Sunday, September 20, 2020

நானும் இந்தியும்...

 வாழ்க்கையில் பெரும்பகுதி காலம் வெளிநாடுகளில் கழித்தும் அதுவும் பெரும்பாலும் வடமாநிலத்தார், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என இந்தி பேசுவார் மத்தியில் கழித்தும் இந்தி கற்றுக் கொள்ளவில்லை... அதனால் எனக்கு எந்த இழப்பும் ஏற்படவுமில்லை...

அதை ஒரு பிளஸ் ஆகக் கருதுவார் உண்டு. எனக்கு அது பிளஸ் ஆகவும் இல்லை, மைனஸ் ஆகவும் இல்லை... ஆனால் என்னோடு பயணித்த பலர் இந்தியில் பொளந்து கட்டுவார்கள்...

எனக்குத் தமிழ் நாட்டு நண்பர்கள் போல ஏராளமான வட மாநில நண்பர்கள் உண்டு. மற்ற நாட்டு நண்பர்களும் உண்டு... அப்போது அவர்களிடம் உரையாட அண்ணா சொன்னது போல ஆங்கிலம் கைகொடுத்தது..

ஆனால் எங்களோடு பணியாற்றிய பலருக்கு, தமிழ் கற்றுக் கொடுத்த அனுபவம் உண்டு... சவூதியில் எங்களுடன் பணியாற்றிய பிலிப்பைன்ஸ் நண்பர்கள் தமிழ் பேசுவார்கள்.

 எனக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக அவர்கள் அன்பில் எந்தக் குறையும் வைக்கவும் இல்லை...

ஒருவேளை அன்று அந்த மாணவப் பருவத்தில் ஏற்பட்ட திராவிடப் பற்றும் பெரியார், அண்ணா, கலைஞர் பாசம் காரணமாக இருக்குமா என்றும் தெரியவில்லை...

இந்திப் படங்களும் அதிகம் பார்ப்பதில்லை... ஆனால் நண்பர்கள் இந்திப் பாடல்கள் போடும்போது தடுப்பதும் இல்லை...

அது எனக்கு எந்த வகையிலும் சுகமாகவும் சுமையாகவும் இல்லை... இதற்கெல்லாம் முக்கிய காரணம் அது என்மீது எப்போதும் திணிக்கப்படவே இல்லை... அதனால் அதன் மீது எந்தப் பகையுமில்லை...

எங்கள் காலம் அப்படி இருந்தது.. இப்போது எண்ணிப் பார்க்கிறேன்... வலுக்கட்டாயமாகத் திணிக்கிறீர்கள்... எங்கோ வலிக்கிறது...

இதுவே அதற்கான காரணமாக இருக்குமோ...?

தெரியவில்லை....

படம்.... துபாய் சென்றபோது அங்கே சந்தித்த ஒரு சர்தாரி நண்பருடன்...



Athavullah Athavullah

No comments: