Friday, September 4, 2020

பள்ளிவாசலில் சென்று ஜூம்மா தொழ வாய்ப்பு கிடைத்தது.

 Mohamed Ashik


அஸ்ஸலாமு அலைக்கும்.

மார்ச் 20க்கு பிறகு இன்றுதான் எங்கள் ஊர் பள்ளிவாசலில் சென்று ஜூம்மா தொழ வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.

முதல் ஜூம்மா பாங்கு சொல்லிக்கொண்டு இருக்கையில்... பள்ளிக்கு சென்றால்...

மாஸ்க் உள்ளே நுழையும் முன்பு அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்கவும்... 

நுழைவுவாயிலில் இருந்த ஹேண்ட் சானிடைசர் மூலம் கைகளை சுத்தப்படுத்தவும்...

ஒரு நபர் அமர வேண்டிய அளவுக்கு இடைவெளி விட்டு குத்பாவில் அமரவும்...

ஒரு ஸ்டூல் போடக்கூடிய அளவு இடைவெளி விட்டு ஒரு ஸ்டூல் போடப்பட்டுள்ளபடியே உட்கார்ந்து தொழவந்த வயதானோர் அமரவும்...

நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டோம்.

12:35க்கு பாங்கு சொல்லி முடிக்கப்பட்ட உடனேயே... மேற்படி அறிவிப்புகளுடன் பயான் துவங்கியது. மேற்படி விஷயங்கள் 10 நிமிஷம் பேசி முடிக்கப்பட்ட உடன் தொழுகையின் அவசியம் அது எவ்வளவு இன்றியமையாதது என்பது குறித்தும் மார்க்கம் சார்ந்த அறிவுறுத்தல்களுக்கு பின்பு... மீண்டும் புதிதாக வந்தோருக்கு அதே பழைய மேற்படி அறிவிப்புகள் கூறப்பட்டு... 12:55க்கு பயான் நிறைவடைந்தது. 

சுன்னத் தொழ 5 நிமிஷம் நேரம் தரப்பட்டு... பின் 1 மணிக்கு இமாம் குத்பாவுக்காக மிம்பரில் ஏறியவுடன் இரண்டாம் ஜூம்மா பாங்கு சொல்லி... இரு குத்பா 'ஓதிய' பின்னர்... 1:10க்கு தொழுகை ஆரம்பித்தது.

தொழுகைக்கு முன்பு இமாம்...

"உங்கள் ஸஃபுகளை நேராகவும்... தேவையான அளவு இடைவெளி விட்டும் விலகி விலகி நின்றும் சரிப்படுத்தி கொள்ளுங்கள். அல்லாஹ் ரஹ்மத்து செய்வானாக..." என்று வழக்கத்திற்கு முற்றிலும் மாற்றமாக பேசியவுடன்...

என்னையும் அறியாமல் நெஞ்சு கனத்தது. மிகுந்த சோகம் உள்ளதை ஆக்கிரமித்தது. விவரிக்க முடியாத வேதனை அது. 😢

"அல்லாஹுஅக்பர்"

என்று தொழுகையை துவக்கி...

ஒவ்வொரு ரக்கஅத்திலும் சுருக்கமாக ஓதி...

5 நிமிஷத்தில் 2 ரக்கஅத் முடித்து விட்டார்.

யாரையும் தொடாமல் இடிக்காமல் அமர்ந்தும்... யார் மீதும் தோளோடு தோள் உரசாமல் ஸஃப்பில் நின்றும்... இத்தனை விரைவாக... வெறும் 15 நிமிஷத்தில் ஒரு ஜூம்மா குத்பாவை என் வாழ்நாளில் இதுவரையில் தொழுது முடித்தது கிடையாது.

யா... அல்லாஹ்...

இந்த கொரோனா தொற்றை முற்றாக உலகில் இருந்து ஒழித்து... 

பழையபடி... 

"உங்கள் ஸஃபுகளை நேராகவும் நெருக்கமாகவும் தோளோடு தோள் ஒட்டி ஸஃப்பில் நின்று சரிப்படுத்திக் கொள்ளுங்கள். அல்லாஹ் ரஹ்மத்து செய்வானாக..." என்று வழக்கம்போல இமாம் கூறியவாறு ஜூம்மா தொழ... வெகு சீக்கிரத்தில் அருள் புரிவாயாக.



Mohamed Ashik


No comments: