Thursday, May 13, 2010

நாகூர் ஹனீபாவுடன் ஒரு நேர்காணல்

இளவயதில் இசைமுரசு
இளவயதில் இசைமுரசு
[நாகூரில் ஹனீபா அவர்களை பிரபல பத்திரிக்கையாளர் அ.மா.சாமி நேரில் சந்தித்தபோது நடந்த நேர்காணல் இது. இந்த நேர்காணலில் அவரது இளமைக்கால அனுபவங்களில் பல சுவையான செய்திகளை நாம் அறிந்துக் கொள்ள முடிகிறது.]

நீங்கள் பிறந்தது இராமநாதபுரத்தில். எப்படி “நாகூர் அனிபா” ஆனீர்கள்?
எங்கள் பூர்வீகம் நாகூர்தான், என் அப்பாவும் நாகூர்க்காரர்தான். என் அம்மாவுக்கு இராமநாதபுரம். செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பம். என் பாட்டனார் (அம்மாவின் அப்பா) முத்து ராவுத்தர் இராமநாதபுரம் அரண்மனையில் ஆயுதக் கிடங்கு பாதுகாவலர் – பராமரிப்பாளராகப் பணியாற்றினார். அந்த நாளில் இராமநாதபுரம் சின்னக்கடை வீதியில் அவரது வீடுதான் பெரியது. என் அம்மா கடைக்குட்டி – கடைசிப் பெண். எனவே, திருமணத்திற்குப் பிறகும் வீட்டோடு வைத்துக் கொள்ள என் பாட்டனார் ஆசைப்பட்டார். இதனால் திருமணத்திற்குப் பின் என் அப்பா இராமநாதபுரத்தில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தார். அப்போது நான் அங்கு பிறந்தேன்.
எப்போது நாகூருக்கு வந்தீர்கள்?
எங்களை விட்டு விட்டு எங்கள் தந்தையார் மலேசியாவுக்கு வேலைக்குப் போய் விட்டார். என் அக்காவுக்குத் திருமணம் நடந்த்போது எனக்கு ‘சுன்னத்’ திருமணமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள என் தந்தையார் கோலாலம்பூரிலிருந்து வந்தார். அவர் திரும்பி போகும்போது குடும்பத்தை நாகூரில் குடியமர்த்திவிட்டுச் சென்றார்.
நாகூர் வாழ்க்கை எப்படி இருந்தது?
மிகவும் கஷ்டமான வாழ்க்கைதான். என் அண்ணன் அப்துல் காதர் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றினார். நான் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தேன். என் மீது அண்ணனுக்கு மிகுந்த பாசம் உண்டு. என்னை பெயர் சொல்லி அழைக்கமாட்டார். “தம்பீ..” என்று வாய் நிறைய வாஞ்சையுடன் கூப்பிடுவார். இந்த கஷ்டத்திலும்.. .. ..
ஏன் நிறுத்திவிட்டீர்கள்? சொல்லுங்கள்.
செல்வக் குடும்பத்தில் பிறந்த என் அம்மாவுக்கு தர்ம குணம். யார் வந்து கேட்டாலும், “இல்லை” என்று சொல்ல மாட்டார். நாகூரிலும் அப்படியே வாழ்ந்தார். யாராவது வந்து, “மகளுக்குத் திருமணம் வைத்திருக்கிறேன். ஒரு ஐந்நூறு ரூபாய் கொடுங்கள்” என்று கேட்பார்கள். அந்தக் காலத்தில் ஐந்நூறு ரூபாய் என்பது இன்றைக்கு ஐம்பதாயிரத்துக்குச் சமம்! அம்மாவிடம் பணம் இருக்காது. “இல்லை” என்று சொல்ல மனமும் இருக்காது. ஒரு நகையைக் கொடுத்து, “இதை விற்றுப் பணமாக்கி, மகள் திருமணத்தை நடத்துங்கள்” என்று வந்தவரை அனுப்பி வைப்பார். இப்படியே எல்லா நகையும் போய் விட்டது”.
அப்பா எப்போது திரும்பி வந்தார்?
இரண்டொரு முறை வந்தார். 28 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வு பெற்று நிரந்தரமாகத் திரும்பினார். இங்கு இரும்புக்கடை நடத்தினார்.
இசை என்பது உங்களுக்குப் பரம்பரைச் சொத்தா?
இல்லை. இயற்கை எனக்குக் கொடுத்த சொத்து! இறைவன் எனக்கு அருளிய கொடை. எனது குடும்பத்தில் என் உடன் பிறப்புக்களுக்கோ, அல்லது என் பிள்ளைகளுக்கோ இந்தக் குரல் இல்லை. ஆனால் ஒன்றைச் சொல்லலாம். எங்கள் தந்தையார் குர்ஆன் ஓதினால் இனிமையாக இருக்கும். ‘பாங்கு’ கூறினால் இசையுடன் ஒலிக்கும்.
உங்களுக்கு மட்டும் எப்படி இசையில் விருப்பம் ஏற்பட்டது?
எங்கள் தந்தையார் கோலாலம்பூரில் ரெயில்வே ‘போர்மேன்’ ஆக வேலை பார்த்தார். 28 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு, அங்கிருந்து திரும்பினார். இடையிடையே வந்து போனார். ஒருமுறை வரும்போது ஒரு கிராமபோன் பெட்டி கொண்டு வந்தார். கே.பி.சுந்தராம்பாள், கிட்டப்பா, தியாகராச பாகவதர், பி.யு.சின்னப்பா, சைகால், இஸ்லாமியப் பாடகர் காரைக்கால் தாவூத் போன்றவர்களின் இசைத்தட்டுகளை அந்த கிராமபோன் பெட்டியில் ஓடவிட்டு, நான் கேட்பேன். இது அவர்களைப் போலப் பாட வேண்டும் என்ற ஆசையை என்னிடம் ஏற்படுத்தியது. எந்தப் பாடலையும் ஒருமுறை கேட்டால், அப்படியே திரும்பிப் பாடும் ஆற்றல் இயற்கையாகவே எனக்கு இருக்கிறது, அப்படிப் பாடிப் பாடி பழகிக் கொண்டேன்.
யாரிடமாவது முறையாக சங்கீதம் கற்றுக் கொண்டீர்களா?
இல்லைங்க. இஸ்லாமியர் கர்நாடக சங்கீதத்தை விரும்பிக் கேட்பதில்லை. அப்படி நான் சங்கீதம் கற்றிருந்தால், இன்று இந்த அளவுக்கு மக்களிடம் புகழ் பெற்றிருக்க மாட்டேன். எனது சங்கீதத்தை மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கேட்டு ரசிப்பார்கள். இன்று எனது குரலை தமிழ்க்கூறும் நல்லுலகம் முழுவதும் கேட்கிறது. சாதாரண மக்கள்கூட எனது பாடல்களைக் கேட்கிறார்கள். “மக்கள் பாடகன்” என்று என்னை அழைக்கிறார்கள்.
யாரையாவது பின் பற்றிப் பாட வேண்டும் என்று நினைத்தீர்களா?
நினைத்தது உண்டு. பாகவதரைப் பின்பற்றலாமா, சைகாலைப் பின்பற்றலாமா என்று எண்ணினேன். எனக்குள் ஒரு போராட்டம் நடந்தது. இறுதியில் ‘இயற்கை கொடுத்த இனிய குரல் இருக்கிறது; ஆண்டவன் நமக்கு அருள் புரிந்திருக்கிறான்; அதை விட்டு, ஏன் அடுத்தவர்களைப் பின்பற்ற வேண்டும்?’ என்ற முடிவுக்கு வந்தேன். எனது குரலிலேயே பாடினேன். மக்கள் வரவேற்றார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? என் அளவுக்கு உச்சக் குரலில் பாடுகிறவர்கள் இன்று யாரும் கிடையாது.
எப்போது பாடத் தொடங்கினீர்கள்?
எனது 11-ஆம் வயதில் பள்ளிக்கூடத்தில் பாடினேன். 13-ஆம் வயதில் திருமண வீடுகளில் பாடினேன். 15-ஆம் வயதில் பக்க வாத்தியங்களுடன் மேடைக்கச்சேரி செய்தேன்.
இதைக் கொஞ்சம் விரிவாகச் சொல்லுங்களேன்
நான் படித்த பள்ளிக்கூடத்தில் (நாகூர் செட்டியார் பள்ளிக்கூடம்) காலை வணக்கத்துடன் வகுப்புகள் தொடங்கும். “பொன்னார் மேனியனே..” என்ற பாடல் இறைவணக்கப் பாடலாக பாடப்படும். தமிழாசிரியர் சாமிநாத அய்யர் பாட, பிள்ளைகள் எல்லோரும் பாடுவோம். நான் இஸ்லாமிய சமயத்தைச் சார்ந்தவன். என்னுடன் நிறைய இஸ்லாமிய மாணவர்கள் படித்தார்கள். அவர்களைச் சேர்த்து, இஸ்லாமியப் பிள்ளைகள் தனியாக இறைவணக்கம் செய்தால் என்ன என்று யோசித்தேன். இதற்குத் தலைமை ஆசிரியரிடம் அனுமதி கேட்டோம். அவரும் அன்புடன் அனுமதி அளித்தார். அன்று முதல் இறைவணக்கப் பாடல் பாடினேன். “வேளை உதவி தாளை தருவீர் வேந்தர் யா முகம்மதே” என்பது அந்தப்பாடல். அப்போது நான் ஏழாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன். 11 வயதுச் சிறுவன்.
திருமண வீடுகளில் எப்படிப் பாடினீர்கள்?
எங்கள் நாகூரில் ‘கெளதிய்யா பைத்து சபை” என்ற இஸ்லாமியத் தொண்டு நிறுவனம் இருக்கிறது. அவர்கள் இஸ்லாமியத் திருமணங்களுக்குப் போய், மாப்பிள்ளை அழைப்பின்போது சிறுபறை (தஃப்சு) அடித்துக் கொண்டு பாடுவார்கள், விருந்து பரிமாற உதவுவார்கள். நான் பள்ளிக்கூடத்தில் பாடுவது தெரிந்து, இச்சபையில் என்னையும் சேர்த்துக் கொண்டார்கள். திருமண வீடுகளில் போய்ப் பாடுவேன். எனது எடுப்பான குரல் என்னை முதன்மைப் பாடகன் ஆக்கியது. எனக்கு ஒரு ரூபாய் கொடுப்பார்கள் ! என்னை வளர்த்து ஆளாக்கியது, இந்த கெளதிய்யா சபைதான். அதில் சேர்ந்து பாடியது பிற்காலத்தில் எனக்கு பயனுள்ளதாக இருந்தது.
எப்படி?
பொதுவாக கச்சேரிகள் செய்வதற்கு முதல்நாள் பாடகர்கள் பாடி குரலை சீர் செய்து கொள்ளுவார்கள். ஆனால், எனக்கு அது தேவையில்லை. யாராவது ‘பாடுங்கள்’ என்று விரும்பிக் கேட்டால் உடனே நான் பாடுவேன். பக்க வாத்தியங்கள் தேவையில்லை. கச்சேரிகளுக்குக்கூட நான் ஒத்திகை பார்ப்பதில்லை. திருமண வீடுகளில் மாப்பிள்ளை அழைப்பு நள்ளிரவு 12 மணிக்குக்கூட நடக்கும். தூங்கிக் கொண்டிருக்கும் என்னை எழுப்பிப் பாடச் சொல்லுவார்கள். அதுபோல மாநாடுகளில், சிலநேரம் களைப்புடன் புல்தரையில் படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் என்னை எழுப்பி, மேடையில் ஏற்றி பாடச் சொல்லுவார்கள். வழக்கமான எடுப்பான குரலில் பாடுவேன். தூக்கத்தில் எழுப்பிப் பாடச் சொன்னாலும் பாடக்கூடிய பழக்கம், பயிற்சி கிடைத்தது.
உங்கள் முதல் கச்சேரி எப்போது நடந்தது?
1941-ஆம் ஆண்டு தேரழுந்தூரில் ஒரு திருமணத்தில் பாட என்னை அழைத்தார்கள். பக்க வாத்தியங்களுடன் எனது முதல் மேடைக் கச்சேரி, அதுதான். அப்போது எனக்கு 15 வயது. எனது முதல் வெளியூர் கச்சேரியும் அதுதான். நான் பணம் வாங்கிக் கொண்டு செய்த முதல் கச்சேரியும் அதுதான். 25 ரூபாய் கொடுத்தார்கள். அதில் ஏழெட்டு ரூபாய் பக்க வாத்தியக்காரர்களுக்கு போய்விட்டது. அன்றுமுதல் கடந்த 65 ஆண்டுகளில் 5000-க்கும் மேற்பட்டத் திருமண வீடுகளில் பாடியிருக்கிறேன்.
(ராணி வார இதழ் ஆசிரியர் திரு. அ.மா.சாமி இசைமுரசு நாகூர் ஹனீபாவை பேட்டி கண்டபோது அவர் பகிர்ந்துக்கொண்ட அரசியல் அனுபவங்கள் எனது அடுத்த பதிவில் தொடரும்)
நன்றி : http://nagoori.wordpress.com
----------------------------------------------------------------------------------

No comments: