Friday, July 23, 2010

மனம் மகிழுங்கள்-7

நூருத்தீன்

நமது சுயபிம்பத்தின் வடிவத்தை நாம் அறிவது எப்படி? நமது மதிப்பை உணர்வது எப்படி?

சுயபிம்பத்தின் வடிவத்தை அறிவது ரொம்பவும் ஈஸிங்க. சுற்றுமுற்றும் பார்த்தாலே போதும். நமது நண்பர்கள் தெரிவார்கள். அவர்களுள் நாம் தெரிவோம். நமக்குத் தெரிந்த பழமொழி தான், “உன் நண்பனைச் சொல்; நீ யாரென்று சொல்கிறேன்.”

இயற்கையாகவே நாம் சில குறிப்பிட்ட வகை  மனிதர்களோடு அன்னியோன்யமாய் உறவாட ஆரம்பித்திருப்போம். அவர்கள் யார்? நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அப்படி நம்மை நடத்துபவர்கள்!

பெரிசுகள் சொல்வார்களே, “அதான்யா! இனம் இனத்தோட சேரும், பணம் பணத்தோட சேரும்.”

கொஞ்சம் இலக்கியத்தரமாய்ச் சொன்னால் "சேரிடம் அறிந்துசேர்!"

தரமான வடிவுடைய சுயபிம்பவாதிகள், தாங்கள் சிறப்பான முறையில் நடத்தப்பட வேண்டும் என்று விரும்புவார்கள். அது கர்வமில்லை; நாகரீகமாய், கௌரவமாய் நடத்தப்பட வேண்டும் எனும் நியாயமான விருப்பம். அவர்கள் தங்களைத் தாங்களே தரமானவர்களாய்க் கருதுவதால், தங்களைச் சுற்றித் தரமான பிம்பத்தை உருவாக்கிக் கொள்வார்கள். அது தரமான மக்களை அவர்களுக்கு நண்பர்களாய் உருவாக்கித் தந்துவிடும்.

அதை விட்டு, “நான் பூட்ட கேஸு! எந்த மேட்டரை நான் உருப்படியா செஞ்சிருக்கேன். நமக்கு அறிவே அம்புட்டுதேங்” என்று நினைத்தால் அத்தகைய செயல்பாடுகள் தான் உங்களிடமிருந்து வெளிப்படும். அதற்கேற்பத்தான் உங்களைச் சுற்றி மக்கள் அமைவார்கள்; அதற்கேற்பவே உங்களையும் நடத்த ஆரம்பிப்பார்கள்.

இது சுயபச்சாதாபம்!

இத்தகைய சுயபச்சாதாபம் எத்தனை நாள் நீடிக்கும்? எத்தனை நாள் வரை நீங்கள் மாறாமல் இருக்கிறீர்களோ அத்தனை நாள் வரை! மாற்றம் தொடங்க வேண்டியது உங்களிடமிருந்து தான். சட்டசபையில் யாரும் தீர்மானம் போட்டு வந்து உங்களை மாற்றப் போவதில்லை.

தம்மைக் கண்ணியமாய்க் கருதுபவர்கள், கண்ணியமாகவே நடந்து கொள்வார்கள். கண்ணியவான்களுடனே நட்புப் பாராட்டுவார்கள். அவர்களும் இவர்களைக் கண்ணியமாகவே நடத்துவார்கள்.

பான்பராக் பாஸ்கருக்கு, சல்பேட்டா சங்கருடன் தான் அன்னியோன்யம் ஏற்படுகிறது. தொழிலதிபருக்கு மந்திரியுடன்! வேண்டுமானால் பாஸ்கரும் சங்கரும் கூட மந்திரிக்கு நெருங்கியவராய் இருக்கலாம். ஆனால் அது வேறு சமாச்சாரம். மந்திரியின் அண்டர் க்ரவுண்ட் சமாச்சாரம்.

நாம் புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், ”நம்மைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நம்மைச் சுற்றியுள்ள மக்கள் வட்டம்.” உங்கள் சுயபிம்பம் 'க்வாலிட்டி'யானது என்றால் உங்களது நட்பு வட்டமும் 'க்வாலிட்டி' தான்.

உளவியலாளர்கள் ஒரு கருத்துச் சொல்கிறார்கள், "பெண்களின் சுய பிம்பத்தின் தரம் குறைவு."

எப்படி?

உருப்படாதவனையோ, குடிகாரனையோ அவர்கள் கணவனாய் அடையும் போதும் அடித்து உதைக்கும்  புண்ணியவானைப் புருஷனாய் அடையும் போதும் “கல்லானாலும் கணவன், புல்லானும் புருஷன்” என்று அவர்கள் அடங்கிக் கிடப்பதற்கு அதுதான் காரணம் என்கிறார்கள். கலாச்சாரம், மண்ணின் மகிமை,  பெண்ணின் பெருமை என்பதெல்லாம் அதற்கு நாம் மாட்டும் போலி முகமூடிகள் எனலாம்.

இத்தகைய பெண்கள் “எல்லாம் என் விதி!” என்று சுயபச்சாதாபத்தில் கிடப்பவர்கள். இவர்கள்  தங்கள் சுய பிம்பத்தை மாற்றிக் கொள்ளும் வரை அவர்கள் வாழ்க்கை மாறப் போவதில்லை. அப்படி மாறும் போது அவர்கள் வாழ்விலும்  மாற்றம் நிகழும். புருஷன் திருந்தலாம்! அல்லது புருஷனேகூட மாறலாம்!

இதெல்லாம் சுய பிம்பத்தின் வடிவம். ஆச்சா?

அடுத்து சுய மதிப்பின் தரத்தைப் பார்ப்போம்.

நம் அனைவருக்கும் மதிப்பு தேவைப்படுகிறது. அன்பு, அக்கறை தேவைப்படுகிறது. பிறர் நம்மை  மரியாதையோடு நடத்தவேண்டும் என்று மனம் எதிர்பார்க்கிறது. ஏன்?

அது தான் மனதின் இயற்கை வடிவம்!

நமக்கு மதிப்புக் கிடைக்க ஏதும் சிறப்புத் தகுதியோ, பெரும் பதவியோ நமக்கு இருக்க வேண்டிய அவசியமல்லை. அது பிறப்புரிமை போல் அன்பு, அக்கறை சமவிகிதத்தில் கலந்து அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்கிறார்கள். எப்படி?

பிறந்து சில மாதங்களே ஆன கைக் குழந்தை பசியால் அழும்போது தாய் என்ன செய்வார்? ஓடோடிப்போய்த் தாய்ப்பாலோ, புட்டிப் பாலோ புகட்டுவார். அந்தக் குழந்தைக்குத் தேவை பால். அது புகட்டப்பட வேண்டும். அவ்வளவே!

அதற்குமுன் குழந்தையின் முன் சப்பனமிட்டு அமர்ந்து, “இதோ பார் குட்டி! நான் பால் தரவேண்டுமென்றால் நீ சமர்த்தாக இருக்கோனும். கண்ட நேரத்தில் சூச்சா, மூச்சா போகக்கூடாது. ஏபிசிடி சரியாச் சொல்லோனும். அப்பத்தான் கான்வெண்டில் ஈஸியா இடம் கிடைக்கும்,” என்று கோரிக்கை வைத்துக் கொண்டிருப்பாரோ? அந்தச் சிசுவின் வயிற்றுக்குப் பாலும் நிபந்தனையற்ற அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவை. இது அடிப்படையாய் அனைவருக்கும் புரிகிறது; செய்கிறார்கள்.

அதேபோல்தான் வளர்ச்சியடைந்த ஒவ்வொரு மனிதனுக்கும் அன்பும் பாசமும் அரவணைப்பும் தேவைப்படுகின்றன.

பெரும்பாலோர் என்ன நினைத்துக் கொள்கிறார்கள்? “நாம் சமர்த்தாகவும் புத்திசாலியாகவும் அழகாகவும் சாதாரண மக்களுக்குப் புரியாத வகையில் பேசக் கூடிய அறிவு ஜீவியாகவும் இருந்தால் தான் இதற்கெல்லாம் லாயக்கு; இல்லையெனில் நாம் ஒரு செல்லாக் காசு! நாம் மதிப்பற்றவர்கள்!”

அது தப்பு! அந்த நினைப்பு ரொம்பத் தப்பு!

ஒவ்வொருவரும் அவரவர் மதிப்பை நல்ல விதமாகவே உணர வேண்டும். அதே போல் பிறருடைய மதிப்பையும் நல்லவிதமாகவே கருதி அன்பு செலுத்த வேண்டும்.

“நீங்கள் சந்திக்கக் கூடிய நான்கில் மூன்று பேர், உங்களிடமிருந்து பரிவிரக்கம் வேண்டி ஏங்குகிறார்கள். நீங்கள் அதை அவர்களுக்குக் கொடுங்கள் அவர்கள் உங்களிடம் அன்பு கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்” என்கிறார் டேல் கர்னெகி (Dale Carnegie).

அதைச் சற்று மாற்றி நம் ஊரில் “கட்டிப்புடி வைத்தியம்“ என்கிறார்கள்.

ஆனால், ப்ளஸ் டூவில் கோட்டை விட்டுவிட்டு, ஆண்டாண்டு காலமாய்ச் சும்மா ஊர் சுற்றித் திரிந்து கொண்டு, “வீட்டில் இன்னமும் அம்மா நிலா காட்டிச் சோறு ஊட்ட வேண்டும்” என்று நினைத்தால் அது சுய மதிப்பினால் அல்ல? அப்பாவிடம் அதற்கு வேறு அழகான பட்டப் பெயர் உண்டு.

இயற்கையாகவே நம் எல்லோருக்கும் பிறர் மேல் அன்பு, அபிமானம், அக்கறை உண்டு. ஒவ்வொருவருக்கும் அந்த அளவின் விகிதாச்சாரம் மாறும்.

இந்த டிவி சீரியல்கள் இருக்கின்றனவே? அவை என்ன செய்கின்றன? மக்களுடைய 'அந்த' அடிப்படைக் குணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருக்கின்றன. பிழியப் பிழிய அழும் சோகக் காட்சிகள்; கண்ணீர் வடிய வடியப் பார்க்கும் தாய்க் குலங்கள். என்ன காரணம்? அந்த நிழல் பிம்பங்களின் மேல் ஏற்படும் அன்பு, அக்கறை, பாசம். அந்த நிழல் பிம்பங்களின் தியாகமும் சோகமும் இன்னலும் மக்களின் ஆழ்மனதை அப்படியே ஈர்க்கின்றன. “அய்யோ! பாவம்”, என்று அடிமனதிலிருந்து அக்கறை பீறிட்டு எழுகிறது, கண்ணீர் முட்டுகிறது.
அந்தக் கண்ணீரின் அளவைப் பொறுத்து தொடரின் 'டிஆர்பி' எகிறி, வேறொருவர் பாக்கெட்டில் பணமாய்க் கொட்டுவது தனிக் கதை.

உலகின் ஏதோவொரு மூலையில் பஞ்சம், இயற்கை சீற்றத்தினால் அழிவு, அதனால் நிர்க்கதியான மக்கள்…….  எனச்செய்தித்தாளில் படிக்கும் போதும் தொலைக்காட்சியில் காணும் போதும் மனம் பதைத்து உள்ளே வலிக்கிறதே ஏன்? அடிப்படையில் எல்லோருக்கும் உதவ, அனைவரையும் அரவணைக்க மனம் விரும்புகிறது. அவரவர் வாய்ப்பு வசதிக்கேற்ப உதவியானது பொருளாகவோ பணமாகவோ ஆறுதல் வார்த்தைகளாகவோ வெளிப்படுகிறது.

ஆச்சரியமில்லை.

அதுதான் அடிப்படை மனித இயல்பு.

விஷயம் யாதெனில் அப்படி நீங்கள் பிறரிடம் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்துவதைப் போல் பிறர் உங்களிடமும் மதிப்பு, அன்பு, அக்கறை செலுத்த நீங்களும் ஒரு தகுதியான மனிதனே! இதற்கென நாலைந்து பக்க பயோடேட்டாவும் சிறப்புத் தகுதிகளும் தேவையில்லை. அவையெல்லாம் வேலைக்கு அப்ளை செய்ய மட்டுமே!

இந்த அகண்ட பிரபஞ்சத்தில் நீங்கள் ஒரு தரமான மனிதர். அது போதும். சக மனிதர்களிடமிருந்து அன்பும் பாசமும் பெற அது போதுமானதாகும். அது தான் உங்களது அடிப்படை மதிப்பு.

மற்றபடி உங்களுக்கு இலவசமாய்க் கிடைக்கும் டி.வி., முட்டை, பல்பொடி, செருப்பு ஆகியன வந்தடைவது வேறு மதிப்பினால். அதை இத்துடன் குழப்பிக் கொள்ள வேண்டாம்.
னம் மகிழ, தொடருவோம்...

No comments: