Wednesday, July 21, 2010

99 சதவீத இந்தியக் கல்லூரிகள் அடிப்படை வசதியற்றவை: உச்ச நீதிமன்றம்!


 
இந்தியாவில் உள்ள கல்லூரிகளில் 99 சதவீதம் கல்லூரிகள் அடிப்படை வசதிகள் அற்றவை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முறையாக அங்கீகாரம் பெறாத கல்லூரிகளின் விளம்பரங்களை நம்பி ஏமாந்தவர்களுக்கு அந்தக் கல்லூரி நிர்வாகம் பெரிய அளவிலான இழப்பீடு தரவேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பொய்யான விளம்பரங்கள் மூலம் மாணவர்களை ஏமாற்றம் கல்வி நிலையங்கள் ஒவ்வொரு மாணவனுக்கு தலா 2 இலட்சம் ரூபாய் இழப்பீட்டை ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், இந்த ஏமாற்றம் இரயில் விபத்துகளைப் போன்றதே. இரயில் விபத்து ஏற்பட்டால் அரசு இழப்பீடு தருகிறது. இங்கு, மாணவர்கள் வேலை விபத்தைச் சந்திக்கின்றனர். இத்தகைய ஏமாற்றம் கல்வி நிலையங்கள் மீது இழப்பீடு தண்டனை போன்றவை வழங்கினால் மட்டுமே மோசடிகளைத் தவிர்க்க முடியம் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் தாங்கள் பயின்ற கல்லூரிகள் முறையாக அனுமதி பெறாதவை அறிந்து அவற்றுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் விசாரணையின் போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கங்குலி, ஜி.எஸ். சிங்வி ஆகியோர் அடங்கிய அமர்வ மேற்கண்ட கருத்தைக் கூறியுள்ளது.

முறையாக அனுமதி பெறாத கல்லூரிகள் சட்டத்துக்குப் புறம்பாக மாணவர்களைச் சேர்க்கும் கல்லூரிகள் மீது ஆசிரியப் பயிற்சிக்கான தேசியக் குழு (NCTE) கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாக அக்குழுவின்  செயலாளர் ஹசீப் அகமது கூறினார். இதனைக்கேட்ட நீதிபதிகள், அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைச் செய்யாத எந்தக் கல்லூரிக்கும் NCTE அனுமதி அளிக்கவில்லை என்பதற்கான அபிடவிட்டை வியாழக்கிழமையன்று தாக்கல் செய்யுமாறு கூறினர்.

இந்தியாவில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 99 சதவீதம் கல்லூரிகள் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் இல்லாதவை. மாணவர்களின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படாமல் அவர்களிடம் இருந்து பணத்தைப் பெறும் வணிகக் கடைகளைப் போன்றே செயல்படுகின்றன என்றும் நீதிபதிகள் கூறினர்.

கடந்த 10 ஆண்டுகளில் NCTE நாடு முழுவதும் 1200 கல்லூரிகளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கல்லூரிகளையும் நேரில் சென்று ஆய்வு செய்யப்பட்டதா என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளாதீர். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் அரசியல் கட்சியின் தொண்டர்கள் ஆசிரியப் பணிகளுக்குச் சேர்க்கப்பட்டது போன்று, இந்தியாவிலும் நடைபெறுகிறது. தேர்தலுக்குச் சில நாள்களுக்கு முன்னர் பல ஆயிரம் ஆசிரியப் பணியிடங்களை நிரப்பி அவற்றை தேர்தல் விளம்பரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இது மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதைத் தவிர வேறொன்றும் இல்லை என்றும் அமர்வு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

No comments: