Friday, September 11, 2020

#தொட்டால்_தொடரும் .... #குறுந்தொடர்_14 அபு ஹாஷிமா





 வீட்டிலிருந்து புறப்பட்டு

பாம்பேயில் இன்னல்பட்டு

ஒருவழியாக சவுதி அரேபியாவின் 

தம்மாமுக்குப் போய் வேலையில் சேர்ந்து 

ஒருமாதம் முடிந்து விட்டது.

தங்குமிடத்திலும் பணிபுரியும் இடத்திலும் ஏகதேசம் எல்லோருடனும் 

ஓர் அறிமுகம் ஏற்பட்டு யார் யார் என்னென்ன குணநலன் உடையவர்கள் 

என்பதையும் ஓரளவு தெரிந்து கொண்டேன்.

நானும் நண்பர்கள் மீரானும் அன்வரும் 

தனியே சமையல் செய்து சாப்பிட்டோம்.

அவர்கள் இருவரும் பிளாஸ்டிக் எக்ஸ்டுரூடரில் வேலை செய்தார்கள்.

நான் பிளாஸ்டிக் கட்டிங் மெஷினில் 

வேலை செய்தேன்.

நான் வேலை செய்த செக்‌ஷனில் விதவிதமாக ஏராளமான மெஷின்கள் 

இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான பிளாஸ்டிக் பைகளை தயார் செய்யக்கூடியவை.

ஷாப்பிங் மால் பைகள் முதல் 

கிச்சன் ட்ராஷ் பேக் வரை எல்லாவிதமான பயன்பாட்டுக்கும் 

அங்கே பைகள் தயாராகிக் கொண்டிருந்தன.

லான்ட்ரி பேக் தயார் செய்ய ஒரு மெஷின் 

ஐஸ் க்யூப்கள் தயார் செய்ய ஒரு மெஷின் குபுஸ் பேக் பண்ணும் கவர் செய்ய ஒரு மெஷின் என்று ஏக அமர்களம்.

பிரீடா என்ற பெரிய மெஷின்கள் .

கலர் கலரான மிகப்பெரிய ட்ராஷ்பேக்குகள் அந்த மெஷின்களில்தான் தயாராகும் .

ஸ்டீக்ளர் , ரோலோமேட்டிக் என்றெல்லாம் பல மெஷின்கள்.

வண்ண வண்ண பிளாஸ்டிக் ரோல்கள் 

அந்தமெஷின்களில் ஓடி பேக்குகளாக 

மாறுவதைப் பார்க்கவே அழகாக இருக்கும்.

அப்படித் தயாராகும் பேக்குகளை 

அட்டை பெட்டிகளுக்குள் வைத்து எடைபோட்டு கம்பெனி லேபிள் ஒட்டி 

பேக் செய்து அடுக்கி வைப்பதுதான் 

எங்களைப்போன்ற லேபர்களின் வேலை.

பகல் ஷிப்ட் சுறுசுறுப்பாக 

இயங்கிக் கொண்டிருக்கும்.

சூப்பர்வைசர்களும் பேக்டரி மேனேஜரும் சுற்றி சுற்றி வந்து கண்காணிப்பார்கள்.

புதிய புதிய முயற்சிகளை மேற்கொள்வார்கள்.

புதிய டிசைன்களை உருவாக்கி 

மார்க்கெட்டில் அறிமுகப்படுத்துவார்கள்.

செக்‌ஷனில் தமிழர்கள் , வட இந்தியர்கள் , மலையாளிகள் , இலங்கையர்கள் , லெபனானிகள்  என பல நாடுகளைச் சேர்ந்தவர்களும் வேலை செய்வோம்.

பிரீடா மெஷினை ஓட்டியவர் 

பாம்பேயைச் சேர்ந்த ஜுல்பிகார் அலி என்பவர். எப்போதும் " அரே சூத்தியா ..." என்றே எல்லோரையும் விளித்து பேசிக் கொண்டிருப்பார். இந்தியைத் தவிற வேறெந்த பாஷையும் தெரியாது.

பாம்பே மாதுங்கா தெருக்களில் தள்ளு வண்டியில் வாழைப்பழ வியாரம் செய்து கொண்டிருந்தவர் எங்களுக்குச் சில வருஷங்களுக்கு முன்னரே லேபராக வந்து மெஷின் ஆப்பரேட்டராகி விட்டார்.

எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும்.

சிரித்த முகம். அவரது மெஷினிலும் நான் ஹெல்ப்பராக வேலை செய்தேன்.

எனக்கும் அவ்வப்போது மெஷினை ஆப்பரேட் செய்ய சொல்லித் தருவார்.

பஷீர் , சிராஜுதீன் , அலி அக்பர் , ஜார்ஜ் வர்க்கீஸ் , மத்தாயி , சில்வா , மேத்யூ , ஓமன் போன்றவர்கள் சீனியர் ஆப்பரேட்டர்கள்.

மலையாள சீனியர்கள் லேசில் நம்மோடு ஒட்டிக் கொள்ளவோ வேலைகளை சொல்லித்தரவோ மாட்டார்கள்.

நம்மை பகையாளிகளைப் பார்ப்பது போலவே பார்ப்பார்கள் இந்த மலையாளிகள்.

இதையெல்லாம் ஓரளவு புரிந்து கொண்டால்தான் பேக்டரியில் உஷாராக வேலை செய்ய முடியும்.

நுஜுல் என்றொரு பொடியன்.

ஸ்ரீலங்கா தமிழ் முஸ்லிம்.

பொடியனென்றால் அது அவர்கள் நாட்டு பேச்சில் சொல்வது.

நல்ல வாட்டசாட்டமான பயல்.

எல்லோரையும் அதட்டிக் கொண்டிருப்பான். அவனுக்கு எல்லோரும் கொஞ்சம் பயந்ததும் பார்க்க 

வேடிக்கையாக இருந்தது.

அவன்தான் எங்கள் செக்‌ஷனின் 

ஹவ்ஸ் கீப்பர்.

நல்ல சுறுசுறுப்பாக வேலை செய்வான் .

பிளாஸ்டிக் ரோல்களை சுற்றி வரும் பேப்பர்களையும் கோர்களையும் அள்ளி வண்டியில் போட்டு பேக்கிங் மெஷினில் கொண்டு தள்ளி அதை ஆப்பரேட் செய்து பண்டல்களாக்குவதும் 

செக்‌ஷனை சுத்தம் செய்வதும் அவன் வேலை. சமயங்களில் புரடக்சன் பேக்குகளை போர்க்லிப்டில் எடுத்து 

கோடொவ்னில் கொண்டு இறக்கவும் 

பிரின்டிங் ரோல்களை கட்டிங் செக்‌ஷனுக்குக் கொண்டு வரவும் வேண்டும்.

அந்த செக்‌ஷனில் சுதந்திரமாக வேலை செய்பவன் அவன் ஒருவன்தான்.

புரடக்‌ஷனை பற்றிய கவலையோ 

மெஷின் தகராறு செய்வதைப பற்றிய கவலையோ இல்லாமல் இஷ்டத்துக்கும் 

சுற்றிக் கொண்டிருப்பான்.

மூணரை மணியானவுடன் முதல் ஆளாக 

பஸ்ஸில் ஊறி அமர்ந்து விடுவான்.

நல்ல பாடி பில்டர்.

என்னோடு ரொம்பவே சினேகமாக இருப்பான்.

இலங்கைத் தொழிலாளர்களில்

சிங்களர்களும் உண்டு.

தமிழர்களும் உண்டு.

அவர்களுக்கென்று தனித் தங்குமிடம் 

இருந்தது.

யாழ்ப்பாணம் ஜாப்னா பகுதியைச் சேர்ந்த தமிழர்கள் பலர் என்னோடு வேலை செய்தார்கள்.

அவர்களுக்கும் சிங்களர்களுக்கும் 

ஒருபோதும் ஒத்துப்போகாது.

அடிக்கடி சண்டையிட்டுக் கொள்வார்கள்.

ஊருக்குப் போவதற்காக சிலர் வாங்கி வைத்திருக்கும் விலை மதிப்புள்ள பொருட்களை அவர்களுக்குத் தெரியாமல் சேதப்படுத்துவார்கள்.

இதைவிட மோசமான வேலைகளையெல்லாம் செய்து பாம்பும் கீரியும்போல நடந்து கொள்வார்கள்.

அப்போது இலங்கையில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் கடுமையான சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம்.

அந்த சண்டையின் சத்தம் சவுதிவரை 

எதிரொலித்தது.

நுஜுல்தான் அங்கே நடக்கும் சண்டைகளையும் இரு தரப்புக்கான பிரச்சினைகளையும் என்னிடம் விலாவாரியாக பகிர்ந்து கொள்வான்.

நுஜுலுக்கு ஒரு தங்கச்சி .

அதற்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன.

தங்கச்சி கல்யாணத்திற்கு இவனும் போவதற்குத் தயாராக இருந்தான்.

வெகேஷனில் ஊருக்குப்போக தயாராக இருந்த அவனால்தான் எனக்கு பிரச்சினை வரப்போகிறது என்பதை அறியாமல் அவனோடு பழகிக் கொண்டிருந்தேன்.

ஒரு வியாழக்கிழமை என் சூப்பர்வைசர் டோனி அவனுடைய கேபினுக்கு என்னை அழைத்தான். டோனி என்னைவிட வயதில் இளையவன்.

போனேன்.

நுஜுல் ஊருக்குப் போவதால் அவன் வரும்வரை அவனுடைய வேலையை 

நீ பார்க்க வேண்டும் என்று அரைகுறை ஆங்கிலத்தில் சொன்னான்.

எனக்கு ஷாக் அடித்ததுபோல் இருந்தது.

ரஜினிகாந்துக்கு சுத்துன மாதிரி 

ஒரு நிமிஷம் எனக்கு தலையை சுத்திருச்சு.

நான் முடியாது என்றேன்.

முடியாது என்றால் ஊருக்குப் போ என்றான். எனக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

அன்றைக்கு அரைநாள்தான் வேலை.

வெள்ளிக்கிழமை விடுமுறை.

அடுத்த வாரத்துக்கான வேலை விவரங்களை பற்றிய அறிக்கையை நோட்டீஸ் போர்டில் கொண்டு வந்து ஒட்டினான்.

நோட்டீசின் கடைசியில் 

ஹவ்ஸ் கீப்பர் என்ற இடத்தில் என் பெயர் இடம் பெற்றிருந்தது .

ஏற்கனவே என்னிடம் கடுப்பாக இருந்த மலையாளி ஆப்பரேட்டர்கள் ரொம்ப குஷியாக என்னை நக்கலடித்தார்கள்.

" இவன் பெரிய மயிரன் ... போடோ .."

என்றெல்லம் சீத்தை பறஞ்சார்கள்.

நெஞ்சுக்குள் கோபமும் ஆவேசமும் 

அவமானமும் முட்டியது.

எல்லோருடைய கிண்டலையும் 

ஒரு கோபப் பார்வையோடு ஒதுக்கி விட்டு பஸ்ஸில் ஏறி ரூம் வந்து சேர்ந்தேன்.

என்னுடைய நண்பர்களும் வந்து சேர்ந்த பிறகு அவர்களிடம் நிலவரம் சொல்லி 

என்ன செய்வது என்று கேட்டேன்.

யாரால் என்ன செய்ய முடியும் ?

அவர்களும் புதுசு.

கம்பெனி மானேஜரிடம் போய் பேக்கூடிய அளவுக்கு அங்கே யாருக்குமே செல்வாக்கோ தைரியமோ கிடையாது .

எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

சவுதி வந்து இரண்டு மாதத்தில் ஊருக்குப் போனால் அதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பது 70 mm திரைப்படம்போல் மனதுக்குள் ஓடியது.

ரொம்பவே பயங்கரமான படம்.

மனது எதிலும் செல்லவில்லை.

சரியாக சாப்பிடவோ உறங்கவோ முடியவில்லை.

என்னால் என் நண்பர்களின் விடுமுறைநாள் சந்தோஷமும் இல்லாமல் போச்சு.

என்ன ஆனாலும் சரி ....

இந்த வேலையை ஒப்புக் கொள்ளக்கூடாது என்று தீர்க்கமாக 

முடிவெடுத்து சனிக்கிழமை எப்போதும் போல் காலையில் வேலைக்குப் போனேன்.

என்னோடு வந்தவர்கள் அவரவர்க்கு 

ஒதுக்கப்பட்ட மெஷின்களில் போய் வேலையை ஆரம்பிக்க நான் எந்த மெஷினில் வேலை செய்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

அப்போது ....

தொட்டால் தொடரும் 

இன்ஷா அல்லாஹ் ...

செவ்வாய்க் கிழமை 

#தொடரும்



#அபு_ஹாஷிமா

தொட்டால்_தொடரும் #குறுந்தொடர்_13 அபு ஹாஷிமா

No comments: