Monday, September 28, 2020

கற்பாறைகளுக்குள் ஒளிந்திருக்கும் இரும்புத் துகள்களை கூர்வாளாக ஒளிரவைக்கும் கனவுகளின் சூத்திரம்..! #நிஷாமன்சூர்



 "பொறிபுல னடங்கிய காலே பரி

பூரணப் பொருள்வந்து வாய்க்குமப் பாலே"

-குணங்குடி மஸ்தான் சாகிபு அப்பா ரலியல்லாஹு அன்ஹு

நவீன யுகத்தின் சகல ஆடம்பரங்களையும் படோடோபமாக வெளிப்படுத்தும் துபாய் நகரின்  நுகர்வு கலாச்சாரத்தில்  ஆண்டைகளும் அடிமைகளும் ஏவல் பணியாளர்களும் ஒரே புள்ளியில் இயங்கும் கார்ப்பரேட் பின்புலத்தில்  ஒரு அதிகாரி எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பொருளாதார சிக்கல்கள், அவற்றினூடாக ஏற்படும் வாழ்வின் ஏற்ற இறக்கங்கள், அவற்றிற்கான ஆன்மீக தெளிவு அனைத்தும் கலந்த ஒரு கலவையாக உருவாகிப் பரந்து விரிகிறது கனவுக்குள் கனவு நாவல்.சூஃபி ஞான ஆத்மீக அனுபவங்கள் உள்ளீடாகக் கொண்டு நகரும் இந்த நாவலில் சில வரிகள் சில சித்தரிப்புகள் சில குறிப்புகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாக இருக்கின்றன 

வெளிநாட்டில் வாழும் நாயகன் தன்னுடைய மகனை எதிர் கொள்ளும் காட்சி அதிலும் நியாஸ் பாத்திரம் கூலிங்கிளாஸ் சிறுகதை மூலம்  சித்தரிக்கப்படும் வாழ்வு மிக அழகாக இருக்கிறது. "நானே சீசனுக்கு சீசன் வர்ற பொன்னாம் தட்டான் பறவைபோல வருஷத்துக்கு ஒரு தரம் ஒரு மாசம் வரேன் இதுல என்னத்த கண்டிக்கிறது" என்று சொல்வதாகட்டும் "ரவா தோசையும் வடையும் வாங்கிக்கொண்டு ஸ்டார் தியேட்டரில் நுழையும் போது அந்த பக்கம் பஸ்ஸில் போய்க் கொண்டிருந்த செல்லப்பா பார்த்துவிட்டார். வீட்டுக்கு வந்தவர் கேக்குறாரு உன் புள்ள நோன்பு தொறக்க ஒரு பள்ளிவாசலும் கிடைக்கலையா சினிமா தியேட்டரில் தான் நோம்பு திறப்பானோ நீ தான் சாப்பாடு போட்டு கட்டிக் கொடுத்தியோ" என செல்லாப்பா கேட்கிறதாகட்டும்  பல சித்தரிப்புகள் அழகாக சொல்லப்பட்டிருக்கின்றன.

கனவுக்குள் கனவு என்கிற தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் நாவலானது வெற்றுக்  கனவுகள் குறித்ததாக இல்லை.வாழ்வின் கேள்விகள் அனைத்துக்கும் பதிலைத் தேடும் ஒரு நுண்ணிய பார்வை,கனவாகிவிடக்கூடாது அல்லவா..ஆனால் இப்னு அரபி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மேற்கோள்களாலும் சூஃபி குரு பாத்திரத்தின் விளக்கங்கள் மூலமாகவும் கனவுதான் இந்த வாழ்வு என்று படிப்படியாக நிறுவ முற்படும் முயற்சி,"கண் விழித்தபடி ஒரே கனவை ஆயிரம்பேர் காண்பதுதான் சினிமா" எனும்போது முழுமையடைகிறது. 

ஏன் இப்படி நடக்கிறதுநடக்கிறது ? எதனால் இப்படி நடக்கிறது ? இந்த பிரச்சனை ஏன் இப்படி நகர்கிறது ? 

பொதுவாக மனிதனுக்கு ஒரு பிரச்சனை இருக்கிறது நான் தான் உலகத்திலேயே ரொம்ப சிரமப் படுகிறேன் நான்தான் உலகத்துல ரொம்ப கஷ்டப் படுறேன்,என்னைவிட  கஷ்டப்படறவங்க வேற யாருமே இல்ல என்கிற ஒரு சிந்தனை பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கிறது.

அதனைத்  தெளிவடைய வைக்கும் முடிச்சுகளை இந்த நாவலில் வரும் சூஃபி குரு பாத்திரம் மூலமாக அழகாக  அவிழ்த்துக் காண்பிக்கிறார் நாவலாசிரியர். அதற்கு ஆதாரமாக பல இறைமறை வசனங்களையும் சூஃபி ஞானிகளின் கூற்றுகளையும் மேற்காட்டுவது மட்டுமன்றி அறிவியல்பூர்வ ஆதாரங்களையும் தருவதற்கு முற்படுகிறார். 

"புதிய தளிர் விட்ட மரத்தின்

ஒவ்வோர் இலையும்

இறைவனைத் துதிக்கும் நாவுதான்" என்கிற ஷா அதியின் வரிகளை மேற்கோளிட்டுத் தொடங்கும் ஞானப்பாடம் விர்ரென்று வேகமெடுத்து கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களது ஹதீஸ்களிலிருந்தும் இறைமறை வசனங்களிலிருந்தும்,இப்ராஹிம் நபி,யூனுஸ் நபி உள்ளிட்ட நபிமார்கள்,முஹையத்தீன் ஆண்டகை,இப்னு அரபி, இப்ராஹிம் இப்னு அத்ஹம்,இன்னும் பல இறைநேசர்களின் வாழ்வு மற்றும் வாக்குகளிலிருந்தும் தன்னை அறியும் தவத்தை உணர்த்திச் செல்கிறது.

இஸ்லாம் சம்பந்தப்பட்ட சூபிசம் சம்பந்தப்பட்ட பல கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் விதமாக இருக்கும் கனவுக்குள் கனவு நாவலில் பாத்திரங்களின் தேர்வும் பங்களிப்பும் கச்சிதமாக அமைந்துள்ளது. அன்பில் முஹம்மது என்கிற பெயரும் பெயர்க்காரணமும் இஸ்லாமிய சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமகால திராவிட இயக்கங்களின் தாக்கத்தை  உணர்த்திறது. எங்கள் ஊருக்கு எண்பதுகளில் ஒருமுறை கலைஞர் கருணாநிதி வந்த சமயம் அட்டகாசமாக கவிதைபாடி வரவேற்றார் ஒரு துடிப்பான இளைஞர். பலத்த கைதட்டலுக்குப் பிறகு அவரது பெயரைக் கேட்டு "அமீது" என்று கொண்ட கலைஞர் தன் உரையில் அவரை "அமுதன்" என்று அழைத்தார். அதேபோல காதர்மைதீன் என்கிற பெயரை கதிரவன் காதர்மைதீன் என்றும் விளித்தார். இதுபோன்ற பெயர்களை பெரிய அளவில் மனமுரண் கொள்ளாமல் ஏற்றுக் கொண்டது தமிழ் இஸ்லாமிய சமூகம்.

ஆட்டோ சஜஷன்,செல்ஃப் ஹிப்னாடிசம்,சுயத்தேடல், இறைவனை அறிதல்,மனித இருப்பு,Dream and Reality, Construct Reality  ஆகிய ஆழமான உரையாடலை நிகழ்த்தினாலும் அவை எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் கதையினூடே அழகாக நகர்த்திச் செல்லப்படுகிறது. "திக்ர் என்பது தனி இடத்தில் உக்காந்து ஜபிக்கும் விஷயமல்ல,வாழ்வின் எல்லாப் பகுதிகளிலும் இருக்க வேண்டிய ஒரு விழிப்புணர்வு நிலையைப் பற்றியது' என்று ஆன்ம விழிப்புணர்வு குறித்தும்,  மனிதன் தன் விருப்பத்திற்கு ஏற்ப தனக்கு மட்டுமே உபகாரம் செய்யும் பிரத்யேகமான கடவுளை (Illusory God) உருவாக்கிக் கொள்ளும் போக்கின் விபரீதங்கள் குறித்தும் தொழுகை நோன்பு போன்ற வழிபாடுகளின் அகமியங்கள் குறித்தும் நேசத்துடன் விளக்கிச் சொல்லும் கையேடாகப் பரிணமிக்கும் அதேசமயத்தில் தொழுகையில் அனுஷ்கா முகம் மறைந்து ஹன்ஷிகா முகம் தென்படுவதை மென்று விழுங்கும் நஜீர்களுக்கு உரிய பங்கையும் அளிக்கத் தவறவில்லை.

குடும்பத்தையும் உறவுகளையும் பிரிந்து பிழைப்புக்காக அயல் தேசத்தில் இளமையைத் தொலைத்துவிட்டு உடல் உபாதைகளுடன் சொந்த ஊர் திரும்பும் எண்ணற்ற மனிதர்களின் சோகம், நாவல் முழுக்கவே ஒரு துயர இசையாகக் கசிந்துகொண்டே வருகிறது. ஞானம் பேசும்போதாகட்டும்  வாழ்வியல் பேசும்போதாகட்டும் அந்த இசையின் மீட்டல்கள் உள்ளீடாகக் கசியாத பொழுதில்லை. அதிலும் பெற்ற மகளின் திருமணத்தில் கலந்து கொள்ள இயலாமல் தவிக்கும் தகப்பனின் தவிப்பும்,கணவன் இல்லாமல் எல்லா வலிகளையும் மென்று விழுங்கிவிட்டு ஒற்றையாக நின்று சமாளிக்கும் இல்லத்தரசியின் ஆற்றாமையும்  கண்கலங்க வைக்கின்றன. 

"ஞானமும் கல்வியும் நாழியரிசிக்குள்ளே

நாழியரிசியை நாய் கொண்டு போய்விட்டால்

ஞானமும் கல்வியும் நாய்பட்ட பாடே" என்பார்கள் தமிழகத்தின் மாபெரும் சூஃபி மகானான ஷைகுணா கல்வத்து நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். ஞானப்பேச்சுகள் மிக நுணுக்கமானவை  மட்டுமல்லாமல் கத்திமேல் நடப்பது போன்ற அபாயம் மிகுந்தவையும் ஆகும். "எதுவுமே அவனல்ல,அனைத்தும் அவனது மாறுபட்ட ஷான்களைக் காட்டும் கண்ணாடிகளே" என்று இறை வெளிப்பாட்டின் 

ஷான் எனும் தன்மையை விவரிக்கும் மெய்தரிசனத்திலும் படைப்பும் படைத்தவனும் ஹக்கும் ஹல்க்கும் சேரும் புள்ளியையும் விலகும் கோணத்தையும் பிசகின்றி உணர்த்தும் துல்லியத்திலும் இந்த படைப்பு முழுமையை அடைகிறது. 

இறைவனைத் தவிர யாரும் லாபமோ நஷ்டமோ அணுவளவும் பிறருக்குச் செய்ய முடியாது என்கிறது பிரபஞ்ச உண்மை. சிறு துரும்பும் பல்குத்த உதவும் என்கிறது வாழ்வியல் யதார்த்தம்.  இந்த இரு உண்மைகளுக்கு ஒத்திசைவான தரிசனத்தை அதனதன் தர்க்க நியாயங்களுடன் விவரித்துச் சொல்கிறது கனவுக்குள் கனவு நாவல். சமீபத்தில் வெளியான "சூஃபியும் சுஜாதாவும்" மலையாள  சினிமாவின் தாக்கத்தால்   நிறைய நண்பர்கள் "சூஃபிசம்னா என்னங்க தோழர்" என்று வினவியிருந்தனர். அந்த நண்பர்களின் கேள்விகளுக்கு விடையாகவும்  இறைவன், மனிதன், பிரபஞ்சம், பிறப்பு,இறப்பு,நன்மை, தீமை,இன்பம்,துன்பம் சார்ந்த கேள்விகளுடன்  தேடல்களை மேற்கொள்ளும் தாகித்த மனிதர்களுக்கான கையேடாகவும் இந்த நாவல் அமைந்துள்ளது. 

"தாகித்தவன் தண்ணீரைத் தேடுகிறான்

தண்ணீரோ தாகித்தவனைத் தேடிக் கொண்டிருக்கிறது" 

அன்புடன்,



நிஷா மன்சூர்

தொடர்புக்கு- nisha.mansur@gmail.com

No comments: