Friday, May 14, 2010

ஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட்

smoke3
சமூக நலனில் அக்கறை கொண்ட சில அரசியல் தலைவர்களும், நலவாழ்வு நிலை பெறவேண்டுமெனும் வேட்கை கொண்ட நல்லவர்களும் போராடிப் போராடி புகையற்ற வாழ்வுக்கான ஒரு வாசலைத் திறந்து வைக்கும் போது வந்திருக்கிறது எலக்ட்ரானிக் சிகரெட்.
பெரும்பாலும் கணினி மென்பொருள் நிறுவனங்களைக் குறிவைத்து இந்த பிரச்சாரம் துவங்கப்பட்டுள்ளது. ( பாவம் ஐ.டி யோட தற்போதைய நிலை தெரியாது போல )
எரியாது ஆனால் புகை வரும்
நிக்கோட்டின் மட்டுமே உண்டு, அதுவும் உங்களுக்குத் தேவையான அடர்த்தியில் என்றெல்லாம் கூவிக் கூவி பிரச்சாரம் செய்து, கூடவே கலர்புள் விளம்பர கையடக்கப் பிரதிகளையும் கொடுக்கிறார்கள்.
எங்கள் அலுவலகத்துக்கு முன்பு கடை விரித்திருந்த மூன்று பேரை அணுனேன்.
எப்படி இழுக்கவேண்டும், எப்படி காட்ரிஜ் மாற்ற வேண்டும் என்றெல்லாம் செய்முறை விளக்கம் செய்து கொண்டிருந்தவர்களிடம் கேட்டேன்.
smoke2“என்னங்க இது…”
“இது எலக்ட்ரானிக் சிகரெட் … நவீனத்தின் மகத்தான கண்டுபிடிப்பு… உடலுக்கு கெடுதல் இல்லாத சிகரெட் இது..”
“ஓ.. கெடுதல் இல்லையா ? அப்போ நிகோட்டினே இல்லையா ?” இது நான்.
“ம்..வந்து… நிகோடின் இருக்கு. ஆனா நிகோடின் தீமைன்னும் எந்த அறிக்கையும் சொல்லலையே…” விற்பனைப் பெண் இழுத்தார்.
அடப்பாவிகளா ? முழுப்பூசணிக்கா சோத்துல மறையாதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே ஒரு பூசணித் தோட்டமே சோத்துக்குள்ள மறையுதே… என்று மனம் திடுக்கிட்டது
“என்னங்க இப்படி சொல்றீங்க ? ஒரு சிகரெட்ல இருக்கிற நிகோடினை மனுஷனோட இரத்தக் குழாயில செலுத்தினா அவன் உடனே செத்துடுவான்.. தெரியாதா உங்களுக்கு” என்றேன்.
“ஐ..மீன்…. சாதா சிகரெட்ல நிகோடினோட சேர்த்து வேறையும் நிறைய தீமைகள் இருக்கு.. இதுல அதெல்லாம் இல்லை…” இழுத்தார்கள் விற்பனையாளர்கள்.
“இதுல சயனைட் மட்டும் இருக்கு, மத்ததுல சலனைடும் பூச்சி மருந்தும் இருக்குன்னு சொல்றமாதிரி இருக்கு நீங்க சொல்றது.. .. “ என்றேன்
அதற்குள் கொஞ்சம் கூட்டம் கூடிவிட விற்பனையாளர்கள் என்னை எப்படியும் விரட்டி விடவேண்டும் எனும் நோக்கத்தில் ஒன்று சேர்ந்தார்கள்.
“நீங்க குடிக்கிற காஃபில கூட நிகோடின் இருக்கு தெரியுமா…” விற்பனை பெண் கொஞ்சம் நக்கலாகவே கேட்டார்.
“இருக்கு… ஆனா அதுல இருக்கிற அளவு எவ்வளவு எம்.ஜி தெரியுமா ?” நானும் விடவில்லை.
“சார்… விருப்பம் இருந்தா வாங்குங்க சார்… இல்லேன்னா விட்டுடுங்க.. நாங்க யாரையும் கம்பல் பண்ணல..” ஜகா வாங்கியது சிகரெட் கிளிகள்.smoke1
“நான் உங்களைச் சொல்லலீங்க.. அதோ பாருங்க, சிகரெட் புடிக்கக் கூடாதுன்னு போர்ட் போட்டிருக்கு, அதுக்கு பத்தடி தூரத்துல நீங்க சிகரெட் விக்கறீங்க.. நியாயமா ?” என்றேன்.
அதற்குள் கூட்டத்திலிருந்து ஒரு சிகரெட் பிரியர்
“இது எவ்ளோ ஆகுதுங்க ?” என்றார்
“நாலு சிகரெட் நானூறு ரூபா… ஒவ்வொரு சிகரெட்டும் பத்து சாதா சிகரெட்டுக்கு சமம்’ விற்பனையாளர் என்னை விட்டு அங்கே தாவினார்.
“ஓ… நானூறு ரூபாய்க்கு நான் 100 வில்ஸ் வாங்கி அடிப்பேன்” சொல்லிச் சென்றார் அவர்.  ஐடியில் எப்போ வேலை போகுமோ எனும் கவலையில் இருந்தவர் அவர் !.
“அதெல்லாம் ஹெல்த்தியானது இல்லை. அன்கெல்தி தான் குடிப்பீங்கன்னா குடிங்க…” என்றார் விற்பனையாள பெண் அவரை நோக்கி.
“என்னங்க.. நீங்க ஏதோ ஆப்பிள் ஜூஸ் விக்கற மாதிரி பேசறீங்க.. இதுவும் அன் கெல்தி தான்… “ என்றேன்.
கூட்டம் சலசலவென சிரிக்க, விற்பனை செய்து கொண்டிருந்த மூன்று பேரும் இந்த சனியன் ஒழிந்தபிறகு வரலாம் கடை கட்டலாம் எனும் முடிவோடு நடையைக் கட்டினர்.
ஐயா அன்புமணி, சிகரெட்டுக்கு தடை என்றால் அது எலக்ட்ரானிக் சிகரெட்டுக்கும் பொருந்தும் என்று ஒரு தடவை சொல்லிடுங்க.
பின் குறிப்பு : புகைப்படத்தில் இருக்கும் நண்பர் என்னுடைய விண்ணப்பத்தின் பேரில் ஒரு போஸ் குடுக்கிறார் அவ்வளவே. மற்றபடி அவருக்கும் சிகரெட்டுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை.

ஐ.டியை குறி வைக்கும் எலக்ட்ரானிக் சிகரெட் 
Source :  http://sirippu.wordpress.com/2009/03/02/electronic_cigarette/

No comments: