Thursday, May 6, 2010

அந்தரத்தில் ஊசலாடும் உயிர்களுக்கு வாழ்த்துக்கள் !

எமது இப்பொழுதைய ஒவ்வொரு அசைவுக்கும் முழுக் காரணகர்த்தா நாங்களல்ல. தாயின் கருவறையிலிருந்து வெளிவருவது முதற்கொண்டு மண்ணோடு அழிந்துபோகும் வரை ஒரு மனிதனால் தனித்து வாழ்வதென்பது எப்பொழுதும் சாத்தியப்படாத ஒன்றாகவே இருக்கிறது. தெரிந்த பராயம் வரும்வரை உடல் துடைத்து, உணவூட்டி, அரவணைத்துப் பார்த்துப் பார்த்து வளர்த்தும், பிறகும் எமக்கெனவே சேவைகள் செய்துவரும் உறவுகள் முதல், நாம் இப்பொழுது அணிந்திருக்கும் ஆடை, உண்ணும் உணவு, வசிக்க இருப்பிடம் மற்றும் எல்லாவற்றிற்கும் பிறரையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவ்வாறு ஒரு மனிதன் சார்ந்திருக்கும் அனைவருமே, அவனுக்கான உழைப்பாளர்கள்தானே? ஆகவே இன்றைய உழைப்பாளர் தினத்தில் நாம் நம்மைச் சூழவிருக்கும் அனைவரையும் நினைவு கூறி, உழைப்பாளர் தின வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொள்வோம். இன்றைய தினத்தில் மாத்திரமல்லாது அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும், எப்பொழுதும் தயக்கமின்றி செய்துகொடுப்போம்.

குளிரறைகளில் அமர்ந்துகொண்டு, எந்த வித உடல் களைப்புமின்றி, வேலையின் போது ஏற்படும் சிறு சிறு இடைஞ்சல்களுக்காக பெரிதும் சலித்துக் கொள்ளும் நாம், உழைப்பாளர்களெனும் பட்டியலின் கீழ் நேரடியாக உள்ளடக்கப்படக் கூடிய மனிதர்களைப் பார்த்திருக்கின்றோமா? நான் பார்த்திருக்கிறேன்.

மத்தியகிழக்கு நாடொன்றில் பணிபுரியப் போயிருந்த சமயம், பல மாடிக் கட்டிடம் ஒன்றின் உச்சியில் தொங்கிக் கொண்டு கண்ணாடி துடைக்கையில் தவறிக் கீழே விழுந்து அந்த இடத்திலேயே சிதைந்து இறந்து போன ஒரு நேபாள நாட்டுத் தொழிலாளியைப் பார்த்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது இடத்தில் இன்னுமொருவர் தொங்கிக் கொண்டிருந்தார்.


தினந்தோறும் காலைவேளைகளில் இது போன்ற கூலி வேலைகளுக்காக பாகிஸ்தானியர், ஆப்கானிஸ்தர்கள், நேபாளிகளெனப் பலரும் பல பிரதான தெருக்களில் கொடிய வெயிலில் வாடியபடி, தம்மை அழைத்துச் செல்பவர்களுக்காகக் காத்திருப்பதைக் காணலாம். வாழ்வதற்காக மனிதனுக்கு பணம் தேவையாக இருக்கிறது. அதனை நேர்மையாக ஈட்டும் இவர்களைப் பாராட்டலாம்.

பெருநகரங்களில் வானைத் தொடுமளவுக்கு எழும்பியிருக்கும் பிரமாண்டமான கட்டடங்களைப் பார்த்து வியந்தபடி கடந்துசெல்கிறோம். அந்த அழகு, அந்த பிரமாண்டம், அந்த நவீனத்துக்காக அந்தக் கட்டிடங்கள் எத்தனை உயிர்களைப் பலிகொண்டிருக்குமென ஒரு கணமேனும் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா? அந்தக் கட்டட வடிவத்தை வடிவமைத்ததற்காக, நிர்மாணித்ததற்காக பல நிபுணர்கள் விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றுக்கொள்ளும் சமயத்தில், அவர்களது கனவுகள் சாத்தியப்படுவதற்காக மிக அபாயமான களத்தில் நின்று, மிகச் சிரமத்துக்கு மத்தியில் அவற்றைக் கட்டியெழுப்பியவர்களைப் பற்றி எப்பொழுதேனும் நினைவுகூறப்படுகின்றதா? இன்றைய படங்கள் அவர்களது சிரமங்களைச் சிறிதளவு தொட்டுக் காட்டுகின்றன. பாருங்கள்.






















பார்க்கும்போதே உடல் சிலிர்க்கிறதல்லவா? தாங்கள் அறிந்திராத பிற நாடுகளுக்கு தொழிலுக்காக அனுப்பப்படும் தமது பிள்ளைகள், சகோதரர்கள், துணைகள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்ன பாடுபடுகிறார்களென நிறையப் பேர் அறிந்திருப்பதில்லை. இது போன்ற மிகக் கடினமான பணிகளெனத் தெரிந்திருந்தால் அனுப்பியிருக்கவும் மாட்டார்கள் அல்லவா?

சிந்திப்போம். அவர்களை கௌரவிப்போம்.

எனது இந்தப் பதிவை இது போன்ற எல்லா உழைப்பாளர்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் !

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.

1 comment:

Anonymous said...

WONDERFUL photos...difficult jobs