Wednesday, September 16, 2020

அற்புதங்கள் நம்பிக்கையின் ஆணிவேர்.



நம்பிக்கை கொள்ள அற்புதங்களை எதிர்பார்த்திராத மார்க்கத்தை பின்பற்றுகிற போதிலும்... என்னை பொறுத்தவரையில் அற்புதங்கள் நம்பிக்கையின் ஆணிவேர். 
அற்புதம் என்றால் என்னவென்று வரையறுப்பதில் தான் வேறுபடுகின்றன நமது கண்ணோட்டங்கள். ஜீஸஸ் அலைஹிவஸ்ஸலாத்தின் பிறப்பு ஒரு அற்புதம், ஃபிர்அவ்னின் படைகள் துரத்திய போது கடல் இரண்டாக பிளந்தது ஒரு அற்புதம், மோஸஸ் நபியின் கைத்தடி பாம்பாக உருவெடுத்ததும் அற்புதம், அதே போலவே தான் எனக்கு என் வாழ்க்கையும் ஓர் அற்புதம்.
ஆம்... சாதகங்கள் மட்டுமே நிரம்பி வழிகிற எனது வாழ்க்கை நான் கண்ட ஒரு மாபெரும் அற்புதம். நினைத்ததெல்லாம் நிறைவேறுகிற, நடப்பதெல்லாம் இனிமையாகிற, முயல்வதெல்லாம் முடிகிற, முடிகிறவற்றை மட்டும் முயல முற்படுகிற என் வாழ்க்கை தான் நான் காண்கிற மிகப்பெரிய அதிசயம்.
சிரமங்கள் எழுகிற போதெல்லாம் எண்ணிக்கொள்கிறேன் இது என் இறைவனை குறித்த ஒரு நினைவூட்டலென்று. அனுகூலங்கள் அமைகிற போதெல்லாம் புரிந்து கொள்கிறேன் இவை என் இறைவனின் அருட்கொடைகள் என்று!
எனக்கு இலேசாகிறவை ஒவ்வொன்றும் எனது சுற்றத்தாரின் பிரார்த்தனைகளால் என்று புரிந்து கொள்கிறேன், என்னிடம் மனக்கிலேசங்களை பகிர்கிறவர்களை எல்லாம் எனது பிரார்த்தனைகளில் பொதிந்து கொள்கிறேன்!
என் நட்பும் சுற்றமும் என்னிடம் மீண்டும் மீண்டும் பிரார்த்திக்குமாறு கேட்கிறார்கள், எனக்காக அவர்கள் அதிகமதிகமாக பிரார்த்திக்கிற போது நானும் அவர்களுக்காய் தினந்தினம் பிரார்த்தித்து கொண்டேயிருக்கிறேன்...
என் வாழ்க்கை தான் நான் கண்ட அற்புதம்,
பிரார்த்தனைகள் எப்போதும் என் ஆயுதம்,
என் நம்பிக்கை எனை காக்கும் கேடயம்.
புகழனைத்தும் என் இறைவனுக்கே சமர்ப்பணம்!


No comments: