Sunday, May 16, 2010

வணங்காமுடி பதில்கள் (11-05-2010)

ஏமாற்றுபவர்கள் அரசியல்வாதிகளாகிறார்களா? அரசியல்வாதிகள் ஆன பிறகு ஏமாற்றுவாதிகளாகிறார்களா? - சிராஜ்

"எங்களிடம் பணம் முதலீடு செய்தால் இரு மடங்கு திருப்பித் தருகிறோம்; வீட்டுமனை தருகிறோம்; விடுமுறைக்காலச் சுற்றுலா அழைத்துச் செல்கிறோம்" என்று ஏமாற்றுபவர்களும் பிறரது சொத்தைப் போலி ஆவணங்களின் மூலம் மற்றவர்களுக்கு விற்று இருவரையும் ஏமாற்றுபவர்களும் சிட்ஃபண்ட் நடத்திப் பண மோசடிசெய்பவர்களும் அரசியல்வாதிகளானதாகக் கேள்விப்பட்டதில்லை.
"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் பாலாறும் ஓடும்" என்று சொன்னவர்களும் "தட்டினால் தங்கம் வரும்; வெட்டினால் வெள்ளி வரும்; முட்டினால் முத்து வரும்; இடித்தால் இரும்பு வரும்" என்றும் "மூன்றுபடி லட்சியம்; ஒரு படி நிச்சயம்" என்றும் அடுக்குமொழி பேசிய தமிழ்க் காவலர்களும் "நானோ என் குடும்பத்தினரோ அரசுப் பதவிகளைப் பெறமாட்டோம்" என்று கூறிய தமிழ்க்குடிதாங்கிகளும் நல்ல பண்பாடுள்ளவர்களாகத்தான் அரசியலில் நுழைந்தார்கள்.
அரசியலால் வரும் பதவி, அது தரும் அதிகாரம், அதன் மூலம் வளரும் செல்வாக்கு,இவற்றால் கொழிக்கும் பணம் என அனைத்தையும் கண்டபிறகு பொய்யான வாக்குறுதிகள அள்ளி வீசி ஏமாற்றத் தொடங்கினர்.
நாமும் தேர்தல்தோறும் விரல் நுனியில் கறுப்பு மை வாங்கி முகத்தில் கரியைப் பூசிக் கொள்கிறோம்.


இரு கட்சி ஆட்சி முறைதானே இந்தியாவுக்கு சிறந்தது? - நாயகம்

இல்லை. அது சர்வாதிகாரத்துக்கே வழி வகுக்கும்.
ஒரு கட்சி ஆளும் என்றால் மற்ற கட்சி எதிர்க்கட்சி.
பல்வேறு மதம்,சாதி, இனம்,மொழி, பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைகளின் கலவையால் ஒன்றுபட்ட இந்தியாவிற்குள் இந்தியக் குடிமகன் யாரும் அரசியல் கட்சி உருவாக்கலாம் என்ற ஜனநாயக உரிமை இருப்பதால், பலகட்சி முறையே சிறந்தது.
இப்போது மத்தியிலும் பல மாநிலங்களிலும் பல கட்சி ஆட்சிதானே நடந்து வருகிறது.


நதிநீர் பங்கீட்டு முறை சாத்தியமா? - ரஜினி

வினாவில் தெளிவில்லை. நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசுடனான நதிநீர்ப் பங்கீடா அல்லது இந்தியாவிற்குள் மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர்ப் பங்கீடா?
அண்டை நாடுகளுடன் முறையான ஒப்பந்தம் மூலம் இது சாத்தியமாகலாம். மாநிலங்களுக்கிடையில் மத்திய அரசு நதிநீர்ப் பங்கீடு செய்யலாம்.
ஆனால் குறுகிய அரசியல் மற்றும் மாநில வெறிகள் தூண்டப்பட்டு குழப்பம் ஏற்படலாம்.
எனவே உச்சநீதிமன்றம் போன்ற தனித்த உரிமைகளுடன் ஒரு நதிநீர்ப் பங்கீட்டு ஆணையம் --தேர்தல் ஆணையம்போல-- அமைத்தால் இது சாத்தியமே!


சிறு வயதில் தந்தையை விரும்பும் சிறுவன் வளர்ந்த பிறகு எதிரியைப் போல் பார்ப்பது ஏன்? - ஆறுமுகம்

இது பொது விதி இல்லை. வீடு சிறைச்சாலையாகவும் தந்தை சிறைக்காவலனாகவும் இருக்கும் வீடுகளில் இது நடக்கும்.
கட்டுப்பாட்டுடன் வளர்ப்பதாக எண்ணிக் கொண்டு கழற்ற முடியாத தளைகளைப் போட்டால் இப்படி நடக்கும் வாய்ப்பு அதிகம்.
மக்களை சுதந்திரமாக வளர அனுமதிக்க வேண்டும்.தந்தை நண்பனாகப் பழக வேண்டும். படி படி என்று சொல்லி அவர்களைப் பயமுறுத்தக் கூடாது. நம் விருப்பங்களை அவர்கள் மீது திணிக்கவும் கூடாது.
நான் உனக்கு இவற்றையெல்லாம் தருகிறேன்..நீ இப்படி வருவதற்காக என்று அவர்களுக்கு ஒரு குறிக்கோளை அடையாளம் காட்டிவிட்டு அவர்களைக் கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்களிடம் ஏற்படும் தவறுகளை அன்போடு, நட்போடு சுட்டிக் காட்டித் திருத்த வேண்டும்.
நீ இந்தக் குறிக்கோளில் தோற்றுவிட்டால் நான் வருந்துவேன் என்று அவர்களுக்கு உணர்த்திவிட்டால் நாம் வருந்தக்கூடாது என்பது அவர்களின் பொறுப்பாகி விடும். என் மக்கள் என்னை மிக நேசிக்கின்றனர்.


தமிழன் மட்டும் இந்தி படிக்க விரும்புவதில்லையே, ஏன்?- ராஜா

சென்ற தலைமுறையின் தாக்கம் இப்போதும் தொடர்வதால்...
அரசியல் லாபத்துக்காகத் தாய் மொழியைக் குறித்து வெறியேற்றி இந்தி மொழியை எதிரியாகக் காட்டி வெறுப்பை வளர்த்ததன் விளைவு இது.
இந்தி படிக்க வேண்டியது கட்டாயமா என்ன?



வாரிசு அரசியல் மேலை நாடுகளில் இல்லையே எப்படி? - மகேஷ்

மேலை நாடுகளிலும் இருக்கிறது.
மேலை நாடான க்யூபாவின் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ தம் தம்பியான ராவுல் காஸ்ட்ரோவை அதிபராக்கவில்லையா?
அமெரிக்கா மேலை நாடுதானே?
அங்கே ஜார்ஜ் புஷ் அப்பனும் ஜார்ஜ் வி புஷ் மகனும் அதிபராகவில்லையா?
கிளிண்டனின் மனைவி ஹிலாரி கூட அமெரிக்க அதிபர் பதவிக்குப் போடியிடத் தாயாராகவில்லையா?
ஆப்பிரிக்க நாடான எகிப்தில் அதிபர் ஹோஸ்னி முபாரக்கும் லிபியாவில் அதிபர் முஅம்மர் கடாஃபியும் தம் மக்களை அடுத்த வாரிசாக்கப் பயிற்றுவிக்கின்றனர்.
மக்களாட்சி நடக்கும் இந்தியா, அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளில் தேர்தல் மூலம் வாரிசுகள் தேர்ந்தெடுக்கப்படுவதால் நாம் "வாரிசு அரசியல்" எனக் கொச்சைப்படுத்தக்கூடாது.


அணு உலை அத்தியாவசியமா? ஆபத்தா? - விஷால்

'NECESSARY EVIL 'என்று சொல்வார்களே.. கேள்விப்பட்டதில்லையா?
நம் நாட்டின் மின்சாரத் தேவையை நிறைவு செய்ய அணுமின் உலைகள் தேவையே.
எதில் தான் ஆபத்தில்லை.?
நம் நாட்டில் நகரங்களில் சாலையைக் கடப்பது கூட ஆபத்தானதுதான். அதற்காக நாம் சாலையைக் கடக்காமல் இருக்கிறோமா? கடப்பதற்கு முன் பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறோமல்லவா?
அதுபோல அணு உலைகளிலும் தீயவர்களின் நாசவேலை, ஊழியர்களின் அலட்சியம், எந்திரங்களின் பழுது, மூலப்பொருளில் கலப்படம் போன்றவற்றை அதிக அக்கறையுடன் கண்காணித்துத் தடுத்து வந்தால் 99% ஆபத்து வர வாய்ப்பில்லை.



பல மொழிகள் தோன்றியது எவ்வாறு? - சர்தார்

மொழி எண்ணங்களை வெளிப்படுத்தும் கருவி.
உலகில் மனிதன் குழுவாக வாழத் தொடங்கியபோது தன் எண்ணங்களை ஒலிகள் மூலம் வெளிப்படுத்தி இருப்பான்.
பின்னர் உந்தி, தலை,தொண்டை, நெஞ்சு, பற்கள், உதடுகள், நாவு, அண்ணம் ஆகியவற்றின் ஒத்துழைப்போடு "வா", "போ", "தா" போன்ற சொற்களை ஒலித்திருப்பான்.
மனிதர்களை,பொருட்களை, மரம். செடி, கொடிகளை, காய், கனிகளை, விலங்குகளை, பறவைகளை இன்னபிறவற்றை அடையாளப்படுத்தவும் வேறுபடுத்திக் காட்டவும் பெயர்களைச் சூட்டியிருப்பான்.
கோர்வையாகப் பேசியதால் சொற்றொடர்கள் உருவாயின. மனித இனம் பெருகப் பெருகத் தமக்கும் கால்நடைகளுக்கும் நீரும் மேய்ச்சல் நிலமும் தேடிப் பல இடங்களுக்கும் பரவத் தொடங்கிய மனிதன் ஆங்காங்கு புதிய புதிய சொற்களை உருவாக்கியிருப்பான்.
இப்படியே பல இடங்களில் மொழிகள் பல உருவாகி இருக்கலாம்.



நித்யானந்தா நான் ஆண் இல்லை என்கிறாரே?? - குமார்

இந்தக் கூற்றை உடனே புறந்தள்ளிவிட்டது காவல் துறை. நித்தி ஆண் இல்லையென்றால் பெண்ணா?
ஆண் எனச் சொல்லி அரசை ஏமாற்றிப் பாஸ்போர்ட் எடுத்தாரா?
தம் பக்தர்களையும் சீடர்களையும் ஏமாற்றினாரா?
எனில் மற்றொரு மோசடி வழக்கும் அவர்மீது பாயுமே?


அரசிடமிருந்து இலவசங்கள் பெறுவதை கௌரவக் குறைவாக யாரும் கருதுவதில்லையே...ஏன்? - ராஜேஷ்

தம் வாக்குரிமையை அரசியல் கட்சிகளுக்கு விற்போர் அரசிடமிருந்து இலவசங்கள் பெறுவதைக் கெளரவக் குறைச்சலாகக் கருதுவதாவது?
நம் வரிப்பணத்தில் அரசு வழங்குவதுதானே என்ற எண்ணம் கூட இதற்குக் காரணம் ஆகலாம்.


காங்கிரஸ் விரும்பினால் மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலில் கூட்டணி வைப்போம் என பாஜக கூறுவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? - அன்ஸாரி

வியப்பில்லை.
வெட்கம், மானம், சூடு, சொரணை இல்லா அரசியல்வாதிகள் இதுவும் சொல்வார்கள்; இதற்கு மேலும் செய்வார்கள். வெளிநாடான இதாலியைச் சேர்ந்த சோனியாவை இந்தியாவை ஆளும் கட்சியின் தலைவராக ஏற்க முடியாது என்று கடுமையான குற்றச்சாட்டைக் கூறி, சரத் பவாரும் சங்மாவும் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறித் "தேசியவாத காங்கிரஸ்" எனும் கட்சியைத் தொடங்கினர். பின்னர் அவர்களே காங்கிரஸ் கட்சியுடன் அல்லது அவர்களுடன் காங்கிரஸ் கட்சி வெட்கம் கெட்ட கூட்டணி அமைத்து மராட்டிய மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சி அமைத்து அமைச்சர் பதவிகளையும் பங்கிட்டுக் கொண்டனர். சொரணை கெட்டவர்கள்.
ஜெயலலிதா கட்சியுடன் இனிமேல் கூட்டணி வைப்பது பெற்ற தாயைப் புணர்வதற்கு ஒப்பாகும் என்று சொன்ன ராமதாஸ் விரைவிலேயே மீண்டும் கூட்டணி வைத்தார்.
கடந்த காலத்தில், கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளை எதிர்த்தும் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணியிலும் தேர்தலைச் சந்தித்த மார்க்ஸிஸ்ட் கட்சியினர் தமிழகக் கேரள எல்லைப் பகுதிகளில் இப்புறம் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளார்களுக்கு ஆதரவாகவும் அப்புறம் எதிராகவும் பிரச்சாரம் செய்தனர்.
மதவாத கட்சி எனக் கூறப்படும் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதாதளம் கர்நாடகத்தில் கூட்டணி வைத்துக்க் கொண்டது.
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!


வாசகர் கேள்விக்கு பதில் சொல்வதால் என்ன சாதித்தீர்கள் வணங்காமுடி?? - ஜோஸப்

அறிவைத் தேடும் வாய்ப்புக் கிடைத்தது....


கலைஞரைப்போல் யாருக்கேனும் இந்தளவு பாராட்டு விழா நடந்திருக்கிறதா? - அழகு

கேட்டு வாங்கினால் யாருக்கும் இதுபோல் நடக்கும்.
நான் ஒரு வார இதழில் படித்த செய்தி:--
"சிலநாட்களுக்கு முன்பாக துணை சபாநாயகர் வி.பி.துரைசாமிக்கு முதல்வரிடம் இருந்து அழைப்பு வந்திருக்கிறது. 'அட! நம்மையும் முதல்வர் அழைத்துப் பேசுகிறாரே' என்று சந்தோஷப்பட்டுக் கொண்டே கோபாலபுரத்துக்கு ஓடினார் துரைசாமி.
'வாயா! அருந்ததி இனத்துக்கு ஏகப்பட்ட சலுகைகள் செஞ்சிருக்கேன். ஒருத்தரும் பாராட்டு விழா நடத்த முன்வரலையே?' என்று கேட்டார்.'ஏற்பாடு செஞ்சிடுறேன் தலைவரே' என்று ஒரு வரியுடன் திரும்பினார் துரைசாமி. வரும் டிசம்பர் 5ஆம்தேதி அருந்ததியருக்குச் சலுகைகள் வழங்கியதற்காக வள்ளுவர் கோட்டத்தில் விழா நடக்கிறது.
- தமிழக அரசியல் இதழ் 03/12/09
உண்மையான பாராட்டு என்பது பதவியில் இல்லாதபோதும் தரப்படுவதே!

பன்றி காய்ச்சல் என்ன ஆச்சு? - சுந்தரம்

பரபரப்பு அடங்கி விட்டது.
பன்றிக்காய்ச்சல் தொடர்பாக இதற்கு முன் அளித்த விடையையும் பாருங்களேன்.

ஏமாற்றுபவர்கள் பிடிபடும் செய்தி தொடர்ந்து வந்தாலும் மக்கள் ஏமாறிக் கொண்டே இருப்பது வியப்பாக இல்லையா? - ரமேஷ்

இல்லை!
உழைப்பை நம்பாமல் வேறு வழியில் விரைந்து பணக்காரனாக ஆசைப்படுவோரும் போலிச்சாமியார் மூலம் குறுக்கு வழியில்கடவுள் அருளைப் பெற எண்ணுவோரும் இருப்பதுவரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்.
 
Source :http://www.inneram.com/201005108256/vanangamudi-answers-11-05-2010

No comments: