Thursday, May 20, 2010

மில்லியன் டாலர் வெப்சைட்!


அலெக்ஸ் ட்யூ என்றொரு இருபத்தோரு வயது இளைஞன் இங்கிலாந்தில் ஒரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தான். தனது கல்வித்தேவைகளுக்காக கொஞ்சம் பணம் சம்பாதிக்க அவன் விரும்பினான். அவனிடம் ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே இருந்தது. ஒரு மில்லியன் டாலரை இந்த வெப்சைட்டை வைத்து சம்பாதிக்க முடியுமா? என்று திட்டம் தீட்டினான்.

என்னுடைய வெப்சைட்டில் இருக்கும் ஒவ்வொரு பிக்ஸெலையும் (அளவை குறிக்கும் கணினி தொடர்பான சொல்) விற்கப்போகிறேன். என்னிடம் பத்து லட்சம் பிக்ஸல் இருக்கிறது. ஒவ்வொரு பிக்ஸலும் ஒரு டாலர் என்று அறிவித்தான். குறைந்தபட்சமாக ஒருவர் 10 x 10 பிக்ஸல் அளவே வாங்கமுடியும் என்றும் அறிவித்தான். இந்த 10 x 10 பிக்ஸெல் அளவுக்கு ஒரு நிறுவனம் 100 டாலரை செலுத்தினால் அவனது வெப்சைட்டில் நிறுவனம் தங்கள் விளம்பரத்தை வெளியிட்டுக் கொள்ளலாம். அவ்விளம்பரம் ஐந்து ஆண்டுகளுக்கு வெப்சைட்டில் இடம்பெற்றிருக்கும். அவ்விளம்பரத்தின் மூலமாக நிச்சயமாக விளம்பரம் செய்த நிறுவனத்தின் இணையத்தளத்துக்கு நிறைய பார்வையாளர்கள் வருவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தான்.

பொதுவாக பார்க்கப் போனால் இப்படி ஒரு திட்டமே பைத்தியக்காரத்தனமான திட்டம் என்று நாம் சொல்லிவிடுவோம். அலெக்ஸின் நண்பர்கள் பலரும் கூட அப்படித்தான் சொன்னார்கள். ஆனால் எல்லோரின் எதிர்பார்ப்பும் தவிடுபொடியானது. ஒரு ஆண்டுக்குள்ளாகவே தன் வெப்சைட்டில் (http://www.milliondollarhomepage.com) இருந்த பத்து லட்சம் பிக்ஸல்களையும் அலெக்ஸால் விற்றுவிட முடிந்தது. அலெக்ஸின் தளத்தில் விளம்பரம் செய்தவர்கள் அத்தனை பேருமே ஒட்டுமொத்த குரலில் எங்களுக்கு இது உபயோகமான முதலீடு என்றார்கள்.

அலெக்ஸின் தளத்தில் டி.எஸ். லேபரட்டரீஸ் என்ற நிறுவனம் 800 பிக்ஸல்களை வாங்கியிருந்தது. “அலெக்ஸின் தளத்தில் எங்கள் நிறுவனத்தை விளம்பரப்படுத்தியவுடனே எங்களது இணையத்தளத்துக்கு பல லட்சம் பார்வையாளர்கள் வந்தவண்ணம் இருந்தார்கள். எங்கள் நிறுவனத்தின் விற்பனை ஒருவாரத்துக்குள்ளாகவே நாற்பது முதல் ஐம்பது சதவிகிதம் வரை உயர்ந்தது. இன்றளவுக்கும் அதே விற்பனையை நாங்கள் தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றும் கூட பலபேர் அலெக்ஸின் தளம் மூலமாக எங்கள் இணையத்தளத்துக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள்” என்று அந்த நிறுவனத்தின் தலைவர் ஜேம்ஸ் கேலோ சொன்னார்.

அவரிடம் விளம்பரம் செய்தவர்கள் மட்டுமல்ல, உலகளவில் இருக்கும் பல மீடியாக்களும் அலெக்ஸின் இந்த புதுமையான முயற்சியை பாராட்டினார்கள். பல விளம்பர ஜாம்பவான்கள் எப்படி இந்த திட்டம் வெற்றியடைந்தது? உட்கார்ந்த இடத்திலிருந்தே பத்து லட்சம் டாலரை அந்த பையன் எப்படி சம்பாதித்தான்? என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். விளம்பரம் குறித்த எந்த பொதுவான நுணுக்கங்களும் தெரியாத அலெக்ஸ் ஜெயித்துக் காட்டியது இன்றைக்கும் கூட புதிராகவே இருக்கிறது.

அலெக்ஸ் செய்ததைப் போலவே, கிட்டத்தட்ட அதே முயற்சி ஒன்று தமிழ் வலைப்பதிவர்களுக்காக பிரத்யேககமாக நடந்து வருகிறது. கலையழகன் என்ற நண்பர் நடத்தும் http://minmini.com/ இணையத்தளம். ஒரு வகையில் இது ஒரு வித்தியாசமான தமிழ் வலைப்பதிவு திரட்டியாகவும் செயல்படும். 1111 பதிவர்களின் பதிவுகளை திரட்டும் முயற்சியில் மின்மினி களமிறங்கி இருப்பதாக தெரிகிறது. முதற்கட்டமாக 50 பிரபல(எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை) பதிவர்களின் பதிவுகள் இப்போதைக்கு அவர்களை கேட்காமலேயே இலவச அடிப்படையில் திரட்டப்படுகிறது. இன்னும் 51 பேர் தங்களுடைய புகைப்படமும் இடம்பெற இலவசமாக விண்ணப்பிக்கலாம் என்று நினைக்கிறேன். பின்னர் பத்துக்கு பத்து என்ற அடிப்படையில் 100 பிக்ஸல் அடங்கிய ஒரு பெட்டிக்கு ஒரு டாலர் என்று வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மின்மினியில் ஏன் இணைய வேண்டும் என்ற கேள்விக்கு என்னிடம் தெளிவான பதில் ஏதுமில்லை. கேபிள் சங்கர் போல குறுகிய காலத்தில் பத்து லட்சம் ஹிட்ஸ்களை விரைவில் பெற விரும்பும் வலைப்பதிவர்களுக்கு இத்தளத்தை பரிந்துரைக்கிறேன். இதனால் வலைப்பதிவர்களுக்கு ஹிட்ஸ் தவிர்த்து வேறு எந்த பெரிய பலனையும் எதிர்ப்பார்த்து விட முடியாது என்று நினைக்கிறேன். வணிக நிறுவனங்கள் ஏதேனும் வலைப்பதிவு நடத்தினால் மின்மினி மூலமாக வணிகத்தை ஓரளவு வளரவைக்கலாம். எனினும் தமிழில் வலைப்பதிவர்களை வைத்து வித்தியாசமான விளையாட்டு ஆட வந்திருக்கும் நண்பர் கலையழகன் அவர்களை பாராட்டுகிறேன்.

மேலதிக தகவல்களைப் பெற http://minminicom.wordpress.com/ என்ற தளத்தை பாவிக்கலாம்.

No comments: