Wednesday, September 16, 2020

குர்ஆன் என்ன சொல்கிறது?"

 Aashiq Ahamed



"குர்ஆன் என்ன சொல்கிறது?" என்ற தலைப்பில், புலிட்சர் விருது பெற்றவரும், பெரிதும் மதிக்கப்படும் வரலாற்று ஆசிரியருமான கேரி வில்ஸ், சிகாகோவில் ஆற்றிய ஒரு உரையை காண முடிந்தது. இந்நிகழ்ச்சியில், குர்ஆன் குறித்து கேரி வில்ஸ் கூறும் கருத்துக்களுடன் முழுமையாக உடன்பட முடியவில்லை என்றாலும், கவனிக்கத்தக்க காணொளி என்பதில் நிச்சயம் மாற்றுக்கருத்தில்லை. 

மிக பொறுமையாக, எளிதாக புரியும் ஆங்கிலத்தில் இவர் பேசியது என்னை ரொம்பவே கவர்ந்தது. பார்வையாளர் கேள்வி ஒன்றிற்கு கேரி பதிலளிக்கும்போது பின்வரும் சம்பவம் நடக்கிறது.

"9/11 இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு நடந்த ஒரு கூட்டத்தில், துறைச்சார் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், இப்படியான நிகழ்வுக்கு பின்னணியில் இஸ்லாம் இருக்கிறதா என உரையாடல் சென்ற நிலையில், ஒரு நண்பர் கேட்டார், 

'இங்கே யாராவது குர்ஆனை படித்திருக்கிறீர்களா?'

இல்லை. அங்கே இருந்த யாருமே குர்ஆனை படித்திருக்கவில்லை. அந்த நண்பர் என்னிடம் திரும்பி ஆச்சர்யத்துடன் கேட்டார். 

'கேரி, நீங்களுமா? உங்களை மத ஒப்பீட்டு துறை வல்லுநர் என்றல்லவா நினைத்திருந்தேன்'

நான் வெட்கி தலைகுனிந்தேன். ஆம், இது தான் பிரச்சனை. என்னுடைய அந்த முட்டாள்தனத்தை சரி செய்யவே இன்று வரை முயற்சி செய்துக்கொண்டிருக்கிறேன். அன்று நான் சந்தித்த சங்கடமும், அவமானமும் தான் குர்ஆன் பற்றிய நூலை எழுத தூண்டியது. நான் செல்லும் பல இடங்களிலும் இந்த கேள்வியை கேட்டு வருகிறேன். இந்த அரங்கத்திலும் அக்கேள்வியை முன்வைக்கிறேன். உங்களில் யார் குர்ஆனை படித்திருக்கிறீர்கள்?" 

நூற்றுக்கணக்கானோர் குழுமியிருந்த அந்த அரங்கத்தில் ஒரு சிலரே கையை உயர்த்துகிறார்கள். 

"பாருங்கள், உங்களை அவமதிப்பது என்னுடைய நோக்கமல்ல, நீங்கள் அப்படி நினைத்தாலும் பிரச்சனை இல்லை (சிரிக்கிறார், அரங்கத்திலும் சிரிப்பொலி). உண்மையில் நாம் எல்லோருமே வெட்கி தலைகுனியத்தான் வேண்டும். உலக மக்கட்தொகையில் நான்கில் ஒருவர் முஸ்லிம் என்ற சமூக அமைப்பில் வாழ்கிறோம். ஆனால் நாம் குர்ஆனை படிக்கவில்லை, அதனால் எது உண்மையான இஸ்லாம் என்பது நமக்கு தெரிவதில்லை. இருப்பினும், இஸ்லாம் தவறாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்று மட்டும் குற்றம் சாட்டுகிறோம். நாம் சுதந்திர சமூகத்தில் வாழ்கிறோம். இந்த சுதந்திரத்தை பயன்படுத்தி வருங்காலத்தில் அதிகமான மக்கள் முஸ்லிம்களை வெறுப்பதிற்கு பதிலாக குர்ஆனை படிப்பார்கள் என நான் நிச்சயமாக நம்புகிறேன்" 

கேரி வில்ஸ் பங்கேற்ற, 13 இலட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை இதுவரை பெற்றுள்ள இந்நிகழ்ச்சியை முழுமையாக காண: https://www.youtube.com/watch?v=h6NWfVWxqSM

படம்: கேரி வில்ஸ் (இடது) மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.



Aashiq Ahamed

No comments: