Wednesday, October 24, 2018

ஸஹாபாக்கள் என்றால் யார்?


அண்ணல் நபி(ஸல்) அவர்களின் திருத்தோழர்கள் -1
---------------------------------------------------------------------------------
“கண்ணுடைய மாந்தர்களே! உங்கட்(கு) இந்தக்
காசினியில் இரவிருட்டில் பாதை காட்டும்
விண்மீன்கள் போன்றவராம் என்றன் தோழர்!
வெற்றிகளைப் பெற்றிலங்க வேண்டும் என்றால்
அன்னவரைப் பின்பற்றி வாழ வேண்டும்;
அவர்களிலே அனைவருமே வெற்றி யாளர்!’’
என்(று)உவந்த இறுதிநபித் தோழர் கொண்ட
ஏற்றம்,முன் னேற்றமெலாம் யாவை? காண்போம்:-

(1)
உலகத்தில் தலைவர்கள் வரலாறு படைப்பது இயல்பானதுதான். ஆனால் ஒரு தலைவரின் தோழர்களும் தொண்டர்களும் கூட புகழார்ந்த வரலாறு படைத்தனர் என்றால் அது அரிதானதாகும்.ஒரு தலைவரின் மறைவுக்குப் பிறகும் அவரை முற்ற முழுக்கப் பின்பற்றிய தோழர்கள், “வேறு எங்கும் காண இயலாத அளவுக்கு எண்ணிக்கையிலும் தரத்திலும் ஒத்திருக்கும் வீரர்களாய்” உயர்ந்து விளங்குகின்றனர் என்றால் அது அரிதினும் அரிதாகும்.

நானிலத்திற்கு அரிதாகத் தெரிகின்ற இந்த ஸஹாபா பெருமக்களின் சிறப்பை அண்ணல் நபி(ஸல்) அவர்கள் நன்றாக அறிந்திருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள்: “விண்மீன்கள் வானத்திற்குப் பாதுகாப்பு;அவை மறைந்துவிட்டால் வானத்திற்கு வாக்களிக்கப்பட்டது நடக்கும் (இருள் கப்பிவிடும்).அதைப் போல நான் என் தோழர்களுக்குப் பாதுகாப்பு,வழிகாட்டி; நான் சென்றுவிட்டால் என் தோழர்களுக்கு வாக்களிக்கப்பட்டது நடந்தே தீரும். என் தோழர்கள் என் சமுதாயத்துக்கு வழிகாட்டிகள்; அவர்கள் சென்றுவிட்டால் என் சமுதாயத்திற்கு வாக்களிக்கப்பட்டது நடக்கும்.”

அண்ணல் நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கையில் இருந்து நம்முடைய உள்ளத்தை,இல்லத்தை, உலக வாழ்வை, மறுமை வாழ்வை ஒளிமயமாக்கும் வழி என்ன என்பதை அறிவார்ந்த நன்மக்கள் எளிதில் உய்த்து உணர முடியும்.

‘என்னைப் பின்பற்றுங்கள்’ என்று எல்லாத் தலைவர்களும் சொல்வார்கள். எனினும் தன்னைப் பின்பற்றுபவர்களும் அந்தத் தகுதிக்கு உரியவர்கள்தாம் என்று அவர்களில் பலரை அந்தத் தலைவர்கள் அங்கீகரித்ததில்லை; அங்கீகரிக்கக் கூடிய தகுதி இல்லாமலும் இருந்திருக்கலாம்.ஆனால் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்: “என் வழிமுறையையும் நேர்வழி நடந்தவர்களின் (ஸஹாபாக்களின்) வழிமுறையயும் பின்பற்றுங்கள். அந்த வழிமுறையை உங்கள் கடைவாய்ப் பற்களால் கவ்விப் பிடித்துக் கொள்ளுங்கள்!” அவர்களே மற்றொரு சந்தர்ப்பத்தில் தங்களுடைய திருத்தோழர்கள் பற்றி இவ்வாறு திருப்தி தெரிவித்தார்கள்: “எவனுடைய கையிலே என் உயிர் உள்ளதோ அவன்மீது சத்தியமாக மனிதர்களிலேயே நீங்கள்தாம் எனக்கு மிகவும் விருப்பத்திற்குரியவர்கள்.”

இவ்வாறு அண்ணல் நபி(ஸல்) அவர்களாலேயே மனப்பூர்வமாக அடையாளம் காட்டப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டு, பாராட்டப்பட்ட திருத்தோழர்களின் திரட்சியாகத் திகழ்ந்த முஸ்லிம் சமுதாயத்தைத்தான் அல்லாஹ் தன் இறுதித் திருமறையில்- திருக் குர்ஆனில்- “மேலான சமுதாயம்” என்றும் “நடுநிலையான சமுதாயம்” என்றும் சிறப்பித்துக் கூறுகிறான். “அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்” என்றும் உறுதி செய்கிறான். திருத்தோழர்களின் குணப்பண்புகள் முதலியன பற்றியும் பாராட்டுகிறான். இவையெல்லாம் திருத்தோழர்கள், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தை, உவப்பைப் பெறுவதில் வெற்றிபெற்றுவிட்டார்கள் என்பதை அறிவிப்பவை ஆகும். இதற்கும் மேல் பெறுவதற்கு ஸஹாபா பெருமக்களுக்கு இந்த உலகத்தில் எந்த வெற்றியு இல்லை!

பெறுவதற்கு அரிய –ஆனால் பெற்றாக வேண்டிய- வெற்றியைப் பெற்ற திருத்தோழர்கள், அதை எப்படிப் பெற்றார்கள்?

(இன்ஷா அல்லாஹ் தொடர்வோம்-அறிவோம்)

--- ஏம்பல் தஜம்முல் முகம்மது

Yembal Thajammul Mohammad

No comments: