Saturday, November 22, 2014

’’வாழ்க்கை சிக்கலானது இல்லை, ரொம்ப எளிமையானது தான்,..."/ பிரியா தம்பி

’’வாழ்க்கை சிக்கலானது இல்லை, ரொம்ப எளிமையானது தான், நமக்கு கிடைச்சிருக்கிற இந்த வாழ்க்கையை எப்படி மத்தவங்களுக்கு பயன்படுற மாதிரி உபயோகமா, சந்தோஷமா வாழறதுன்னு யோசிக்கிறோம்’’ என சக்கர நாற்காலியில் உட்கார்ந்து சிரித்தபடி சொல்கிறார்கள் இந்த இரு சகோதரிகளும்.

மஸ்குலர் டிஸ்ட்ரோபி என்னும் தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட வானவன் மாதேவி, இயல் இசை வல்லபி என்கிற இரு சகோதரிகளைப் பற்றி ஏற்கனவே வாசித்திருக்கிறேன். அவர்களைப் பற்றி குறும்படம் தயாரித்திருக்கிறார் கீதா. ‘’முள்ளுக்காட்டுல தாங்க ஒவ்வொரு தடவையும் போயிட்டு வரணும்’’ என மாற்றுத் திறனாளி பெண் ஒருத்தி கீதா இயக்கிய ‘மாதவிடாய்’ ஆவணப் படத்தில் சொன்னபோது அதிர்ந்து போயிருக்கிறேன். அதுவரை அப்படியான பெண்கள் என்ன செய்வார்கள் என யோசித்திருக்கவே இல்லை.


‘’நம்பிக்கை மனுஷிகள்’’ என்கிற இந்தக் குறும்படத்திலும் எனக்கு அதுவே நேரந்தது. மருத்துவம் தொடர்பாக நம்பிக்கையும், நோய்கள் தொடர்பாக எனக்கு பயமும் எப்போதுமே அதிகம். இடது பக்கம் தோள் வலித்தால், அது மாரடைப்பாக இருக்குமோ என யோசித்து, அடுத்த பத்து நிமிடத்துக்கு மாரடைப்பின் அறிகுறிகளை எனக்கு யோசித்து, அந்த அறிகுறிகள் வந்து விட்டதாகவே பயந்து விடுவேன். இந்த குறும்படம் பார்க்கும்போது, என்னை நினைத்து நிஜமாகவே வெட்கமாக இருந்தது.

’’அக்காவுக்கு வந்ததும், அடுத்து நான் தடுமாறி விழ ஆரம்பிச்சேன். எனக்கும் இந்த நோய் தான் வந்திருக்குன்னு தெரிஞ்சிது. எல்லா இயக்கமும் நின்னுபோய், சக்கர நாற்காலின்னு ஆனப்பிறகு நிம்மதியா இருந்தது. இனி அடிக்கடி விழ வேண்டாமே’’ என சிரித்தபடி தனக்கு அனுமதிக்கப்பட்ட வாழ்க்கையை ஏற்றுக் கொண்ட தெளிவி உண்மையிலேயே கற்றுக் கொள்ள வேண்டியது.

எனக்கு புருஷன் இல்ல, எனக்கு புள்ள இல்ல, எனக்கு காதலி இல்ல, எனக்கு அம்மா இல்ல, எனக்கு வேலை இல்ல, எனக்கு பணம் இல்ல என நம்மிடம் தான் எத்தனை ‘இல்லை’ புலம்பல்கள். ஆனால் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு எனக்கு என்ன இருக்கிறது, என்னிடம் இருப்பதை வைத்து நான் பிறருக்கு என்ன செய்ய முடியும்,என் கஷ்டம் இன்னும் சில பேருக்காவது வராமல் தடுக்க முடியுமா என யோசித்திருக்கிறார்கள் இருவரும்.. உண்மையிலேயே பிரமிப்பாக இருக்கிறது.

நடக்க முடிகிற, வேலை செய்ய முடிகிற பெண்ணாக மற்றொருவரை சில விஷயங்களில் உணர்வுப்பூர்வமாக சார்ந்திருப்பதே எத்தனை பெரிய வலி என்பதை அறிவேன். ஆனால் நடக்க, எழுந்து உட்கார, பயணிக்க, தன் தினசரி வேலைகளை செய்ய இன்னொருவரை சார்ந்திருக்க வேண்டிய நிலையிலும் தொடர்ந்து பயணிக்க, தன்னைப் போய் உள்ளவர்களை சந்திக்க, நான் இருக்கிறேன் உங்களுக்கு என சொல்ல எத்தனை பெரிய மனது வேண்டும்?

சகோதரிகளின் பேச்சில் ஒரு இடத்தில் கூட அவநம்பிக்கை இல்லை. சுயபச்சாதாபம் இல்லை. நடந்ததை ஏற்றுக் கொண்டு நகர்கிற பக்குவமும், என்னால் பிறருக்கு என்ன உதவ முடியும் என்கிற ஆர்வமுமே தெரிகிறது. இதை கற்றுக் கொள்ள முயல்கிறேன். ‘’இந்த நோய் முதன் முதலா 1840 ல தான் கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த நேரத்துல தான் விவசாயத்துல பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த ஆரம்பிச்சிருக்காங்க. ஸோ, பூச்சிக்கொல்லியோட தாக்கம் முதல்முறையிலே தெரிய ஆரம்பிச்சிருக்குன்னு நினைக்கிறேன்’’ என ஒரு இடத்தில் சொல்கிறார்கள்.

இன்னும் அதிகம் பேருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தில் தனியாக மஸ்குலர் டிஸ்ட்ரோபியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனை ஆரம்பிக்க வேண்டும் என்கிற தங்கள் கனவை சொல்கிறார்கள் இருவரும். கூடவே, ‘’கார்ப்பரேட்ல பணம் வாங்குறதா எண்ணமே இல்லை. எங்க நிலத்தை சிதைச்சிட்டு, எங்களுக்கு தர்ற எந்த உதவியும் வேண்டாம்’’ என சொல்கிறார்கள்... சல்யூட்....

என் நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொள்ளவாவது நான் உங்களை விரைவில் நேரில் சந்திக்க வேண்டும் எனத் தோன்றுகிறது...

இந்தக் குறும்படம் இந்த நோய் பற்றி இன்னும் அதிகம் விழிப்புணர்வு ஏற்படவும், சகோதரிகளின் கனவை நிறைவேற்றவும் பயன்படும் என நம்பிக்கை வருகிறது... இயக்குனர் கீதாவுக்கும், சகோதரிகள் இருவருக்கும் வாழ்த்துகள்...

குறும்பட இணைப்பு : https://www.youtube.com/watch?v=svH7fYOOnE4

Geeta Ilangovan நிறைய அன்பு உங்களுக்கு***

பிரியா தம்பி Priya Thambi
நன்றி  

No comments: