Sunday, May 23, 2010

மாநில தேர்தல் ஆணையராக முனீர் ஹோடா நியமனம்!


தமிழ் நாடு மாநில தேர்தல் ஆணையராக சையது முனீர் ஹோடா நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக பணிபுரிந்த டி.சந்திரசேகரனின் பதவிக்காலம் கடந்த 21-ந் தேதியுடன் முடிவடைந்துள்ளது.

தற்போது சையது முனீர்ஹோடா தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக நியமனம் செய்து கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா இன்று (நேற்று) ஆணையிட்டுள்ளார்.

சையது முனீர்ஹோடா மாநில தேர்தல் ஆணையராக பொறுப்பேற்கும் நாள் முதல், 2 ஆண்டு காலத்திற்கு இப்பதவியில் பணிபுரிவார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தற்போது மின்விசை நிதிக் கழகத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வரும் முனீர் ஹோடா தலைமைச் செயலாளர் அந்தஸ்து பெற்ற உயர் அதிகாரி ஆவார்.

1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியான சையது முனீர்ஹோடா தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது போன்ற பல மொழிகளை பேசும் சிறந்த புலமை மிக்கவர்.

மிகவும் எளிமை, நேர்மை, கண்டிப்பு, கடின உழைப்பு கொண்ட அதிகாரியான இவர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர், பி.சி.அலெக்சாண்டர், பீஷ்மநாராயண சிங் ஆகியோர் ஆளுநர்களாக இருந்த போது அவர்களது செயலாளர், தமிழக அரசில் மக்கள் நல்வாழ்வு துறை, உள்துறை, போக்குவரத்து துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, பணியாளர் நலன் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை ஆகிய துறைகளின் செயலாளர் பொறுப்பு உள்பட பல முக்கிய பதவிகளை வகித்தவர்.

முதல்-அமைச்சராக தற்போது கருணாநிதி 5-வது முறையாக பொறுப்பேற்ற போது, அவரது முதன்மை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

No comments: