Friday, September 11, 2020

மழை இரவு !

 மழை இரவு !

தூறலும் சாரலுமாக

முனகிக்கொண்டிருந்த தூவானம்...

ஓர்

உச்சகட்ட பிரசவ ஒலியோடு

அடைமழை யொன்றைப்

பிரசவித்து ஓய்ந்தது !

செவிக் கெட்டிய தொலைவில்

இடி இசைப்பதற்கு முன்னரே

மின்னலின் வெளிச்ச கீற்றொன்று

சாளர வெளியில்

மெர்க்குரி தெளித்தது!

மின்வெட்டு இரட்டிப்பாக்கிய

ஈர இருட்டில் நிலவிய

இதமான குளிர் 

போர்வையின் 

இண்டிடுக்குகளில்

விரல்கள் நுழைத்தது !

கொசுவலைக்கு உள்ளிருந்து

தூளிக் குழந்தையொன்று

யார் வீட்டிலோ அழத் துவங்க

சட்டென்று விழித்தாள்

ஓர் உம்மம்மா!

நூந்துபோன

முட்டை விளக்கை

மீண்டும் ஏற்ற...

இரவின்மீது 

மஞ்சள்  துப்பட்டா !

மழையைச் சேமித்த செடிகொடிகள்

இலைகள் வழியாக

பினாமி மழையாக

இன்னும் 

சொட்டிக் கொண்டிருந்தது !

கேட்கும் தூரத்தில்

தவளையொன்று

சொந்த செலவில்

சூனியம் வைத்துக் கொண்டிருந்தது !

தொண்டை செறுமல்களிலும்

ரப்பர் செருப்புகள் நீர் மிதிக்கும்  ஓசையிலும்

இரவு

பலவீனப்படுவதை உறுதிசெய்துகொண்ட

விடியல்...

கண்கசக்கிக் கொண்டிருந்தது !

ஒற்றையடிப் பாதைகளை

ஓடைகளாக்கியும்...

தார்ச் சாலைகளுக்கு

நகராட்சி துப்புரவுத்தொழிலாளராகவும்...

மண் பாதை கழிவுகளையும்

காலடித் தடங்களையும் 

கழுவி வைத்தும்...

காலையில்

புத்தம் புது பூமியொன்றை

படைத்துவைத்து ஓய்ந்தது

மழை இரவு !



-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்


https://adirainirubar.in/2020/09/12/rain-night/

No comments: