Thursday, September 24, 2020

#தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_16 அபு ஹாஷிமா

 #தொட்டால்_தொடரும்

               #குறுந்தொடர்_16

                   அபு ஹாஷிமா










இதுதான் வேலை என்று முடிவான பிறகு மனதில் இருந்த தயக்கமும்  மயக்கமும் விலகி விட்டன .பேக்டரி ஹவுஸ் கீப்பர் வேலையை பொறுப்புடன் செய்ய ஆரம்பித்தேன்.முதல் இரண்டு வாரங்கள் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டதுபோல் இருந்தது. சீனியர் ஆப்பரேட்டர்களின் அலம்பலும் தொல்லையும் கொஞ்சம் டென்சனையும் கோபத்தையும் தந்தாலும் அவற்றை சமாளிப்பதற்கான வழிகளையும் கண்டு கொண்டேன் .

பாக்டரி மனேஜரும் ஜெனரல் மேனேஜரும் வரும்போது

பாக்டரி சுத்தமாக இருக்க வேண்டும். இல்லைஎன்றால் அவர்கள் சூப்பர்வைசரிடம் கடுப்படிப்பார்கள். சூபர்வைசர் என்னிடம் சூடாவான்.

காலையில் ஒரு மணி நேரம் கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட்டால்

எந்த பிரச்சினையும் இல்லை. அதன்பிறகு கட்டிங் மெஷினில் வரும் பிளாஸ்டிக் வேஸ்டுகளை ரீசைக்ளிங் செக்‌ஷனில் கொண்டு சேர்க்க வேண்டும் .பிளாஸ்டிக் ரோல்களைச் சுற்றி வரும் பேப்பர்களை பேப்பர் வேஸ்ட் மெஷினில் கொண்டு போட வேண்டும். அவற்றை பண்டல்களாக்கி வெளியே தள்ள அங்கே ஒரு ஆப்பரேட்டரும் ஒரு ஹெல்ப்பரும் உண்டு.

கொசுறு ...

இந்த பேப்பர் பண்டல்களை பாகிஸ்தான் நிறுவனம் ஒன்று சேகரித்து கப்பலில் 

பாகிஸ்தானுக்கு கொண்டு சென்று 

அவற்றை கூழாக்கி பேப்பர் தயாரிக்கிறது. செய்தி பேப்பர்களும் 

அட்டைப் பெட்டிகளும் இதிலிருந்து தயாராகின்றன.

என்னுடைய வேலை ஹவுஸ்கீப்பர் என்றாலும் ஒருமணி நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் வேறு வேறு வேலைதான். அதன் சூட்சுமங்களை நன்றாகத் தெரிந்து கொண்ட பிறகு 

சர்வ சுதந்திரமாக செயல்பட ஆரம்பித்தேன். ஒவ்வொரு மெஷின் ஆப்பரேட்டர்களிடம் இரண்டு பெரிய பெரிய டிராஷ் பேக்குகளைக் கொடுத்து ஒன்றில் பிளாஸ்டிக் கட்டிங் வேஸ்டுகளையும் மற்றொன்றில் பேப்பர் வேஸ்டுகளையும் போட வைத்தேன். அவர்கள் வேலை செய்யும் மெஷின்  ஏரியாவை அவர்களையும் சுத்தம் செய்ய வைத்தேன். ஆரம்பத்தில் ஆய் ஊய் என்றார்கள். ஐடியா நன்றாக இருந்ததால் சூப்பர்வைசரும் அதை ஏற்றுக் கொண்டான். அப்படிச் செய்ததால் பாதிவேலை எனக்கு எளிதாயிற்று.

செக்‌ஷனில் அஷ்ரப் என்றொரு மலையாளி போர்க்லிப்ட் ஆப்பரேடர் இருந்தான். அவன் எனக்கு போர்க்லிப்ட் ஆப்பரேட் செய்வதை கற்றுக் கொடுத்தான். இரண்டே வாரத்தில் 

பேக்டரிக்குள் போர்க்லிப்டில் வலம்வர ஆரம்பித்தேன்.

காலையில் ஓரிரு மணி நேரத்தைதைத் தவிர மற்ற நேரங்களில் நான் எனக்கு இஷ்டப்பட்ட வேலைகளை செய்தேன்.

பாக்டரி முழுவதும் சுற்றி வருவேன். கபேடேரியாவில் போய் உட்கார்ந்து சாயாவும் சிகரெட்டும் குடித்துவிட்டு ஆசுவாசமாக வருவேன். யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள்.

செக்சனில் தயாராகி இருக்கும் புரடொக்சனை போர்க்லிப்டில் எடுத்து

கோடவ்னுக்கு கொண்டுபோய் வைப்பதும் மெஷின்களுக்குத் தேவையான பிளாஸ்டிக் ரோல்களை அந்ததந்த மெஷின்களுக்கு கொண்டு வந்து கொடுப்பதும் நான் விரும்பிச் செய்த வேலைகள்.

ஆப்பரேடர் யாராவது அவசரக் கடமைகளை முடிக்க போக வேண்டியது

இருந்தால் அவர்களின் மெஷினை

நான்  ரன் பண்ணுவதும் உண்டு.

இவை தவிற ஷிப்ட் முடியும் நேரத்தில் 

பல ஆப்பரேட்டர்களுக்கு புரடக்‌ஷன் ரிப்போர்ட் எழுதித் தருவதும் நான்தான்.

மாலை மூன்றரை மணிக்கு முதல் ஷிப்ட் முடிவதற்கு முன்னால் லேசாக பாக்டரியை சுத்தம் செய்து விட்டு கிளம்பி விடுவேன்.

ஒரு மாதத்திற்குப் பிறகு ... 

இந்த வேலையைச் செய்யவா

தயங்கினோம் என்று ஆச்சரியப்பட்டு என்னை நானே நொந்து கொண்டதும் உண்டு.

ஏனென்றால் ... 

ஒரு மெஷினில் வேலை செய்யும் ஆப்பரேட்டருக்கு அந்த மெஷினைத் தவிர வேறு மெஷினில் வேலை செய்யத் தெரியாது. போர்க்லிப்ட் ஆப்பரேட் பண்ணத் தெரியாது.

மெஷின் மெக்கானிசம் தெரியாது.

பாக்டரியின் மற்ற பிரிவுகளான பேப்பர் பேக் , சிமென்ட் பைகள் ,  டிஷ்யு தயாரிப்புப் பிரிவுகள் எப்படி இருக்கின்றன என்பதோ  அங்கு நடக்கும் தயாரிப்புகள் எப்படி என்பது பற்றியோ தெரியாது. 

முக்கியமாக எட்டு மணி நேரமும் அவர்கள் வேலை செய்யும் மெஷின் அருகிலேயே நின்று வேலை செய்ய வேண்டும். தங்கள் புரொடக்சன் குறையாமல் இருப்பதற்காக 

கடுமையாக வேலை செய்தே ஆக வேண்டும். குறைந்தால் மேனேஜரிடம் இருந்து கேள்விக் கணைகள் வரும்.

இன்கிரிமென்ட் சம்பந்தமான பிரச்சினைகள் வரும். அதனால் 

பயந்து பயந்து வேலை செய்வார்கள்.

இதில் எந்த பயமும் இல்லாமல் எந்த நெருக்கடியும் இல்லாமல் நான் இயங்கிக் கொண்டிருந்தேன். விஷயம் தெரிந்த சிலருக்கு என்மீது பொறாமையாகக் கூட இருந்தது. எட்டு மணி நேர வேலையை ஹாயாக செய்துவிட்டு ரூமுக்கு வந்து

குளித்து முடித்து நண்பர்களோடு டென்ஷனில்லாமல்  கலகலப்பாக இருந்தேன்.

சமையல் எல்லாம் நாங்களே செய்வதற்கு பழகிக் கொண்டோம்.

நாங்கள் நாலைந்துபேர் பார்ட்னர்கள்.

ஆளுக்கொருநாள் சமையல் செய்வோம்.

நான் மீன் , கோழி போன்றவை சாப்பிடமாட்டேன் என்பதால் எனக்குத் தேவையான காய்கறிகளை நானே 

சமைத்துக் கொள்வேன்.

மஜீத்பாய் என்றொரு அருமையான மனிதர் எங்களோடு இருந்தார்.

என்னிடம் அளவு கடந்த பாசம்  உள்ளவர்.

தஞ்சை மாவட்டத்தின் கொடிக்கால்பாளையம் சொந்த ஊர் என்ற ஞாபகம். வெத்திலை விவசாயம் செய்து வந்தவர் அரேபியாவுக்கு வந்து 

எங்கள் பேக்டரியில் மெயின்டனன்ஸ் 

செக்‌ஷனில் வேலை பார்த்தார்.

அவர் ஒரு அருமையான குழம்பு வைப்பார்.கத்தரிக்காய் , முருங்கைக்காய் என்று 

சில காய்கறிகளைப் போட்டு புளிக்குழம்பு வைப்பார்.

அந்தக் குழம்புக்காகவே நாலு புடிச் சோறு கூடுதலாகச் சாப்பிடலாம்.

அத்தனை ருசியாக இருக்கும்.

சாப்பிட்டு முடித்த பிறகு "நல்லா  இருந்துச்சா பாய் " என்று கேட்பார்.

நான் .. 

" பாய் குழம்பு கொள்ளாம் " என்பேன்.

சந்தோஷப்படுவார்.

அதன் பிறகு பாய் இன்னைக்கு என்ன குழம்பு என்று கேட்டால் 

#கொள்ளாம்குழம்பு  என்று சொல்வார்.

நான் நன்றாக இருந்தது என்ற அர்த்தத்தில் கொள்ளாம் என்று சொன்னதை அவர் அந்தக் குழம்பின் பெயரே கொள்ளாம் குழம்பு என்று நான் 

சொன்னதாக நினைத்து விட்டார்.

வாழ்க்கையில் மறக்க முடியாத நல்ல மனிதர்களில்  ஒருவர் மஜீத்பாய்.

என்னோடு வந்த சில நண்பர்கள் பாக்டரி வேலை முடிந்ததும்வெளியே பார்ட் டைம் வேலை பார்த்து கூடுதலாக சம்பாதித்தார்கள்.என்னையும் அப்படி ஒரு வேலை பார்க்கச் சொன்னார்கள்.

எங்கள் கோட்டாறைச் சேர்ந்த என் நண்பன்ஷாகுல் ஹமீத் தமாமில் இருந்தான்.அவனது ஏற்பாட்டில் நானும் ஒரு அரபியின் வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன்.வாரத்தில் நான்கு நாட்கள் மட்டும் வேலை. அதுவும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டும்.

வீட்டை சுத்தம் செய்வது ,

துணிகளை தேய்த்துக் கொடுப்பது போன்ற எளிய வேலைகள்தான். 

மாதம் நானூறு ரியால் சம்பளம்.

கம்பெனியில் 665 ரியால் இங்கே நானூறு. ஆயிரம் ரியாலுக்கு அதிகமாக மாத வருமானம் கிடைத்தது.

1980 ல் அது ஒரு நிறைவான வருமானம்.

இப்போதுள்ள செலவுகளைப்போல் அப்போது அதிக செலவு எதுவும் கிடையாது. அதனால் வீட்டிற்கு ஓரளவுக்கு கணிசமாக பணம் அனுப்ப முடிந்தது.

நான் வேலை பார்த்த வீட்டின் அரபிக்கு அறுபது வயதாவது இருக்கும்.

அவரது மனைவிக்கும்கூட அந்த வயதுதான்.

அவர்களுக்கு மூன்று மகன்கள் இரண்டு பெண்கள். பெரியவர் எதோ ஒரு கம்பெனியில் பார்ட்னராக இருந்தார்.

தம்மாம் சிட்டியில்  ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் மேனேஜராகவும் வேலை பார்த்தார்.மகன்களும் வேலை பார்த்தார்கள். மூத்த பெண் டீச்சர். இளைய பெண் படித்துக் கொண்டிருந்தாள்.எல்லோருமே என்னிடம் அன்பாக நடந்து கொண்டார்கள்.

வீட்டு தலைவி நான் வேலை முடிந்து புறப்படும்போது பை நிறைய

ஆப்பிள் , ஆரஞ்சு , வாழைப்பழங்களைப் போட்டு என்னிடம் தந்து அனுப்புவார்.

நோன்பு நேரத்தில் அரபி பெரியவர் அவரது பக்கத்தில் என்னை அமர வைத்து நோன்பு திறக்கச் சொல்வார்.

ரொம்ப நெகிழ்ச்சியாக இருக்கும். வேலைக்காரன் முதலாளி என்ற பாகுபாடே அவர்கள் காட்டியதில்லை.

எல்லோரும் நல்ல படித்தவர்கள்.

நாகரீகமானவர்கள். அழகான ஆங்கிலத்தில் உரையாடக் கூடியவர்கள்.

நான் பழகிப் பார்த்த ஒரு சில அரபிகளிடமிருந்துநேர் மாற்றமானவர்களாக இருந்தார்கள் இவர்கள்.

வேலை முடிந்து செல்லும்போது கொஞ்சம் இருட்டி விட்டால் இளைய பையன் காலித் என்னை காரில் கொண்டு வந்து என்னுடைய இடத்தில் இறக்கி விட்டுச் செல்வான்.

இவர்களைத் தவிற வேறு அரபிகளிடம் 

அதிகமான தொடர்பில்லை.

கம்பெனியில் சுமுகமான முறையில் 

வேலை தொடர்ந்து கொண்டிருந்தது .

இரண்டு மாதங்களுக்குப் பிறகு 

பேக்டரியில் வேலை செய்பவர்கள் அத்தனை பேருடைய சுய விவரக் குறிப்புகளையும் கம்பெனி சேகரிக்க ஆரம்பித்தது.

ஆங்கிலத்தில் பிரின்ட் செய்யப்பட்ட பெரிய படிவங்களை நான்தான் எங்கள் செக்‌ஷனில் எல்லோரிடமும் கொடுத்து 

பூர்த்தி செய்து தரும்படி சொன்னேன்.

இரண்டு மூன்று நாட்களான பிறகும் 

யாரும் படிவங்களை பூர்த்தி செய்து தரவில்லை .

என்ன காரணம் ?

சுவாரஸ்யமான அந்தத் தகவலை 

ஓரிரு நாட்களில் கண்டிப்பாக சொல்லி விடுகிறேன்....

இன்ஷா அல்லாஹ் !

#சவுதி_தேசிய_தினம் 

இன்று சவுதி அரேபியாவின் 89 வது 

தேசிய தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

அரேபியாவின் வரலாறு அற்புதமானது.

ஏற்கனவே நிறைய எழுதி இருக்கிறேன்.

ஆதம் நபியவர்களும் ஹவ்வா பிராட்டியார் அவர்களும் 

சொர்க்கத்திலிருந்து பூமியில் இறக்கப்பட்ட பின்னர் அவர்கள் முதன் முதலில் ஒன்று சேர்ந்த இடம் ஜித்தா என்றோ அரஃபா என்றோ சொல்லப்படுகிறது.

ஆதம் நபியால் இறைவனை வணங்க எழுப்பப்பட்டதுதான் கஃபா ஆலயம்.

காலம்தோறும் அது புதுப்பிக்கப்பட்டு 

வந்திருக்கிறது.

1400 வருடங்களுக்கு முன்னால் 

அகிலத்தின் அருட்கொடையாக அண்ணல் நபி ( ஸல் ) அவர்கள் வந்தபிறகு ...

மாநிலத்தின் மார்பிடமாய் 

மக்க நகர் மாறியது.

உலகெங்கும் இஸ்லாத்தின் நறுமணத்தை சுவாசக்காற்றாய் வழங்கியது.

காலங்கள் ஓடிக்கொண்டே இருக்க 

இப்னு சுவூது என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது இன்றைய 

சவூதி அரேபியா .

இறைவனருளால் செல்வம் கொழிக்கும் 

நாடாகத் திகழும் சவுதி உலகத்திலுள்ள கோடிக்கணக்கணக்கான மக்களுக்கு 

வாழ்வாதாரங்களை வழங்கி வருகிறது.

அந்த கோடிக்கணக்கான மனிதர்களில் 

நானும் என் குடும்பத்தாரும் அடக்கம்.

இன்றும் எங்களுக்கும் நம்மில் பலருக்கும் வாழ்வும் வளமும் 

தந்து வருகின்ற அந்த பாலைவனச் சோலை நாடு மென்மேலும் செழிக்க வேண்டும் . 

அதனால் உலகமெல்லாம் நலம் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்தத் தொடரே சவுதி அரேபியாவில் வாழ்ந்த வாழ்க்கையை பற்றிய தொடர் என்பதால் இந்த தேசிய தின வாழ்த்துச் சொல்லும் வாய்ப்பும் 

இந்த தொடரிலேயே கிடைத்ததை எண்ணி பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

தொட்டால் தொடரும் 

இன்ஷா அல்லாஹ் ...

தொடரும் !



#அபு_ஹாஷிமா

No comments: