Thursday, July 29, 2010

ஜன்னலோரத்தில் காகம்.......!

மாலை நேரம்...ஆதவன் தன் வான் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க நிலவைத் தேடிக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து தன் பேரன், பேத்தியின் வருகைக்காக கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரின் முகத்தில் காலம் தன் கோடுகளை அழகாக வரைந்திருந்தது.  70 வயதின் முதிர்ச்சியை வெளிக்காட்டும் தனது வெளுத்த வெண் தாடியை வருடிக்கொண்டிருந்த அவரின் முகத்தை, ஜன்னல் அருகே வந்தமர்ந்த காகம் தன் தலையை சாய்த்துப் பார்த்தது. ஏதோ மனதில் பளிச்சென்று ஞாபகம் வர, புன்னகை பூத்தார் பெரியவர்.

வெளியில் கார் வந்து நிற்கும் "க்ரீச்" சத்தம்.  உயர்பட்டம் பெற்று அதிகாரியாக நல்ல அலுவலில் உள்ள அவர் மகன் அவரின் பேரனையும் பேத்தியையும் காரிலிருந்து இறக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.
"அலுவலகத்திலிருந்து வரும் வழியிலேயே பசங்களை கூட்டிட்டு வந்துட்டேன் 'ப்பா", என்றவாறு டையை கழட்டியபடியே அருகில் வந்து அமர்ந்தான்.
பெரியவர் கேட்டார்: "ஏம்பா இந்த ஜன்னல்ல இருக்கே, இது என்ன?"
ஜன்னலின் வெளியே பார்வையை செலுத்திய மகன், நாடி தளர்ந்துவிட்ட தன் முதிர்தந்தையை கேள்விக்குறியோடு பார்த்துச் சொன்னான், "இது காகம்!"
சில நிமிடங்கள் கழிந்தவுடன் தந்தை கையைக் காட்டி மீண்டும் மகனிடம் கேட்டார், "என்ன இது?"
மகன் கூறினான், "அப்பா, நான் இப்போதுதானே கூறினேன், இது காகம் என்று!"
சிறிது நேரம் கழிந்தபிறகு மறுபடியும் தந்தை மகன் பக்கம் திரும்பி கேட்டார், "ஏம்ப்பா இது என்ன?"
ஒரு வித்தியாசமான ஜந்துவைப் பார்ப்பதுபோல் தனது தந்தையைப் பார்த்த மகன், தனது குரலை உயர்த்தினான் எரிச்சலுடன். "இது காகமப்பா, காகம், காகம்!"
 

மீண்டும் சற்றுநேரம் கழிந்தபின் அமைதியாக தந்தை மகனிடம் கேட்டார் நான்காம் முறையாக, "இது என்ன?".
தனது இருக்கையை விட்டு சடாரென்று எழுந்த மகன் உரத்த குரலில், "கேட்ட கேள்வியையே திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறீர்களே? இது காகம் என்று எத்தனை முறை சொல்வது?. உங்களுக்கு மண்டையில் ஏறவில்லையா? அல்லது காது முற்றிலும் பழுதாகிவிட்டதா?" என்று கத்திவிட்டு வெடுக்கென்று எழுந்து உள்ளறைக்கு சென்றான்.


மனம் வெதும்பிப் போய் மெதுவாகத் தன் இருக்கையை விட்டு மெதுவாக எழுந்த பெரியவர், அருகில் உள்ள அவரது அறைக்குள் நடந்து சென்று தனது சிறிய இரும்புப் பெட்டியை திறந்து, பழுப்பு நிறமாகி மிகவும் பழையதாகிப் போயிருந்த அவரது டைரியை எடுத்து நடுங்கிய விரல்களால் திறந்து படிக்க ஆரம்பித்தார்.
கோபம் தணியாமல் அவர் அறைக்குள் நுழைந்த மகன், தந்தை கையில் டைரியுடன் நிற்பதை பார்த்து அருகில் சென்றான். அவர் கையில் இருந்த டைரியின் திறந்திருந்த பக்கத்தை புருவத்தை உயர்த்தியவாறு எட்டி வாசிக்கத் தொடங்கினான்.
இன்று: மூன்று வயதான என் சின்னஞ்சிறு மகன் என் மடியில் அமர்ந்து ஜன்னலோரம் வந்தமர்ந்த காகத்தை வியப்புடன் பார்த்தான். ஆச்சரியம் மேலிட்ட அந்த அழகிய கண்களை நான் ரசித்து ஆனந்தப்பட்டேன். அந்த சில நிமிடங்களுக்குள்ளாகவே 23 தடவை என்மகன் என்னிடம் "தன் எதிரில் உள்ளது என்ன?" என்று கேட்டான். நானும் 23 தடவை பொறுமையாக அது காகம் என்று சொன்னேன். இறுதியில் என் செல்லமகன் முகத்தில் தெரிந்த திருப்தி கலந்த சந்தோஷத்தைப் பார்த்து அவனை ஆரத்தழுவி முத்தமிட்டேன். அவன் மழலைக் குரலில் அத்தனை முறை என்னிடம் கேட்டும் எனக்கு சிறிதும் சலிப்பு ஏற்படவில்லை. மாறாக கேட்க கேட்க அன்பு அதிகரித்துக்கொண்டே போனது.
தான் சிறுவயதில் தந்தையிடம் இதே கேள்வியை 23 தடவைகள் என்ன இது என்று கேட்டும் எரிச்சலடையாமல் 23 தடவையும் பொறுமையாக பதில் கூறி தன்னை சந்தோஷப்படுத்தி அதில் ஆனந்தம் அடைந்தமும் அடைந்த தந்தையிடம், அவர் நான்கு முறை ஒரே கேள்வியை கேட்டுவிட்டார் என்ற காரணத்திற்காக எடுத்தெறிந்து பேசியதை எண்ணி வெட்கி தலைகுனிந்தான் மகன்.
"அது காக்காடா செல்லம்", மனைவி வாண்டு மகளிடம் சொல்லிக்கொண்டிருப்பது சன்னமாக அவன் காதில் கேட்டது.
---------------------------------
சிந்தனை:

பெற்றோர்கள் முதிர்ந்த வயதை அடையும்போது பாலகர்களுக்கு உரிய நிலையை அடைகிறார்கள் என்று உளவியல் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அறியாமையினாலும் தலைமுறை இடவெளியினாலும் அவர்கள் செய்யும் சில செயல்களை விமர்சித்து, அவமதித்து அவர்களை ஒரு சுமையாகக் கருதுவதோ அவர்களிடம் எரிச்சல் அடைந்து நடப்பதோ எவ்விதத்தில் நியாயம்?
அவர்கள் இன்று இருக்கும் நிலையை விட மிகவும் மோசமான நிலையில், நம் உடலின் இயற்கை உபாதைகள் வெளியாவதைக் கூட நாம் அறியாதிருக்கும் அறிவற்ற பருவத்தில், நம்மிடம் எவ்வளவு கனிவுடனும் அன்புடனும் நடந்து கொண்டனர்? நமக்காக பெற்றோர் பசி, தூக்கம், தேவைகளை புறந்தள்ளிவிட்டு, நம்முடைய தேவைகளுக்கு முதலிடம் கொடுத்தனர். எவ்வளவு இன்னல், இடற்பாடுகளை சுமந்து இன்று சமூகம் மதிக்கும் நன்மதிப்பு பெற்ற நிலைக்கு நம்மை கொண்டு வந்தனர் என்பதை அடிக்கடி இல்லை என்றாலும் சில சமயங்களிலாவது சிந்தித்துப் பார்த்தல் அவசியம்.
ஒவ்வொருவம் தனது சிறு பருவத்தில் தன் பெற்றோர் தன்னை அரவணைத்து வளர்த்ததை மனதில் கொண்டு, அவர்களின் செயல்பாடுகளை கண்டு சினந்து கொள்ளாமல் இன்முகத்துடன் ஆறுதல் தரும் அழகிய வார்த்தைகளை அவர்களிடம் பேச வேண்டும். தன்மையாகவும், அவர்களுக்குக் கீழ்படிந்தும் நடக்க வேண்டும்.
http://www.satyamargam.com/507

"என்னுடைய பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதையே நான் விரும்புகின்றேன். அவர்கள் மனம் புண்படும்படியான சொல்லையோ செயலையோ என் வாழ்நாளில் செய்ய மாட்டேன்" என்று உறுதிபூண்டு அதன் படி நடக்க முயற்சிப்போம்.
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான் அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக. மேலும், "என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்த போது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக!" என்று கூறிப் பிரார்த்திப்பீராக! (அல் குர் ஆன் 17:23-24)

மொழியாக்கம்: அபூ ஸாலிஹா
http://www.satyamargam.com/507

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

இனிய சிந்தனையோடு
அழகிய கதை வீடியோவும்!
பகிர்வுக்கு நன்றி!