த்திடவில்லையா? அதில் ஏதும் குறை வைத்தார்களா நபியவர்கள்?
3. உம்மு சலமா அவர்களிடம் நபியவர்களின் மனைவியர் "அவர்கள் உனக்கு பதில் தரும் வரை நீ அவர்களிடம் இது குறித்துப் பேசிக் கொண்டே இரு" என்று கூறினார்கள் என்பதைக் கவனியுங்கள். உம்மு சலமாவைத் தொடர்ந்து அன்னை ஃபாத்திமா அவர்களை அணுகுகின்றார்கள். தொடர்ந்து ஸைனபையும் அனுப்பி வைக்கிறார்கள்! தங்களுக்குச் சாதகம் ஏற்படும் வரை - தொடர்ந்து - முயற்சி செய்து கொண்டே இருப்பது - பெண்களின் கை வந்த கலை.
4. பெண்களிடம் - மறுத்துப் பேசுவதை விட மவுனத்துக்கு வலிமை அதிகம். இரண்டு தடவை மவுனம் காக்கிறார்கள் நபியவர்கள். இதுவும் சுன்னத் ஆகி விடுகிறது நமக்கு.
5. பெண்களிடம் பேசும்போது நமது பேச்சோ அல்லது மறுப்போ - சுருக்கமாக நறுக்கென்று அமைந்திட வேண்டும். வள வள என்று பேசி - அது ஒரு விவாதமாக மாறிட நாம் அனுமதிக்கக்கூடாது.
6. பெண்களை - இது போன்ற "நச்சரிப்பு" வேலைகளில் இருந்து காக்கக் கூடியது - இறையச்சம் ஒன்று மட்டுமே. உம்மு சலமா அவர்கள் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்களே- அது தான் பாராட்டப் பட வேண்டும்.
7. முகத்தில் தெரிகின்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதிலும், அந்த உணர்ச்சிகளை சொற்களால் விவரித்துக் காட்டுவதிலும் பெண்களே ஆண்களை விட சிறந்தவர்கள். எவ்வளவு அழகாக ஹதீஸை விவரிக்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்! நபியவர்களின் முகக் குறிப்பை எவ்வளவு துல்லியமாகவும் விரைவாகவும் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
8. ஒன்றை கவனித்தீர்களா? எல்லாவற்றையும் விலா வாரியாக விவரித்த அன்னையவர்கள் - ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்கள் நபியவர்களைக் கடுமையாக என்ன பேசினார்கள் என்பதையோ, தம்மைத் திட்டியதையோ, இறுதியில் அவர்களை எப்படி வாயடைக்கச் செய்தார்கள் என்பதையோ - விவரிக்காமல் விட்டு விட்டார்கள் - பார்த்தீர்களா? இப்படித் தான் பெண்கள் "வடிகட்டிப் பேசிடத்" பழகிக் கொள்ள வேண்டும்! வடிகட்டிப் பேசினாலே பல பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம்.
9. இந்த ஹதீஸிலே வருகின்ற சம்பவம் போன்று நம் வாழ்வில் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆண்களாகிய நாம் எப்படி நடந்து கொண்டிருப்போம்? வீட்டில் ரகளை ஒன்றை நடத்தி முடித்து விடுவோம். இதற்குக் காரணம் ஆண்களின் ஈகோ தான்! இந்த ஒட்டு மொத்த சம்பவத்திலும் - நபியவர்களின் மவுனத்தையும் ஒரே ஒரு கருத்தையும் மட்டுமே இங்கே நாம் காண்கிறோம். தம்மிடம் கடுமையாகப் பேசும் மனைவிக்கு எதிராகக் கூட அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை!
10. பெண்களின் தன்மைகளை ஆண்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தால் - கணவன் - மனைவி சண்டைகள் வெகுவாகக் குறைந்து விடும் குடும்பங்களில்.
11. ஒரு உணர்ச்சிகரமான சூழலில் நமது குடும்பம். கடுமையான வாக்குவாதம். ஆளுக்கு ஆள் பேசுகின்றார்கள். சப்தம் உயர்ந்து கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையை உங்களால் மாற்றிட முடியுமா? உணர்ச்சிகள் தணிந்து - குடும்பத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படிக் கொண்டு வருவீர்கள்? நபியவர்களிடமே கற்றுக் கொள்வோம். என்ன செய்கிறார்கள்?
அன்னை ஆயிஷா அவர்கள் ஸைனப் அவர்களை வாயடைக்கச் செய்தவுடன் நபியவர்கள் "இவர் உண்மையிலேயே அபூ பக்ரின் மகள் தான்" என்று நகைச் சுவையாக ஒரு போடு போடுகின்றார்கள். அவ்வளவு தான். சூழ்நிலை மாறி விடுகிறது! உணர்ச்சித் திறன் (Emotional Wisdom) உள்ளவர்களால் தான் இது சாத்தியப் படும்.
12. இறுதியாக - இன்னொரு பாடமும் இங்கே நாம் படித்துக் கொள்வோம். கணவனும் மனைவியும் ஒரே போர்வையில் தூங்குவது தான் அது! அதாவது இதுவும் ஒரு சுன்னத் எனபதை மறந்து விட வேண்டாம்.
(அல்லாஹு தஆலா - நபியவர்களின் மனைவியர் - நமது அன்னையர் - அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! அவர்களைக் குறித்த நமது எழுத்துக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!)
நன்றி ;http://counselormansoor.com/index.php?option=com_content&view=article&id=92:1---&catid=15:home&Itemid=20
No comments:
Post a Comment