தனிமைக் கூடு… படுத்தும் பாடு…
“இன்னுமா பல்லு தேய்ச்சு முடிக்கல ?…..”
“பால் குடிச்சாச்சா…. ?”
“சீக்கிரம் வா குளிப்பாட்டி உடறேன்..”
“நேரமாச்சும்மா… சாப்பிடு… ஸ்கூல் வேன் இப்ப வந்துடும்…”
“யூனிபார்ஃம் போடு…. ஷூ போடு..ம்ம்….”
பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இத்தகைய உரையாடல்களளக் கேட்காமல் இருக்க முடியாது ! அம்மா காலைல எழுந்து குழந்தையை எழுப்பி காட்டுக் கத்தல் கத்திக் கொண்டிருப்பார். குழந்தையோ அம்மாவுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு போகோ சேனலையோ, டிஸ்கவரி சேனலையோ நைசாக பார்த்துக் கொண்டிருக்கும். அல்லது மம்மி சொன்ன பேச்சைக் கேட்காமல் அங்கும் இங்கும் ஓடியாடி ஒரு குட்டி மானைப் போலத் துள்ளிக் குதித்துத் திரியும்.
ஒரு வழியாக குளிப்பாட்டி, சாப்பாடு ஊட்டி, ஸ்கூல் வேனில் ஏற்றி பள்ளிக்கு அனுப்பி விட்டு அப்பாடா என அம்மா ஹாயாக அமரும்போது தான் அந்த வெறுமை பளாரென கன்னத்தில் அறையும்.
ஐந்து நிமிடத்துக்கு முன்பு வரை ஏக களேபரமாய் இருந்த வீடு இப்போது மிக மிக வெறுமையாய் பயமுறுத்தும். வெறும் கல்லும் மண்ணும் கொண்டு கட்டிய ஒரு கூடாய்க் தோன்ற ஆரம்பிக்கும். அடடா…. எப்போ ஸ்கூல் முடியும், குழந்தை எப்போ வீட்டுக்கு வரும் என ஏங்க ஆரம்பித்து விடும் அந்த பாசமுள்ள மனசு.
“வீட்டை எத்தனை வாட்டி தான் கிளீன் பன்றது ? கழுதைங்க.. ஒரு பொருளையாவது ஒழுங்கா ஒரு இடத்துல வெச்சிருக்குதா?” அம்மாவின் திட்டு தினமும் குழந்தைகளை துரத்தோ துரத்தென்று துரத்தும்.
ஆண்டு இறுதி விடுமுறை வரும். குழந்தைகள் பாட்டி வீட்டிலோ, தூரத்துச் சொந்தக் காரர்கள் வீட்டிற்கோ போகும். இப்போது வீடு ரொம்ப சுத்தமாய் இருக்கும். வைத்த பொருளெல்லாம் அதே இடத்தில் அப்படியே இருக்கும். அம்மாவுக்கு அந்த சுத்தம் மிகப்பெரிய பாரமாகத் தோன்றும். கலையாமல் இருக்கும் பொருட்களைப் பார்த்தால் கோபம் கோபமாக வரும். அந்த ஏக்கம் கலந்த வெறுமை அவளை நிலை குலைய வைக்கும். எப்படா குழந்தைங்க திரும்பி வீட்டுக்கு வருமோ.. என மனசு துடிக்கும்.
பிள்ளை வளர்ந்து கல்லூரிக்குப் போகும் காலத்தில் இந்த ஏக்கம் அடுத்த நிலையை எட்டும். அதுவும் தூரமான இடத்தில் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கச் சென்று விட்டாலோ, வேலைக்காக வெளிநாடு போனாலோ… அவ்வளவு தான் மனசு ரொம்பவே ஏங்க ஆரம்பிக்கும்.
அதன் பிறகு வரும் திருமணம். ! தனிக்குடித்தனம், அல்லது புகுந்த வீடு இப்படி ஏதோ ஒரு பிரிவு பெற்றோருக்குக் காத்திருக்கும். அந்த நீளமான வெறுமை அசுரத்தனமாக அவர்களைத் தாக்கும். எந்த அளவுக்கு பெற்றோர் குழந்தையை நேசிக்கிறார்களோ அந்த அளவுக்கு வெறுமை அவர்களை ஆட்டிப் படைக்கும். ஒரு வகையில் நியூட்டனின் மூன்றாவது விதி என வைத்துக் கொள்ளுங்கள்.
நேற்று வரை எல்லாவற்றுக்கும் அப்பா, அம்மா என்று நின்ற பிள்ளைகள் இன்று அப்பா அம்மாவை சார்ந்து வாழத் தேவையில்லாமல் கிளம்பி விடும்போது பெற்றோரிடம் உருவாகும் இந்த வெறுமை நிலையை எம்ட்டி நெஸ்ட் சிண்ட்ரோம் என்கிறார்கள். வெறுமைக் கூடு பாதிப்பு என்று தமிழில் சொல்லாமா ? தவறெனில் தமிழறிஞர்கள் மன்னிப்பார்களாக !
இந்த வெறுமையின் உச்சகட்ட நிகழ்வு என்பது பிள்ளைகள் பெற்றோரைக் கொண்டு காப்பகங்களிலோ, ஏதாவது அனாதை விடுதிகளிலோ சேர்க்கும் போது நேர்ந்து விடுகிறது. அது மிக மிக அரிதான நிகழ்வு என்பதால் அதைக் கொஞ்சம் ஒதுக்கியே வைக்கலாம்.
வயது ஆக ஆக, இந்த வெறுமையின் ஆழமும் அதிகரிக்கும். முதுமை வயது தனது பிள்ளைகளின் அன்பான கரத்தைப் பற்றிக் கொண்டு வீட்டில் அமைதியாய் இருக்க பிரியப்படும். துரதிர்ஷ்ட வசமாக பலருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களை தனியே தவிக்க விடும் பிள்ளைகளையும் வாழ்க்கை ஒரு நாள் அந்த வட்டத்தில் கொண்டு வந்து நிறுத்தும் என்பது தான் வாழ்க்கையின் பரமபத விளையாட்டு !
இத்தகைய வெறுமை பெண்களை மட்டுமல்ல ஆண்களையும் அதே வீரியத்துடன் தாக்குகிறது. சொல்லப் போனால் ஆண்களை இது கொஞ்சம் அதிகமாகவே தாக்குகிறது. காரணம், குழந்தையுடன் தேவையான அளவு நேரம் செலவிடவில்லையே எனும் ஏக்கம் தந்தைக்கு மிக அதிகம் இருக்கும் என்கிறார் அமெரிக்காவின் வீட்டென் கல்லூரியில் உளவியல் பேராசிரியராக இருக்கும் ஹெலன் எம். டிவிரிஸ் குழந்தைகள் விலகும்போது நிகழும் வெறுமை இயல்பானது தான். அதைக் கண்டு அதிகம் பயப்படத் தேவையில்லை. எப்போது பயப்படவேண்டும் ?
வாரம் பத்து நாள் அழுதுகொண்டு இருந்தால் பரவாயில்லை. ஆனால் அந்த அழுகை வாரக்கணக்கில் நீண்டு கொண்டே இருந்தால் அவர்களைக் கவனிக்க வேண்டும். அது இந்தப் பாதிப்பின் அறிகுறி.
ரொம்ப மன அழுத்தமாக உணர்கிறார்களெனில் கவனிக்க வேண்டும். அது மிகப்பெரிய ஆபத்தான அறிகுறி. யாருடனும் பேசாமல், சமூகத்தை விட்டே கொஞ்சம் விலகி எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களெனில் நிச்சயம் கவனிப்பது அவசியம்.
“இனிமே என்னத்த…” எனும் சிந்தனைக்கு வந்து அதையே பேசிக் கொண்டிருப்பவர்களையும் கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்காக வாழ்ந்துட்டோம். அவங்க போயிட்டாங்க, இனிமே நாம என்னத்த பண்ண என தம்பதியராய் சேர்ந்து புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த சிக்கல் இருக்கக் கூடும் !
இந்தச் சிக்கலைப் பொறுத்தவரை இரண்டு விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது, இந்தச் சிக்கல் எல்லோருக்கும் வந்தாக வேண்டிய கட்டாயம் இல்லை. சில பெற்றோர் குழந்தைகளை தனியே நிற்கப் பழக்குவார்கள். அவர்கள் பழகிவிட்டால் சந்தோசப்படுவார்கள்.
“அப்பாடா பையனை கரையேத்திட்டேன்”, “அப்பாடா… பொண்ணை வழி அனுப்பி வெச்சுட்டேன்.. இனிமே நிம்மதி” என தங்கள் விருப்பமான வேலைகளைப் பார்க்க உற்சாகமாய்க் கிளம்பி விடும் பெற்றோரும் உண்டு. அவர்கள் ஒரு வகையில் பாக்கியவான்கள். அவர்கள் கீழே உள்ளதைப் படிக்காமல் தாவி விடலாம்.
இந்த தனிமைச் சிக்கலில் சிக்கிக் கொண்டவர்களை என்ன செய்வது ? அவர்களுக்குத் தான் இந்த ஆலோசனைகள்.
1. ஆனந்தம், சோகம், அருகாமை, பிரிவு எல்லாம் கலந்தது தான் வாழ்க்கை எனும் உண்மையை மனதில் ஆழமாக எழுதிக் கொள்ளுங்கள். இனிமேல் பிள்ளைகள் நம்மை முழுமையாய் சார்ந்து இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதை அப்படியே ஏற்றுக் கொள்ளுங்கள்.
2. இனிமேல் வரும் வாழ்க்கை வித்தியாசமானது என்பது மட்டும் தான் உண்மை. ஆனால் அது அழகானது அல்ல என்பது நீங்களாக உருவாக்கிக் கொள்ளும் கற்பனை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கை எப்போதுமே அழகானது தான். ஒவ்வொரு காலகட்டத்திலும் அதற்கே உரிய சுவாரஸ்யங்கள் நிரம்பியிருக்கும்.
3. பிள்ளைகளுடன் சேர்ந்து வாழும் போதே, ஒரு நாள் இவர்களெல்லாம் தனியே வாழக் கிளம்பி விடுவார்கள் எனும் எண்ணம் மனதில் இருக்கட்டும். அது தான் வாழ்க்கையின் நியதி என்பதை உங்கள் கடந்த கால வாழ்க்கையே சொல்லியிருக்கக் கூடும்.
4. இன்றைய உலகம் ஹை டெக் உலகம். உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் நீங்கள் உங்கள் பிரியத்துக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க முடியும். எனவே இ-மெயில், 3G, வெப் கேம் இப்படி எல்லா டெக்னாலஜி விஷயங்களையும் உங்கள் தனிமைக்குத் துணையாய் அழையுங்கள்.
5. உங்கள் பழைய ஹாபி ஏதேனும் ஒன்றைத் தூசு தட்டி எடுங்கள். சிலருக்கு எழுதுவது, சிலருக்கு இசை கேட்பது, சிலருக்கு வாசிப்பது, தோட்டம் வைப்பது இப்படி ஏதோ ஒன்று சிந்தனைகளின் பரணில் இருக்கும். அதைத் திரும்ப எடுங்கள். உங்கள் சுவாரஸ்யமான செயல்களைச் செய்யத் தான் இந்த தனிமை தரப்பட்டிருக்கிறது என பாசிடிவ் ஆக நினையுங்கள்.
6. உங்கள் உதவி இல்லாமலேயே உங்கள் பிள்ளையால் தனியே வாழமுடியும், சமாளிக்க முடியும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். அந்த நிலைக்கு உங்கள் பிள்ளைகளை திறமை சாலிகளாக வளர்த்ததில் பெருமிதமும் கொள்ளுங்கள்.
7. உங்களைப் பிரிந்து வாழும் பிள்ளைகளுக்கும் வருத்தம் இருக்கக் கூடும். அவர்களை உங்கள் கவலை நிம்மதியிழக்கச் செய்யலாம். எனவே முதலில் உங்கள் கவலைகளைத் தூர எறியுங்கள்.
8. சேர்ந்து வாழும் காலத்திலேயே உங்கள் பிள்ளைகளிடம் நீங்கள் எவ்வளவு தூரம் அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைச் சொல்லி விடுங்கள். அது உங்களுடைய குற்ற உணர்வுகள் பலவற்றைத் துடைத்து விடக் கூடும்.
9. இண்டர்நெட்டில் விருப்பம் இருப்பவர்கள் ஒரு பிளாக் ஆரம்பித்து தங்கள் அனுபவங்களை எழுதுங்கள். உலகத் தொடர்பும் கிட்டும், தனிமை வாட்டுதலும் நிற்கும்.
10. உங்கள் பழங்கால நண்பர்கள், உங்கள் நலம் விரும்பிகள், உறவினர்கள் இப்படி யாருடனாவது உங்கள் உரையாடல் வாழ்க்கையை ஆரம்பியுங்கள். ஆத்மார்த்தமான நட்பும், பேச்சும் கிடைத்தால் வெற்றிடம் நிரம்பிவிடும்.
11. மன அழுத்தமாக உணர்கிறீர்கள். வெளியே வர எவ்வளவு முயன்றும் முடியவில்லை எனில் ஒரு கவுன்சிலிங் நபரைப் பாருங்கள். அதில் வெட்கப்பட ஏதும் இல்லை.
12. விளையாட்டில் ஈடுபாடு உண்டென்றால் ரொம்ப நல்லது. உங்கள் விருப்பத்துக்குரிய விளையாட்டை ஆரம்பிக்கலாம். பலர் கேரம் போன்ற விளையாட்டுகளில் மூழ்கி விட்டால் அவர்களுடைய வெறுமை எல்லாம் பசுமை ஆகிவிடும்.
13. சில திட்டங்கள் வைத்திருங்கள். அடுத்த மாதம் அவரைச் சந்திக்க வேண்டும். அதற்கு அடுத்த மாதம் அங்கே போகவேண்டும் .. இப்படி. இவையெல்லாம் உங்களை அந்த முடிவுகளை நோக்கி சிந்திக்க வைக்கும். உங்கள் வெறுமையை நிரப்பி விடும்.
14. பிரியமான பார்ட் டைம், ஃபுல் டைம் வேலைகள் ஏதேனும் இருந்தால் தேர்ந்தெடுங்கள். பேபி சிட்டிங் போன்ற வேலைகள் இப்போது நம்பிக்கையான, அன்பான நபர்களுக்காய் காத்திருக்கின்றன.
15. கணவன் மனைவி தனியாய் இருந்தால் ரொம்ப நல்லது. முதுமையின் தனிமையை காதலுடன் அனுபவியுங்கள். காலார வாக்கிங் போவது முதல், காதல் வாழ்க்கையை அசை போடுவது வரை இது உங்களுக்கான வாய்ப்பு என்பதை உணருங்கள்.
16. உங்கள் வாழ்நாள் சாதனைகளை நினைத்து மகிழுங்கள். உங்கள் குழந்தையை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து கொடுத்தது ஒரு வாழ்நாள் சாதனை என்பது நினைவில் இருக்கட்டும்
17. அவ்வப்போது தனிமையை நினைத்து சோகமாய் இருப்பதோ, அழுவதோ தப்பில்லை. உணர்வுகள் வெளிப்படுத்துவதற்கானவையே. எனவே நீங்கள் உங்கள் மனசைத் திறப்பதைத் தவறு என கருத வேண்டாம்.
18. தியானம், பயணம், ஆன்மீக ஈடுபாடு போன்றவற்றில் விருப்பம் உள்ளவர்களுக்கு தனிமை வரப்பிரசாதம். இந்தத் தனிமையை நீங்கள் கொண்டாடலாம்.
19. பிள்ளைகளுடன் போனில் பேசுங்கள். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இருவருக்கும் உடன்பாடான இடைவெளியில் பேசுங்கள். உங்கள் பிள்ளை தினமும் பேச விரும்பினால் தினமும் பேசுங்கள், வாரம் ஒரு முறையெனில் அதையே பின்பற்றுங்கள்.
20. ஓய்வு எடுங்கள். வாழ்க்கையில் ஓடியாடி உழைத்தாகி விட்டது. ஓய்வாய் அமர்ந்து ஒரு படம் பார்ப்பது, இசை கேட்பது, டின்னர் சாப்பிடுவது என வாழ்க்கையை அனுபவியுங்கள்.
21. உடற்பயிற்சி செய்யுங்கள். உடற்பயிற்சி உடலில் எண்டோர்பின்களைச் சுரக்கச் செய்யும். அது மனதை ஆனந்தமாக வைத்திருக்கும். ஆரோக்கியத்தையும் கூட்டி வரும். எனவே உடற்பயிற்சியில் ஈடுபடுங்கள்.
22. மாற்றங்களுக்கு எப்போதும் தயாராக இருங்கள். இறுக்கமான மனநிலை இல்லாமல் இயல்பாய் இருங்கள்.
23. குற்ற உணர்ச்சிகளை விட்டு விடுங்கள். ஐயோ, குழந்தையை நல்லா கொஞ்சலையே, நிறைய நேரம் செலவிடலையே என்றெல்லாம் புலம்பித் திரியாதீர்கள். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது, என மனதை இயல்பாக்குங்கள்.
24. உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்ய வேண்டுமென்று விரும்பிய, ஆனால் செய்ய முடியாமல் போல விஷயங்களை, விருப்பங்களைப் பட்டியலிடுங்கள். இப்போது அதில் எதையாவது செய்ய முடியுமா என யோசியுங்கள்.
25. ரொம்ப பிஸியா இருக்க என்னென்ன செய்யலாம் என யோசியுங்கள். கணவன் மனைவியாக இருந்தால் இதை எதிர்கொண்டு வெளியே வருவது ரொம்பவே சுலபம். இல்லாவிட்டாலும் கவலையில்லை, வெளியே வருவது எளிது தான்.
இந்த சின்னச் சின்ன விஷயங்களை மனதில் கொண்டால் தனிமையின் வெறுமை என்பது சாபமல்ல, வரம் என்பதை உணர்வீர்கள். வாழ்க்கை வாழ்வதற்கே ! வாழுங்கள், வாழ்த்துக்கள்.
ஃ
சேவியர்
நன்றி : பெண்ணே நீ…
2 comments:
அருமையான பதிவு. வெறுமை என்னும் நோயை நீக்க 'கூட்டுக்குடும்பம்' ஒரு நன்மருந்து. ஆனால் அதை நாம் இன்று நாகரிகம் என்ற பெயரில் தொலைத்துவிட்டு நோயுடன் வாழ்கிறோம்.
நல்ல பதிவு. வயதான பெற்றோர்கள் எப்போதும் எங்கோ இருக்கும் பிள்ளைகளையே நினைத்துக் கொண்டு வருந்திக் கொண்டு இருப்பதை விட தனது விடுபட்டுப் போன விருப்பங்களை செய்வதே சிறந்தது
http://www.virutcham.com
Post a Comment