Tuesday, November 18, 2014

மனம் - இப்புவியை வெல்லும்....! மனம் - மாண்பு பெறும்....!


ஊருக்குப் புறப்படும் முன்னரே
ஊர் போய் சேர்ந்தது # மனம்

மனப் பயணங்கள்.

இருந்த இடத்திலிருந்தே
பல்லாயிரம் மைல்கள் பயணித்து
மனச் சுமை இறக்க எத்தனிக்கும்
அமைதி காண கனாப் பயணம்.

மனம் - மாண்பு பெறும்....!
காயப் படுத்தும் வார்த்தைகளால்
மனம் - ரணகளப் படும்
அடங்காமல் துள்ளித் திரியும்
மனம் - பட்டுத் தெளியும்

ஆணவம் கொண்டு அலையும்
மனம் - ஆபத்தை அரவணைக்கும்
உண்மை அன்புக்காக ஏங்கும்
மனம் - அதற்கே அடிமையாகும்

துக்கத்தை உணர்ந்து அழும்
மனம் - ஆறுதல் தேடும்
செய்ததவறுக்கு மன்னிப்பு கேட்கும்
மனம் - மாண்பு பெறும்.
******************
பதைபதைக்கும் பெற்ற மனம்…….!

ஒடிந்துபோகும் இடுப்பில்
கிழிந்துபோகும் கால்சொக்காய்
கழந்து விழப்போகும்
புட்டியில் கட்டிய பட்டி
நொடிந்த நடை
நிமிராத நெஞ்சு
கண்ணில் பரந்த
கறுப்புக் கண்ணடை
பட்டி தொட்டியெல்லாம்
பறக்கும் பைக்
கைவிடாத கைபேசி
குட்டை செய்தியில் குடியிருத்தம்
தட்டிக் கேட்க முடியாத வீட்டார்
தட்டிக் கழித்த படித்தம்
லூட்டி அடிக்கும் பொடுபோக்கு
பெற்று வளர்த்தோரை காக்கும்
காலம் வரும்போது
இளைஞனே……….
கைவிட்டு விடுவாயோ?
பதைபதைக்கும் பெற்ற மனம்.

************************
தைமனம் - வருவ வரவேற்கும்....!

பாசம் கொண்டு பரிதவிக்கும்
மனம் - பித்துபிடித்து வாழும்
பல்லாண்டு வாழ நினைக்கும்
மனம் - பாசத்தை வளர்க்கும்

பிரிவினை துயரை தாங்காத
மனம் - உறவைனாடி நடக்கும்
உறவுகளிடம் உடன்பிறப்பாய் பழகும்
மனம் - உறுதுணையாய் இருக்கும்

கடந்துவந்த பாதையினை மறக்காத
மனம் - வீழ்ச்சி அடையாது
வசந்தம்வேண்டி காலம்காலமாய் காத்திருக்கும்
மனம் - வருவதை வரவேற்கும்
**********************
மனம் - நேர்பட பேசும்....!

எல்லாம் தனக்கானதென எண்ணும்
மனம் - பகிர்ந்து உண்ணாது
பகிர்ந்துண்ணும் பக்குவம் கொண்ட
மனம் - தாய்மை வளர்க்கும்

உணர்ச்சிப் பெருக்கில் உழலும்
மனம் - உண்மை அறியாது
உண்மையை அறிய ஆராயும்
மனம் - தெளிந்து அறியும்

தெளிவான பார்வை கொண்ட
மனம் - தொலைநோக்கு காணும்
தொலைநோக்கு திட்டம்கொண்டு வாழும்
மனம் - நேர்பட பேசும்
*********************

மனமே….!

அடிக்காமல் அழவைக்கிறாய்
என்னை
ஆட்டிப் படைக்கிறாய்
தினமும்
அடங்காமல் மிரட்டியே
என்னை
ஆட விடுகிறாய்

நினைவுகளைத் தந்துவிட்டு
அவைகளை
மறக்க மறுக்கிறாய்
நீ போகும் பாதையில்
என்னையும்
இழுத்தே செல்கிறாய்

எல்லையே இல்லாத
உனது
இலக்கு எட்டுமோ
எனது
மனக் கணக்கில்.
*************************

மனம் - இப்புவியை வெல்லும்....!

வறுமையை வென்றுவிட துடிக்கும்
மனம் - திறமையை நம்பும்
வலியை விரட்ட எண்ணும்
மனம் - வலிமையை வளர்க்கும்

விடியல் வேண்டி உழைக்கும்
மனம் - அடையாமல் மடியாது
தனிமையில் இன்பம்தேடி அலையும்
மனம் - தன்னம்பிக்கை கொள்ளாது

உரிமைக்கு குரல் கொடுக்கும்
மனம் - உயிர்களை காக்கும்
புதுமையை மகிழ்வாய் விரும்பும்
மனம் - இப்புவியை வெல்லும்.
**********************

மனம் - சுமைகளைத் தாங்கும்....!

உறவை உள்ளளவு உணர்ந்த
மனம் - அருமையை அறியும்
அருமையாய் உபசரிப்பை பேணும்
மனம் - விருந்தோம்பி வாழும்

பணத்தை மட்டுமே விரும்பும்
மனம் - உறவுகளிடம் ஓட்டாது
சுற்றத்தார் உணர்வுகளை மதிக்கும்
மனம் - பரந்து விரியும்

பாசம் வேண்டி பழகும்
மனம் - பொறுப்புடன் இருக்கும்
பொறுப்பைத் தட்டிக் கழிக்காத
மனம் - சுமைகளைத் தாங்கும்.


கவிதை யாத்தவர் ராஜா வாவுபிள்ளை
 நன்றி சங்கம் அப்துல் காதர் அவர்களுக்கு - முகம்மது அலி ஜின்னா
 ********************************************************************************






வாழ்த்துகள் !!!
சொல்பவர் Isma YourFren

No comments: