Friday, May 21, 2010

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!

 பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
 சிராஜ் அப்துல்லாஹ் ஆல்
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்

நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?


அன்பார்ந்த சகோதர, சகோதரரிகளே இந்த கேள்வி கேட்கப்டாத குடும்பங்கள் உள்ளதா?  உங்கள் அன்பிற்கினியவர்கள் உங்களை நோக்கி இந்த கேள்வியை கேட்டுவிட்டால் எப்படி இருக்கும் என்பதை ஒரு கணம் யோசித்துப்பாருங்கள்.

இந்த கேள்வியை கேட்டுவிட்டால்  ஆத்திரப்படாதவர்கள் எவரேனும் இருப்பார்களா? என்னைப் பார்த்து இக்கேள்வியை கேட்கிறாயே உனக்கு அவ்வளவு துணிச்சலா? என்று பதில் வரும் உடனே என் இஷ்டம் எனக்கு என்ன பிடிக்குதோ அதைத்தான் செய்வேன் என்று சாக்கு போக்கு கூறி பிரச்சினையிலிருந்து தப்பித்து இடத்தை காலி செய்துவிடுவார்கள்.

சரி இந்த கேள்வியை இவர்கள் கேட்டால் எப்படி இருக்கும்! சுயபரிசோதனை செய்துப் பார்ப்போமா?
உங்களை பெற்ற தாய் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறாள்
தாய்
ஏன்டா! மகனே நான் 10 மாதம் உன்னை வயிற்றில் சுமந்து பாலுட்டி, தாலாட்டி, சீராட்டி வளர்த்தேனே தனிக்குடுத்தம் போன நீ வாரம் ஒரு முறை கூட வந்து என்னை பார்ப்பதில்லையே ஏன்டா? தாய் ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே?
மகன்
சரி விடும்மா? ஏதோ ஊர் உலகத்துல எவனும் செய்யததா நான் செய்துட்டேனா? இதைப் போய் பெரிசு பண்ணி பேசுறியே உனக்கு அறிவு இருக்கா? எனக்கு பிசினஸ்-ல ஆயிரத்து எட்டு பிரச்சினை சரியா கவனிக்க முடியல அதனால உன்னை வாரம் ஒரு முறை கூட வந்து பார்க்க முடியல? இப்ப என்னாங்கறா? உன்னை பார்க்காதது ஒரு குத்தமா? அப்போ என்னை உன் பிள்ளை இல்லைன்னு சொல்லிடுவியா? என்ன!
உங்களுடைய வாதத்திறமையால் உங்களை பெற்ற தாயின் வாயை அடைத்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்! 

உங்கள் தந்தை இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
தந்தை
ஏன்டா! மகனே உன்னுடைய 5 வயசுல உனக்கு பொம்மை கார் வாங்கி கொடுத்தேன், 10 வயசுல உனக்கு சின்ன சைக்கிள் வாங்கி கொடுத்தேன்! 20 வயசுல உனக்கு மோட்டார் பைக் வாங்கி கொடுத்தேன்! 25 வயசுல உனக்கு கல்யாணம் பண்ணி அழகு பார்த்தேன் ஆனா நீ சம்பாதித்தவுடன் ஒரு சல்லி காசு கூட கிழவனான எனக்கு கொடுப்பதில்லையே! தந்தை ஸ்தானத்திலிருந்து நான் உனக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லடா என் மகனே? இந்த வயசான காலத்துல நான் யாருக்கிட்ட டா போய் கை ஏந்துவேன்! ஏன்னிடம் மருந்துவாங்க காசு இல்லை ஒரு 100 ரூபாய் இருந்தா கொடுடா?
மகன்
என்னப்பா? உனக்கு அறிவு இருக்கா! சின்ன வயசுல நான் கேட்டதெல்லாம் வாங்கி கொடுத்ததை போய் இப்ப சொல்லிக் காட்டுறியே? நீ எல்லாம் ஒரு அப்பனா? இது உனக்கு நல்லா இருக்கா? வயசாகி போனதால புத்தி கெட்டுப்போச்சா! இப்ப என்ன உனக்கு காசுதான வேணும் இந்த 5 ரூபாயை வெச்சுகிட்டு டீ, பன்னு சாப்பிடு இதுக்கப்பறம் காசு கீசுன்னு எங்கிட்ட வந்துடாத! மருந்துவாங்க காசு வேணும்னா உன்னுடைய இன்னொரு மகனிடம் போய் கேள்! என்ன தொல்லை பண்ணாத!
உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் தந்தையாரை வாயடைக்க செய்தீர்கள்! நீங்களோ அவரை சமாளித்துவிட்டீர்கள்! அந்த இடத்தில் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

உங்கள் மனைவி இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறார்!
மனைவி
என்னங்க! நமக்கு திருமணம் ஆகி 10 வருடங்களாகி விட்டது! அழகான 2 குழந்தைகளும் 2 பிளாட்டு நிலமும், கை நிறைய வருமானம் அபரிமிதமாக இருக்கு! இத்தனை காலம் என்னோடு அழகா வாழ்ந்து குடும்பம் நடத்திய நீங்கள் இப்போது என்ன பிடிக்கவில்லை என்று கூறுகிறீர்களே மனைவி ஸ்தானத்திலிருந்து நான் உங்களுக்கு எதில் குறை வைத்தேன்? சொல்லுங்கள்? ஏன் இன்னொரு கல்யாணம் செய்ய ஆசைப்படுறீங்க நானும் என் குழந்தைகளும் உங்களை விட்டா எங்க போவோம்?
   
கணவன்
என்ன ரொம்பத்தான் ஓவரா பேசுரே! பொம்பளைன்னு பார்க்கறேன் இல்லன்னா நடக்கறதே வேற? கணவன் என்கிற மரியாதை போயிடுச்சா? இந்த பேச்சே போதுமே உன்ன உங்க அம்மா வீட்டுக்கு அனுப்ப!
 எனக்கு வயசு இருக்கு, வருமானமும் இருக்கு இன்னொரு கல்யாணம் என்ன 4 கல்யாணம் கூட செய்ய தெம்பு இருக்கு உனக்கு விருப்ப மிருந்தா……………………………………????(சண்டை விபரீதமாக சென்றுக்கொண்டே இருக்கும்)

உங்களுடைய வாதத்திறமையால் உங்கள் அருமை மனைவியின் வாயை அடைத்துவிட்டீர்கள்!! அந்த இடத்தில் நீங்கள் வெற்றி பெற்றுவிட்டீர்கள்!

மஹ்ஷரில் உங்கள் இறைவன் இந்த கேள்வியை உங்களிடம் கேட்கிறான் என்று வைத்துக்கொள்வோம்!
அல்லாஹ் ஆதமின் சந்ததியைச் சேர்ந்தவனே! என் அடிமையே! நான் உனக்கு
  • நல்ல பெற்றோரை கொடுத்தேன்!
  •  நல்ல மனைவி மக்களை கொடுத்தேன்! 
  • அறிவுத் திறமையும் செல்வத்தையும் கொடுத்தேன்! 
  • சொத்துக்கள், சுகங்களை கொடுத்தேன்! 
  • கவுரவமான வாழக்கையை கொடுத்தேன்! 
  • உயிர்வாழ அனைத்தும் இலவசமாக கொடுத்தேன்! 
  • நேர்வழிக்கு அருள்மறை குர்ஆனையும் கண்ணியமாக வாழ்க்கை முறைக்காக நபிமார்களையும்  அணுப்பினேன்
 முஸ்லிமாக வாழந்து, 5 வேளை தொழுகைகளை பேணி, ஜகாத் கொடுத்து, ஹஜ் செய்து உலகில் வாழந்து வந்ந நீ எதற்காக எனக்கு இணை வைத்தாய்?

படைத்த இறைவனாகிய நான் உனக்கு எதில் குறை வைத்தேன்?

நீங்கள்

?        ?      ?


அன்புச் சகோதர, சகோதரிகளே வாழந்து விட்டால் போதுமா? நாலு காசு சம்பாதித்தால் போதுமா? சொத்து சுகங்களை ஆண்டு அனுபவித்துவிட்டால் போதுமா?

இந்த உலகில் வாழும்போது நம் குடும்பத்தினரை நிம்மதியிழக்கச் செய்து நம் சுகத்தை காண்கிறோம். அதே நேரம் நம் படைத்த இறைவனுக்கு இணைவைத்துவிட்டு மறுமையில் நாம் நரகத்தை தங்குமிடமாக எண்ணி நிம்மதியிழந்து தவிப்போமே இந்த கைசேதம் தேவையா? சகோதர சகோதரிகளே

நம்முடைய அராஜக குணத்தால்
  • பெற்ற தாயின் வாயை அடைத்துவிடலாம்,
  • வளர்த்த தந்தையின் வாயை அடைத்துவிடலாம்
  • கட்டிய மனைவியின் வாயை அடைத்துவிடலாம்
  • ஊர் உலகத்தின் வாய்களை அடைத்துவிடலாம்

மேற்கண்ட இவர்களின் வாய்களை அடைத்துவிட்டு அவர்களிடம் வெற்றி கொள்ளும் நீங்கள் அல்லாஹ்விடம் வெற்றி கொள்ள முடியுமா?

வாழ்க்கை ஒரு முறைதான் எனவே அந்த வாழ்க்கை முறையை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய விதத்தில் இருந்தால் நமக்கு இலாபமா? நட்டமா?

இதோ அருள்மறை குர்ஆன் மற்றும் நபிமொழிகள்!
நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவேமாட்டான்; இது அல்லாத (பாவத்)தைத்தான் நாடியவருக்கு மன்னிப்பான்; எவன் ஒருவன் அல்லாஹ்வுக்கு இணை வைக்கின்றானோ, அவன் நிச்சயமாக வெகு தூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான்” (அல்குர்ஆன் 4:116)

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்(திருக்குர்ஆன், 5:72)

நபிமொழி
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
இறைவனுக்கு இணை கற்பிப்பதும், மனிதனைக் கொலை செய்வதும், தாய் தந்தையரைப் புண்படுத்துவதும், ‘பொய் கூறுவதும்’ அல்லது ‘பொய்ச் சாட்சியம் சொல்வதும்’ பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்.  இதன் அறிவிப்பாளரான அனஸ்(ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் ‘பெரும் பாவங்கள்’ என்று வந்துள்ளது.(புகாரி 6871)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்
மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.  என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி 6882)

அன்புச் சகோதர சகோதரிகளே! மனிதன் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிப்பதில்லை! இணைவைப்பதை அல்லாஹ் மன்னிப்பதில்லை!

சிந்திப்பீர்!   செயல்படுவீர்!


அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

குறிப்பு
இந்த கட்டுரையில் நீங்கள் என்ற வார்த்தைக்கு தவறான அர்த்தம் கொள்ள வேண்டாம். உள்ளத்தால் ஒவ்வொருவரும் இந்த நிகழ்வுகளை உணர வேண்டும் என்பதற்காகவே நீங்கள் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளேன். (தவறாக தென்பட்டால் மன்னிக்கவும்)


நான் உனக்கு எதில் குறை வைத்தேன்!

 http://islamicparadise.wordpress.com/2010/04/23/669/

No comments: