வளைகுடா நாடுகளின்
வாழ்க்கைமுறை விசித்திர அனுபவங்களை நமக்குக் கற்றுத் தந்திருக்கிறது.
உணவு , உடை , கலாச்சார மாற்றங்கள்
நம்மிடம் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன.
அதையெல்லாம் கொஞ்சம் கொஞ்சம்
இந்தத் தொடரில் தொட்டுக் காட்டலாம்.
இப்போது நான் வேலைசெய்த பேக்டரிக்குப் போவோம்.
அங்கே கொஞ்சம் வேலை இருக்கு.
அதை முடித்து விட்டு மற்ற விஷயங்களைத் தொடரலாம்.
எங்கள் பிளாஸ்டிக் செக்ஷனுக்கு இரண்டு சூப்பர்வைசர்கள்.
இருவருமே லெபனானிகள்.
எக்ஸ்டுரூடர் செக்ஷனுக்கு ஏழடி உயரத்தில் வாட்டசாட்டமான ஒருவர்.
வயது நாற்பதுக்கு மேல் இருக்கும்.
பெயர் அனீஸ்.
அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
காரணம் என் மகன் பெயர் அனஸ்.
அவரும் என்னிடம் அன்பாக நடந்து கொள்வார்.
மற்றொருவர் இளைஞர் .
பிளாஸ்டிக் கட்டிங் செக்ஷன் சூப்பர்வைசர்.
பெயர் ...
நம்ம அபிமான கிரிக்கெட் கேப்டனின் பெயர்தான். டோனி.
இருவர் இருந்தாலும் அனீஸ்க்குத்தான்
நிறைய அதிகாரம்.
ஒரு மெஷின் ஹெல்ப்பராக வேலை செய்து கொண்டிருந்த என்னை ஒருநாள்
அனீஸ் அழைத்தார்.
போனேன்.
ஐந்து ரியாலை என்னிடம் தந்து
ஒன் பாக்கெத் பிஸ்கூத்
ஒன் பாக்கெத் மால்புரோ
ஒன் போத்தல் மோயா
யல்லாஹ் ...ரோ ... என்றார்.
நான் தலையும் வாலும் புரியாமல்
தலைய பிச்சுகிட்டு வெளிய வந்தேன்.
அவர் சொன்னது எதுவுமே எனக்கு
சரியாக விளங்கவில்லை.
ஒரு சீனியர் ஆப்பரேட்டரிடம் அவர் சொன்னதை தட்டுத் தடுமாறிச் சொல்லி விளக்கம் கேட்டேன்.
அந்தாளு பெரிய கெத்துல ...
" கம்பெனி கேட்டுக்கு வெளியே ஒரு மலையாளி பெட்டிக்கடை வச்சிருக்கான்.
அவன்கிட்டபோயி கேளு. நீ சொல்றதைத் தருவான் " னு சொல்லி பேச்சை முடிச்சிகிட்டான்.
பொதுவாக ...
பேக்டரியில் புதிதாக வேலைக்குப்போன ஆட்கள் யாரையும் பழைய ஆட்கள் பலருக்கும் பிடிக்கவில்லை.
சுமுகமாக பேசவோ பழகவோ சந்தேகங்கள் கேட்டால் சொல்லவோ மாட்டார்கள். எரிந்து விழுவார்கள்.
இவர்களால் தங்கள் வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ என்ற பயமும்கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
அந்த சீனியர் சொன்னதுபோலவே
கம்பெனிக்கு வெளியே இருந்த பெட்டிக்கடைக்குப் போனேன்.
போகும்போதே அனீஸ் சொன்ன வார்த்தைகளை மறந்து விடாமல் இருக்க மந்திரம் போல் சொல்லிக் கொண்டே போனேன்.
பெட்டிக்கடை சேட்டன் எந்தான்னு கேட்டு.
அனீஸ் சொன்னதை அப்படியே சொன்னேன்.
ஆருக்காணுன்னு கேட்டான்.
அனீஸ்க்குன்னு சொன்னேன்.
அவனுக்கு மனசிலாயி.
ஒரு பாக்கெட் பிஸ்கெட்
ஒரு பாக்கெட் மால்பரோ சிகரெட்
ஒரு பாட்டில் தண்ணீர் தந்து மீதி ஒரு ரியாலோ ஐம்பது ஹலாலாவோ தந்தான்.
வெற்றிப் பெருமிதத்தோடு அவற்றை வாங்கிக் கொண்டு வந்து அனீஸிடம்
கொடுத்தேன்.
மிச்சமுள்ள ஐம்பது பைசாவை
என்னிடமே தந்து எடுத்துக்கோன்னு
சொன்னார்.
நான் பதறிப்போய் .. நோ தேங்ஸ்னு
அவரோட மேசை மேல வச்சேன்.
அது அனீஸ்க்கு மிகுந்த கோபத்தையும்
ரோஷத்தையும் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
முகம் சிவந்து போனவராக எழுந்து கோபத்துடன் அதை என் கையில் திணித்து யல்லாஹ் ..ரோ என்று சொல்லி விரட்டி விட்டார்.
நானும் அவரது கோபத்தைக் கண்டு
அரண்டு ஒன்றும் சொல்லாமல் அவரது கேபினை விட்டு வெளியே வந்து விட்டேன்.
பிறகு நம்மாளு ஒருத்தரு சொன்னாரு...
" அவன்மாரு என்ன தந்தாலும் வேண்டான்னு சொல்லப்படாதுடா.
வாங்கிக்கணும். இல்லங்கில் அவன்மாருக்கு தேச்சியம் உண்டாகும் "
வாழ்க்கையில் முதன்முதலாக வாங்கின
சம்பளத்தைப் பற்றி நண்பர்களின் நிறைய பதிவுகள் வந்துகிட்டு இருக்கு.
இது வாழ்க்கையில் முதன் முதலாக
நான் வாங்கிய டிப்ஸ் பதிவு.
கடைசியும் அதுதான்.
ஓரிரு வாரங்களிலேயே பேக்டரியின்
சூழ்நிலைகள் நமக்கு அத்துப்படியாகி விட்டன. வேலைப்குப்போக காலையில் ஐந்து மணிக்கு எழுந்தாக வேண்டும்.
இரண்டு ரூம்கள்
எட்டுபேர்.
ஒரே ஒரு பாத்ரூம்.
எட்டுபேரும் ரெடியாக ஒருமணி நேரம் ஆகும்.
ராத்திரியே ஆக்கி வச்ச சோறையும் குழம்பையும் பிளாஸ்டிக் கவர்களில்
பேக் செய்து ஒரு சாயாவும் குடித்து வெளியே வந்தால் பர்ஸ்ட் ஷிப்ட் வேலைக்கு ஏராளம்பேர் தயாராகி வெளியே கம்பெனி பஸ்ஸுக்காக காத்திருப்பார்கள்.
பஸ் நிற்குமிடத்திற்கு அருகிலேயே
குபுஸ் பேக்டரியும் கடையும் உண்டு.
ஆளுக்கொரு சாத்தல் குபுஸ் வாங்கி
வைத்துக் கொள்வோம்.
வேலை செய்து கொண்டே காலை ஒன்பது மணிக்கு அதை சாப்பிடுவோம்.
நல்ல ருசியாக இருக்கும்.
பஸ் வந்தவுடன் அதில் ஏறி பேக்டரிக்கு
ஏழு மணிக்கு முன்னால் போய் சேர்ந்து விடலாம்.
அங்கே நைட் ஷிப்ட் முடிந்த தோழர்கள்
எங்கள் வருகைக்காக காத்திருப்பார்கள்.
மதியம் 12 1/2 மணிக்கு சாப்பாடு நேரம்.
பெரிய சாப்பாட்டு ஹால் உண்டு.
ஏசி வசதியோடு குளு குளுன்னு இருக்கும்.
அங்கே உட்கார்ந்து சாப்பிட்டு கதைபேசி
சிகரெட் குடித்து முடித்தால் ஒரு மணிக்கு பெரிய சைரன் ஒலிக்கும்.
அதோடு எழுந்து போய் வேலைகளைத் தொடர்வோம்.
மாலை மூணரை மணிவரை வேலை.
செகன்ட் ஷிப்ட் ஆட்கள் வந்தவுடன்
நாங்கள் கிளம்பி விடுவோம்.
பஸ்ஸில் ஏறும்போதே நண்பர்களோடு
சேர்ந்து அரட்டையும் சிரிப்பும் ...
பள்ளிக்கூடம் விட்டு வரும்
குழந்தைகளைப்போல ஆகி விடுவோம்.
அறைகளுக்கு வந்தால் கேட்கவே வேண்டாம் ....
பாட்டும் கதைகளும் சாயாவும் பண்டமும்
ஒரு சிறைவாழ்க்கையில் கிடைத்த சந்தோஷங்களைப்போல அனுபவிப்போம்.
இப்படி பிரச்சினை எதுவுமில்லாமல்
போய்கொண்டிருந்த நிலையில்
மூன்று மாதங்களுக்குப் பிறகு
ஒரு பிரச்சினை உருவெடுத்தது.
வேலையை தொடர்வதா வேண்டாமா
என்ற குழப்பத்தை ஏற்படுத்தி
மன நிம்மதியைக் கெடுத்தது.
அதை
அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறேன்.
இன்ஷா அல்லாஹ் .
No comments:
Post a Comment