Sunday, November 16, 2014

குழந்தை வளர்ப்பின் 10 கட்டளைகள்.



1 பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல ஒரு முன்மாதிரியாக விளங்க வேண்டும். பெற்றோரின் செயல்களை உள் வாங்கியே குழந்தை வளரும்.

தினமும் தன் தந்தையிடம் பர்சைக் கேட்டு அடம்பிடிக்கும் ஒரு குழந்தையிடம் தந்தை பர்சை தூர எறிவது போல பாவ்லா காட்டுவது வழக்கம். இதை கவனித்து வளர்ந்தது குழந்தை. ஒருநாள் ரயிலில் பயணம் சென்று கொண்டிருந்தபோது குழந்தை தந்தையிடமிருந்த பர்சை எடுத்து சன்னல் வழியேவெளியே எறிந்து விட்டது. குழந்தைகள் பெற்றோரின் செயல்களை உள்வாங்கி செயல்படும் என்பதற்கு இந்தச் சிறு நிகழ்வை ஒரு சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம்.

குழந்தைகளுடன் அமைதியாகவும், தெளிவாகவும் அன்பாகவும் பேசுங்கள். குழந்தைகளும் அதையே பின்பற்றும். குழந்தைகளிடம் நீங்கள் கோபமாகவும், எரிச்சலுடனும் பேசினால் குழந்தைகளும் அதையே கற்று வளரும்.
2 குழந்தைகளின் செயல்கள் உங்களை எப்படிப் பாதிக்கின்றன என்பதை அமைதியாகவும் தெளிவாகவும் அவர்களுக்கு உணர்த்துங்கள். மூன்று வயதான ஒரு குழந்தை உங்கள் இடத்திலிருந்து உங்கள் மனநிலையைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தைப் பெற்று விடுகிறது என்கின்றனர் மருத்துவர்கள். நான் எழுதிக்கொண்டிருக்கிறேன் தொந்தரவு செய்யாமல் போய் விளையாடு என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்ளும் மனநிலை அந்த சிறு வயதிலேயே குழந்தைக்கு வாய்த்து விடுகிறது.

3 குழந்தைகள் செய்யும் சிறு சிறு செயல்களுக்கும் அவர்களைப் பாராட்ட வேண்டும். ஆறுமுறை பாராட்டினால் ஒரு முறை தவறை சுட்டிக் காட்டலாம் என்னும் கணக்கு சிறந்தது என்கின்றனர் நிபுணர்கள். அதிக எதிர்மறை கருத்துக்கள் குழந்தைகளைப் பாதிக்கும். ஆனால் பெற்றோர் தங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதை விட திட்டுவது மேல் என்றே குழந்தைகள் நினைக்கின்றனவாம்.

குழந்தைகளைக் கண்டு கொள்ளாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் குழந்தை ஓடிச் சென்று தொலைக்காட்சியை அணைப்பது இதனால் தான். எப்படியேனும் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப வேண்டும் எனும் குழந்தையின் ஆதங்கம் தான் அது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். எனவே குழந்தையின் செயல்களை ஆழமாகக் கவனியுங்கள். ஒவ்வொரு சரியான செயலையும் தவறாமல் பாராட்டுங்கள்.

4 குழந்தைகள் விளையாடும் இடத்திற்கு இறங்கிச் சென்று குழந்தையோடு குழந்தையாக உரையாடுவதே சிறந்தது. அவர்கள் தரையில் அமர்ந்தாலும், வெளியே மணலில் புரண்டாலும் அவர்கள் அருகில் அமர்ந்திருந்து உரையாடுங்கள். குழந்தைகள் பேசுவதை கவனமுடன் கேட்டு பதிலளியுங்கள். அதை குழந்தைகள் மிகவும் அதிகமாக விரும்புகின்றனவாம். குழந்தைகளின் பேச்சுகள் கவனிக்கப்படாமல் போகும்போது அவை மனரீதியான பாதிப்பை அடைகிறதாம்

5 நீங்கள் கொடுக்கும் உறுதி மொழியை நிறைவேற்றுங்கள். அது மிக மிக முக்கியம். குழந்தைகளுக்கு உங்கள் வார்த்தைகளின் மீது நம்பிக்கை எழவும், உங்களிடம் குழந்தை பாதுகாப்பை உணரவும் அது வழி வகுக்கும்.

வெறுமனே உங்கள் விருப்பம் நிறைவேறுவதற்காக போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள். ‘ஒழுங்கா சாப்பிட்டா கடைக்குக் கூட்டிப் போகிறேன்’, ‘அமைதியா இருந்தா சாக்லேட் வாங்கி தரேன்’ என எது சொன்னாலும் அதை நிறைவேற்றுங்கள். நிறைவேற்ற வேண்டும் எனும் சிந்தனையில் நீங்கள் உறுதிமொழிகள் வழங்கும் போது உங்கள் உறுதிமொழிகளும் நேர்மையாய் இருக்கும். குழந்தைகளும் உங்களிடம் நம்பிக்கை வளர்க்கும்.

6 குழந்தைகளுக்கு சில பொருட்கள் மிகவும் உற்சாகத்தைக் கொடுக்கும். கண்ணாடி அணிந்திருக்கையில் கண்ணாடியைப் பிடுங்கி எறிவது குழந்தைக்குப் பிடிக்கும் என்றால் கண்ணாடியை மறைவாக வைத்திருக்க முயலுங்கள், முடிந்த மட்டும்.

7 உங்கள் குழந்தை ஏதேனும் சுவாரஸ்யமாய் செய்து கொண்டிருந்தால் அது உங்களைப் பாதிக்காதவரையில் கண்டு கொள்ளவேண்டாம். உங்கள் சட்டங்களை குழந்தைகளின் விளையாட்டில் வரையறை செய்ய வேண்டாம். குழந்தை ஒரு எறும்பை பின் தொடர்வதை பெரிதும் விரும்பினால் விட்டு விடுங்கள். அதை விடுத்து ‘அதெல்லாம் பண்ணாதே’ என்ற அதட்டல் தேவையில்லை. குழந்தையின் போக்கில் குழந்தையை வளர விடுவது குழந்தையின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். பெற்றோருடன் அதிக கருத்து வேற்றுமை, மன வருத்தம் வருவதையும் தவிர்க்கும்.

8 குழந்தையிடம் ‘செய்யாதே’ என்று ஒரு செயலை வலியுறுத்துகிறீர்கள் எனில் அதில் நீங்கள் உறுதியாய் இருங்கள். மனைவி ‘செய்யாதே’ என்று சொல்ல, கணவன் ‘செய்யட்டும் பரவாயில்லை’ என்று சொல்லி குழப்பாதீர்கள். சொல்ல வேண்டியதை நேரடியாகவும், எளிமையாகவும் சொல்லுங்கள். செய்யாதே என்று சொல்லப்படுவதைச் செய்வதில் எல்லோரையும் விட குழந்தைகள் ஆர்வமாய் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சில விஷயங்களை குழந்தைகளின் தவறுகளிலிருந்து குழந்தைகளே கற்றுக் கொள்ளும். அதை தடுக்க வேண்டாம். வீட்டுப் பாடம் எழுத ஒரு நாள் மறந்தால், அதற்குரிய தண்டனை பெறட்டும். மறு நாளிலிருந்து நினைவில் வைத்திருப்பார்கள்.

9 குழந்தைகள் முக்கியமானவர்கள் எனும் நிலையை குடும்பங்களில் உருவாக்க மறக்க வேண்டாம். சற்று வளர்ந்த குழந்தைகளை வீட்டின் அனைத்து நிகழ்வுகளிலும் கலந்தாலோசிப்பதும், கலந்து பணிகளைச் செய்ய வைப்பதும் சிறந்தது. அது குழந்தைகளின் தன்னம்பிக்கையையும், இருப்பையும் வலிமையாக்கும்.
கிண்டல், காயம் இல்லாத நகைச்சுவை உணர்வை குடும்பத்தில் குழந்தைகளோடு பகிர்ந்து கொள்ளுங்கள். சேர்ந்து உண்பதும், சேர்ந்து சிரிப்பதும் பலமான குடும்ப உறவின் பாலங்க

10 குழந்தைகளுக்கு தோல்விகளையும் பழக்குங்கள். கேட்பதை எல்லாம் கொடுப்பதோ, சொல்வதை எல்லாம் செய்வதோ மிகவும் தவறானது. அத்தகைய குழந்தைகள் திடீரென பள்ளித் தேர்வில் வரும் ஒரு தோல்வியைக் கூட சந்திக்க முடியாமல் முடங்கி விடுவார்கள். எனவே தோல்விகளையும் பழக்குங்கள். தோல்விகளும், வெற்றிகளும் கலந்ததே வாழ்க்கை எனும் தத்துவம் அவர்களுக்குப் புரிய வேண்டியது அவசியம்.

- சேவியர்
நன்றி : பெண்ணே நீ, மாதர் இதழ்.
தகவல் தந்தவர் Joseph Xavier Dasaian Tbb

No comments: