“மன்னிக்கவும். நான் அடுத்த சாதனைக்கான ஆராய்ச்சி அலுவல்களில் மும்முரமாக இருப்பதால் நேர்காணலுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.”
செய்தியாளர்களின் கோரிக்கைக்கு இவ்வாறு மறுப்பு சொன்னவர் படத்தில் நீங்கள் காணும் விஞ்ஞானி ஆர்தர் ஆஷ்கின் எனும் 96 வயது இளைஞர்!
அப்படியென்ன செய்துவிட்டார்?
சிறிய பாகங்களைப் பிடித்துக்கொள்வதற்காக ஒரு இடுக்கி (ட்வீஸர்) பயன்படுத்தப்படுவதை, நாமெல்லாம் 'வாட்ச் ரிப்பேர்', 'மொபைல் போன் ரிப்பேர்' கடைகளுக்குச் சென்றிருந்தால் பார்த்திருப்போம். இல்லையா? அதுபோல நானோ, மைக்ரோ துகள்களில் நடைபெறும் அணு ஆராய்ச்சிகளில் கண்களுக்கே புலப்படாதா ஒன்றைப் பற்றிப் பிடித்துக்கொள்ள ஒரு உபகரணம் வேண்டுமென்றதை உணர்ந்து இவர் தொடங்கிய ஆராய்ச்சிதான் 'ஆப்டிகல் ட்வீஸர்'. லேசர் உயர் ஒளிக்கற்றைகளைச் செலுத்தி அதுதரும் அழுத்தத்தின்மூலம் பிடித்துக்கொள்ளும் நுட்பத்தைக் கண்டுபிடித்ததுதான் இவரது சாதனை. குறிப்பாக தற்போது 'லேசர்' மூலம் செய்யப்படும் கண் அறுவை சிகிச்சையின் போது பேருதவி புரியும் என்று மருத்துவத்துறை மகிழ்கிறது.
அமெரிக்காவின் பெல் ஆராய்ச்சி மையத்தில் மூத்த விஞ்ஞானியாக இருக்கும் இவர், இயற்பியலின் ஒளியியல்துறையில் மிகப்பெரிய சாதனைபுரிந்து, 96 வயதில் (இவர்தான் உலகிலேயே இதுவரை 'நோபல்' பெற்றிருப்பவர்களில் மூத்த வயதுடையவர்) 2018ம் ஆண்டுக்கான பரிசினை (மூன்றிலொருவராகப்) பெற்றிருக்கிறார். இவரிடம் இன்று செய்தியாளர் கேட்டபோதுதான் அவ்வாறு பதிலளித்துள்ளார்.
ஆமா அப்படியென்ன அடுத்த ஆராய்ச்சி?
சூரியசக்தியினை ஆக்கபூர்வமாக்குவது எப்படி? என்று தொடர்கிறதாம் தொன்னூற்றாறு வயது! வாழ்த்துகள்.
-Rafeeq Sulaiman -
No comments:
Post a Comment