Monday, November 24, 2014

நிகழ்வுகளில் பரவும் விஷம் -நிஷா/ நிஷா மன்சூரின் கவிதையும் தாஜின் விமர்சனமும்::

மிகுந்த தீர்மானத்துடன்
பாரபட்சமற்றிருக்கும் சாவு
தன் தடயங்களை
இச் சகதியுள் பதிந்திருக்கும்
கூர்முட்களின் வடிவில் வெளிப்படுத்துகிறது

என் விரலிடுக்குக் காயங்களின்
சீழ்வடிந்து
அலுவலக வெண்லெட்ஜர்கள்
அசுத்தமாகிக் கொண்டிருக்கின்றன

என் தயக்கமான பேச்சின்போது
தொடர்ச்சியான கட்டுப்படுத்தல்கள்
எவற்றிற்கும் சிக்காமல்
ரத்தத்துளிகள் பீறிட்டுத் தெறிக்கின்றன….
(அப்போது பரவும் கெட்டுப்போன மாமிசவாடை
உங்களை மிகவும் சிரமப்படுத்துகிறது)

இச்சிவந்த கண்கள்
எந்த நேரத்திலும் வெடித்துப்பிதுங்கி
வெளிவரக்கூடும்
(தூக்கமிழந்த நாட்களின் எண்ணிக்கை
ஒரு முழு டைரியை விழுங்கிவிட்டது)

நீண்ட நீண்ட பயணங்களின் விளைவாய்
நைந்துபோயிருக்கும் பிருஷ்டங்களை
பட்டுத்துணி போர்த்தி
அமர வைத்திருக்கிறேன்

எந்தப் படிகாரங்களாலும் களையமுடியாத
தீவிரமான அழுக்கு படிந்து
என் இதயம்
மேலும் மேலும் துருவேறிக் கொண்டிருக்கிறது.

எனினும்
கடந்த மூன்று நாட்களாய்
இப்பாறையைப் புரட்டிப்போட
முயன்று கொண்டிருக்கிறேன்….
சூரியக் கதிர்கள் உட்புகா அடிப்புறத்திலிருந்து
ஈர வாசனையுடனும்
தனிமை குலைக்கப்பட்ட சீற்றத்துடனும்
ஒரு தேளோ,பூராணோ வெளிப்பட்டால்
மிகுந்த மகிழ்ச்சியடைவேன்…!!
நிஷா மன்சூர்

-கணையாழி-1995
*
விமர்சனம்:
கவிஞன்
நிகழ்வின் மூன்று தினங்களில்
தான் கொண்ட மரணவலியை
மிகத் துல்லியமாக சொல்வது குறைவு.
இங்கே அது
விஸ்தாரணமாக சொல்லப்படுகிறது.

பீரிடும் ரத்தம் -
சிதையும் சதைப்பிண்டத்தின்
மாமிசவாடை -
நைந்து போன இருப்பை போணல் -
சுயத்தை இறக்கிவைக்கும் டையின் ரொம்பல் -
துருவேறிய மனம் - என்று
இருப்பு குலைக்கப்பட
வாழ்வின் முடிவை வேண்டி
தவிக்கிறது
அவனது மனம்.

// இருக்கமான படிம வார்த்தைகளில்
பின்னப்பட்டிருக்கும் இக்கவிதை
தரும் நிறைவு அலாதியானது என்றாலும்...
வேதனை மிகுந்த கவிதை!
வாழ்த்துகளுடனும்
மகிழ்ச்சியுடனும்

Taj Deen- தாஜ்

No comments: