Sunday, October 14, 2018

”நான் பெண்மக்களின் தந்தை!”


”நான் பெண்மக்களின் தந்தை!”
---------------------------------------------------
(இந்த 2018 ஜனவரியில் ஆஸ்திரியா நாட்டில் முதலாவதாகப் பிறந்த பெண்குழந்தையின் மீது அளவு கடந்த பொறாமையும் வெறுப்பும் முகநூல் மூலம் வீசப்பட்டன.

பின்னர் அந்தக் குழந்தையின் படம் முகநூலில் இருந்து நீக்கவும்பட்டது.(கீழே கொடுக்கப்பட்டுள்ள படம்)

செய்தித்தாள்களோ (”Austria: First Female Baby Born in 2018 was a Moslem Subhuman”) 2018-இல்
ஆஸ்த்ரியாவில் முதலாவதாகப் பிறந்த குழந்தை முஸ்லிம் பெண்குழந்தை என்றும் -அதுவும் ”மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட (Subhuman) குழந்தை" என்றும் - இரட்டை வெறுப்பைத் தலைப்புச் செய்தியாகவே வெளியிட்டன.

இவற்றை கவனத்தில் கொண்டு இந்தக் கவிதையைப் படிப்பீர்களாக.

********************************************
“நான் பெண்மக்களின் தந்தை என்பதில் பெருமைகொள்கிறேன்” என்பது அண்ணல் நபி(ஸல்)அவர்களின் பெருமிதப் பிரகடனம்.
***********************************************************************
”நான் பெண்மக்களின் தந்தை!”

-------------------------------------------
அன்னையவர் காலடியில்
அடையஅரும் சொர்க்கத்தை
முன்னிறுத்திக் காட்டியஎம்
முஹம்மதுவே, நாயகமே! ................1

உற்றாரில் உறவினரில்
ஊருலகில் தாய்தானே
முற்றமுதற் சுற்றமென
முன்மொழிந்த நாயகமே! ……….…..2

‘பெண்மகவைப் பெற்றதுடன்
பேணிவளர்த்(து) ஆளாக்கும்
புண்ணியத்தார் சொர்க்கம்
புகுவர்’என்ற நாயகமே! ................3

பெண்ணிற்கும் கல்வி
பெறுவதொரு கடமையென
மண்ணுலகில் முன்னுரைத்த
மாமணியே, நாயகமே! …………..…4

விதவையென வேமக்கள்
வெறுப்பவரை அன்னையராய்
மதிப்பளிக்கச் செய்தபுது
மாண்பாளர் நாயகமே! ………..…....5

அமல்களுக்கு நற்கூலி
ஆணெனினும் பெண்ணெனினும்
சமம்என்ற வரலாற்றைச்
சாதித்த நாயகமே! ………………..….6

மண்ணிற் புதைத்தவர்க்கு
மத்தியிலே, ‘ நான்தந்தை
பெண்மக்க ளுக்’கென்றே
பெருமைகொண்ட நாயகமே! ……….7

---ஏம்பல் தஜம்முல் முகம்மது.

********************************************
இந்த நாளின் முக்கியத்துவம் குறித்து நினைவூட்டிய நண்பர் Rafeeq Sulaiman அவர்களுக்கு நன்றி)

Yembal Thajammul Mohammad

No comments: