Thursday, May 27, 2010

நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!

உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்காக வருந்துகிறோம். இப்போதைய சூழலில் எங்கள் வலி, நம்பிக்கை இரண்டுமே உங்கள் இரங்கலை எதிர்த்து நிற்கின்றன. எங்களுக்கு வழங்கப்பட்டதும் மறுக்கப்பட்டதுமான, எங்களுக்கு தேவைப்படுவதும், தேவைப்படாததுமான உஙகளின் இரங்கல் செய்திகளை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. ஏனெனில் நடந்தவற்றையோ, நடக்கவிருப்பவற்றையோ அவை எதுவும் செய்யப்போவதில்லை.

எங்களின் இறந்தகாலத்தையும் எதிர்காலத்தையும் விளக்கவல்ல ஆற்றல் இரஙகலுக்குக் கிடையாததால், ‘நினைவஞ்சலி’ என்ற சொல் எங்களுக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறது.

வெளிச்சத்தில் நாங்கள் எங்கள் இல்லஙக்ளை விட்டு வெளியேறினோம்; இருளில் எங்கள் இல்லங்களிலிருந்து மறைந்து போனோம்; வாழ்க்கைப் பாதை மாறுமென்ற நம்பிக்கையில் எங்கள் குடும்பங்களை விட்டு தூர வெளியேறி ஆயுதங்களை நோக்கி நடந்தோம்; தற்போது பூமியில் நாங்களே கண்டறிய முடியாத இடங்களுக்குள் எங்கள் உடல்கள் நுழைந்ததால் வெடித்துச் சிதறி துகள் துகளாய் எல்லா இடங்களிலும் பரவியிருக்கிறோம். இங்கே நாங்கள் செத்துக்கொண்டும், உயிரோடும் இருப்பதால் உஙகள் தொண்டைக்குழிக்குள் பேயாக சிக்கிக்கொண்டு வெளிப்படாமலிருக்கும் உஙகள் இரங்கல் வார்த்தைகளுக்குப் பின்னும் நாங்கள் வாழ்வோம்.

விரும்பியும் விரும்பாமலும் அடுத்தவர்களின் போர்களில் நாங்களும் இணைந்தோம்; நாங்கள் செல்ல வேண்டிய பாதை மிக அருகிலிருந்த போதும் அடுத்தவர்களின் பாதையில் முன்னேறி நடந்தோம்; நாங்கள் உதிரிகளாய் இருந்தோம்; முக்கியமானவர்களாய் இருந்தோம்; நாஙகள் நண்பர்களாய் இருந்தோம்; பகைவர்களாய் இருந்தோம்; நாஙகள் பிரச்சினைக்குரியவர்களாய் இருந்தோம்; எண்ணிக்கையிலடஙகாதவர்களாய் இருந்தோம்; இச்சிறிய நாட்டில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; இச்சிறிய உலகில் நாங்கள் உங்களிடமிருந்து வெகுதொலைவாய் உணர்ந்தோம்; உங்கள் மக்கள் நாங்கள்; உங்கள் மக்களல்லாதவரும் நாங்கள்.

நீங்கள் எங்களை நினைவுகூர்வீர்கள் என்று உங்களுக்காக காத்திருக்க முடியாது

நாங்கள் அழிந்தோம்; வாழ்ந்தோம்; அழிவதற்கும் வாழ்வதற்கும் நாங்கள் எண்ணிக்கையில் குறைவானவர்கள், அழிவதற்கும் வாழ்வதற்கும் அதிகமானோரும் நாங்கள். எங்களில் சிலருக்கு குறைவான பணமும், குறைவான உணவும் இருந்தது; எங்களுக்கு பிள்ளைகள் இருந்தனர்; விரும்பியும் விரும்பாமலும் எங்கள் பிள்ளைகளை இழந்தோம்; எங்கள் கரங்களிலிருந்து அவர்கள் கிழித்து எடுத்துச்செல்லப்பட்டார்கள்; அவர்கள் எங்களோடிருக்க நாங்கள் போராடினோம்; அவர்களைக் காப்பாற்ற எஙகளிடமிருந்து பிரித்து எறிந்தோம்; அவர்களை நோக்கிய துப்பாக்கிக் குண்டுகளை எங்கள் உடலில் தாங்கி அவர்களுக்கு முன்பாக மரித்துப்போக எண்ணி அவர்களை எங்களின் பிடிக்குள் வைத்திருந்தோம்.

எங்களில் சிலர் மரித்தோம்; ஆனால் எங்களில் சிலர் வாழ்ந்தோம்; வாழ்வதற்காக பிள்ளைகளிடம் போரிட்ட நினைவுகளும் எங்களுடன் வாழ்ந்தது. போர் எனப்படும் இந்த ரத்தவெள்ளத்திலிருந்து வெளியேறும் வேகத்தில் எங்கள் செவிகள் நிலத்தில் வீழ்ந்துவிட்டன. எனவே உங்கள் இரங்கலை நாங்கள் செவிமடுக்க முடியாது. எங்கள் இருத்தல் நிமித்தம், எங்கள் விழிகளையும் மூடிக்கொள்ள நேர்ந்ததால் உங்களுக்குள் என்னவிருக்கிறது என்பதயும் காண இயலவில்லை. பசியினாலும் கோபத்தாலும் எங்கள் வாயையும் மூடிக்கொண்டோம். எங்கள் குடும்பஙகளைப்பற்றி, நண்பர்களைப்பற்றி, தோழர்களைப்பற்றி, எங்களை வேட்டையாடிய, எங்களோடு ஓடிவந்த, எஙகளோடு மடிந்த தலைவர்களைப் பற்றி எங்களுக்குத் தெரிந்திருந்தது; தெரியாமலுமிருந்தது.

எல்லா திசைகளுக்கும் நாங்கள் முகங்கொடுத்தோம். எங்களில் சிலர் வாழ்ந்தோம். இன்னும் நாங்கள் இருக்கிறோம். உங்கள் நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதை உங்களுக்குத் தெரிவிப்பதற்கு வருந்துகிறோம்.

ஆங்கில மூலம் - வி.வி.கணேசநாதன்

தமிழில் : தோழர் கவின் மலர்

(20-05-2010 அன்று சென்னையில் நடந்த பானுபாரதியின் ‘பிறத்தியாள்' கவிதைத்தொகுப்பு வெளியீட்டில் வாசிக்கப்பட்டது)
Source : http://www.luckylookonline.com/2010/05/blog-post_2917.html
நினைவஞ்சலிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது!:

No comments: