Friday, September 11, 2020

#தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_15 அபு ஹாஷிமா

    #வாப்பா_காட்டிய_வழி



1980 ம் ஆண்டின் மே மாத சனிக்கிழமை என் வாழ்க்கையின் ஒரு முக்கியமான நாளாக விடிந்தது.

என்னோடு வேலைக்கு வந்தவர்களெல்லாம் அவரவர்களுக்கு 

ஒதுக்கப்பட்ட வேலைகளை செய்து கொண்டிருக்க நான் மட்டும் 

எனக்கு ஒதுக்கப்பட்ட ஹவ்ஸ்கீப்பர் 

வேலையைச் செய்யாமல் நின்று கொண்டிருந்தேன்.

மெஷின்களில் வேலை செய்து கொண்டிருந்த சில ஆப்பரேட்டர்களிடம் பேச்சுக் கொடுத்தேன்.

என்னிடம் பேசவே அவர்கள் அச்சப்பட்டார்கள்.

என்னுடைய பேட்சில் புதிதாக வேலைக்கு வந்தவர்களிடமாவது 

பேசலாம் என்றால் அவர்கள் என்னைத் திரும்பிப் பார்க்கக் கூட தயாராக இல்லை.

இவனிடம் பேசினால் இவனுக்குப் பதிலாக நாம் அந்த வேலையை செய்ய வேண்டி வந்து விடுமோ என்று பயந்தார்கள்.

அப்போதுதான் ..

என் சூப்பர்வைசர் டோனி என்னை நோக்கி வந்தான்.

லெபனானி அரபியில் " என்ன இங்கே நின்னுட்டிருக்கே .. உன் வேலையைச் செய் " என்றான்.

" எனக்கு இந்த வேலை வேண்டாம் .

ஒரு மெஷின் ஹெல்ப்பர் வேலையாவது 

கொடு செய்கிறேன். இது வேண்டாம் " என்றேன்.

என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவன் கேபினுக்குப் கூட்டிப் போனான்.

சீனியர்களெல்லாம் ..

" செத்தாண்டா சேகரு .. " ன்னு 

எண்ணிக் கொண்டார்கள்.

சிலர் நமுட்டுச் சிரிப்பு சிரித்தார்கள்.

டோனியின் கேபினில் சீனியர் சூப்பர்வைசர் அனீஸ்ம் இருந்தார்.

என்ன ஏதென்று டோனியிடம் விசாரித்து விட்டு அவரும் என்னை வேலை செய்யச் சொன்னார்.

டோனியிடம் சொன்னதையே அனீசிடமும் சொன்னேன்.

கொஞ்ச நேரம் என்னை ஊடுருவிப் பார்த்த அனீஸ் ... " நீ என்ன விசாவில் 

இங்கே வந்தே ?" ன்னு கேட்டார்.

நான் லேபர் விசாவில் வந்தேன் என்றேன்.

" இந்த ஹவ்ஸ் கீப்பர் விசாவும் லேபர் விசாதான். இங்க வேலை பார்க்கிற ஆப்பரேட்டரும் லேபர்தான்.

நானும் லேபர்தான் . இந்த வேலையில 

உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை.

நீ செய்யமாட்டேன்னு சொன்னா உனக்குத்தான் நஷ்டம் . உன்னை ஊருக்கு அனுப்பிருவாங்க." ன்னு அனீ்ஸ் விளக்கமா சொன்னாரு.

இப்படியே பேசிப்பேசி மணி எட்டை நெருங்கிக் கொண்டிருந்தது.

பேக்டரி மானேஜர் கரூடும் 

ஜெனரல் மானேஜர் மிலாடும் 

விசிட் வரும் நேரம்.

அனீஸ் சொன்னார் ....

" இப்போ கரூடும் மிலாடும் வந்துருவாங்க. நீ வேலை செய்யமாட்டேன்னு சொன்னது அவங்களுக்குத் தெரிஞ்சா உடனே உன்னை ஊருக்கு அனுப்பிருவாங்க. ஒரு 2 மாசம் இந்த வேலையைப் பாரு. நுஜுல் வெகேசன் முடிஞ்சு வந்ததும் 

நீ மெஷின்ல வேலை பார்க்கலாம்".

ஒரு அண்ணனைப்போல அவர் அன்பாகச் சொன்னதை என்னால் தட்டவும் முடியவில்லை . ஏற்கவும் முடியவில்லை.

என்ன முடிவெடுக்க வேண்டும் என்று 

தெரியாமல் திணறிக்

கொண்டிருந்தபோது  எனக்கு வழிகாட்ட ஒருவர் வந்தார்.

அவர் ..

#என்_வாப்பா !

இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

நம்முடைய வாழ்க்கையின் இக்கட்டான 

தருணங்களில் நல்ல வழி காட்டக் கூடியவர்கள் நம்முடைய பெற்றோர்கள்தான்.

தாயை விட தந்தைதான் இந்த மாதிரி நேரங்களில் அறிவூட்டுவதில் 

சிறந்த ஆசான்.

வாப்பா வந்தார் என்றால் வாப்பா சொன்ன உபதேசங்களும் அறிவுரைகளும் மூளையில் மின்னலென வெளிச்சமிட்டன என்று அர்த்தம்.

இந்த இடத்தில் வாப்பாவைப்பற்றியும்

கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும்.

நான் அரேபியா சபராளி என்றால் 

வாப்பா சிங்கப்பூர் சபராளி .

டீன் ஏஜ் பருவத்திலேயே கப்பலேறி 

சிங்கப்பூர் சென்றவர் படாத கஷ்டங்கள் எதுவுமில்லை.

போதிய படிப்பில்லாத வாப்பா 

பல கம்பெனிகளில் லேபராகத்தான் 

வேலை பார்த்தார். கடுமையான 

உழைப்பால் படிப்படியாக முன்னேறி 

M.R.&Co என்ற பிரிட்டிஷ் கம்பெனியில் 

லேபராக வேலைக்குச் சேர்ந்தார்.

பலநாட்டு வர்த்தக  கப்பல்கள் சிங்கப்பூர் 

துறைமுகத்தை முற்றுகையிட்டு நிற்கும்.

அந்த கப்பலில் இருக்கும் பார்ட்டிகளை 

கப்பலில் சென்று சந்தித்து அவர்களிடம் 

தங்கள் கம்பெனி பொருட்களுக்கு ஆர்டர் எடுக்க வேண்டும்.

அந்த நிகழ்வுகளை வாப்பா எங்களுக்கு 

சுவைபட சொல்லி இருக்கிறார்கள்.

இரவு பகல் பாராமல் கப்பலுக்குப் போக வேண்டும். சிறிய படகுகளில் பயணித்து பெரிய கப்பலின் அருகே சென்றதும் நூலேணி வழியாக மேலே ஏறித்தான் கப்பலுக்குள் செல்ல முடியும்.

சில சமயங்களில் கால்தவறி 

கடலிலும் விழுந்திருக்கிறார்கள்.

இப்படி ஏராளமான சிரமங்களை தாங்கி

கம்பெனியின் உயர்ந்த பொறுப்புக்கு வந்தவர்தான் என் வாப்பா .

கடுமையான ஈடுபாட்டோடு கூடிய உழைப்பின் காரணமாக

வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைந்தார்கள். 

அப்போதே வாப்பா ஒரு கோடீஸ்வரனாக வாழ்ந்தார். சிங்கப்பூரில் சம்பாதித்துக் கொண்டே ஊரிலும் மிக பிரம்மாண்டமான ஒரு மரக்கடையை Saw mill  ஆரம்பித்தார்.

கேரளாவின் கோட்டயம் போன்ற பகுதிகளில் கூப் கான்ட்ராக்ட் எடுத்து 

தேக்கு , ஈட்டி போன்ற மரங்கள் மொத்த வியாபாரமும் மரங்களை சைசுக்குத் தகுந்தபடி  வெட்டி விற்பனையும் ஏராளமான உபகரணங்கள் உற்பத்தி செய்யும் தொழிலையும் செய்தார்.

சொந்தக்காரர்கள் மில் நிர்வாகத்தைப் 

பார்த்துக் கொண்டார்கள்.

நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் 

மில்லில் வேலை பார்த்தார்கள்.

வாரந்தோறும் சனிக்கிழமை  அவர்களுக்கு சம்பளம் வழங்கும் நாள்.

நான் பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவதோ பத்தாவதோ படித்துக் கொண்டிருந்தேன்.

எப்போதாவது மில்லுக்குப் போவதுண்டு.

அந்த நேரம் சம்பளம் கொடுக்கும் நேரமாக இருந்தால் ...

" சின்ன மொதலாளி வந்திருக்காரு .

அவர் கையால சம்பளம் வாங்கிகுங்க " என்று சொல்லி என்னிடம் தந்து 

கொடுக்கச் சொல்வார்கள்.

நானும் சந்தோஷமாகக் கொடுப்பேன்.

இந்த அனுபவம் என் அண்ணன்கள் 

டாக்டர் ஹபிபுல்லாஹ்வுக்கும் 

ரஹீமுல்லாஹ்வுக்கும் கூட ஏற்பட்டதுண்டு.

எங்கள் தொழிற்சாலையில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கிய உயர்ந்த நிலையிலிருந்த எனக்கு இன்னொரு தொழிற்சாலையில் 

கிளீனர் வேலையா ?

இந்த சம்பவம் மனக்கண்முன் வந்து 

என்னை கண்கலங்க வைத்தது.

மூளை கம்ப்யூட்டரைவிட வேகமாக 

செயல்படக்கூடிய வஸ்துவாயிற்றே ....

சில வினாடி நேரத்திலேயே வாப்பா சொல்லித் தந்த வரலாறுகள் மூளைக்குள்  ஓட ஆரம்பித்தன.

நபிமார்களில் பல துன்பங்களுக்கு ஆளானவர்களில் ஒருவர் 

அய்யூப் நபி ( அலை ) அவர்கள்.

மனிதக்கழிவுகளை தோளில் சுமந்து 

அகற்றும் ஒரு வேலையைச் செய்யும் 

நிர்பந்தம் அய்யூப் நபி அவர்களுக்கு ஒருபோது ஏற்பட்டது.

ஒருநாள் அப்படி சுமந்து செல்லும்போது ... " அய்யூபே இறைத்தூதராக இருக்கின்ற உனக்கு இப்படி ஒரு நிலையா ? " என்று அவரது 

மனசு குரலெழுப்பி ஓங்காரமிட்டது.

ஒரு கணம் தடுமாறி நின்ற அய்யூப் நபியவர்கள் தன்னை நிலைப்படுத்திக் கொண்டு ...

" நப்சே ஆட்டம் போடாதே .அடங்கு ... 

இது என் இறைவனின் நாட்டம் " 

என்று சொல்லிவிட்டு தன் பணியை

தொடர்ந்தார்கள் .

வாப்பா எப்பவோ சொன்ன இந்த வரலாறு வாப்பாவே நேரில் வந்து சொல்வதுபோல் காதில் ஒலித்தது.

மனம் தெளிவடைந்தது.

அல்ஹம்துலில்லாஹ் ...

என்று சொல்லி விட்டு பிரஷ்ஷை கையிலெடுத்தேன் ...

டோனியும் அனீசும் 

நிம்மதி பெருமூச்சு விட்டு " குத் " good

என்றார்கள்.

எனக்கு ஒதுக்கப்பட்ட வேலையை 

நான் செய்ய ஆரம்பித்தபோது 

சிலருடைய நக்கலும் சிரிப்பும் 

என்னை அசைக்கத் தவறவில்லை.

" நப்சே அடங்கு " என்று சொல்லி விட்டு 

வேலையை ஆரம்பித்தேன்.

தொட்டால் தொடரும் தொடர்

இன்ஷா அல்லாஹ் 

இரு நாட்களுக்குப் பிறகு 

தொடரும் !

#ஆட்டம்_ஆரம்பமாகும்



#அபு_ஹாஷிமா

#தொட்டால்_தொடரும் .... #குறுந்தொடர்_14 அபு ஹாஷிமா

No comments: