Sunday, November 16, 2014

கரை சேர்த்தத் தோணிகள் ..

யாதுமே அறியாத
யாம் பெற்றவோருயிர்கு
யாதுமாய் யாமிருந்து
யாவற்றையும்
கற்பித்தோம்

ஐம்புலன்களும்
கொண்டிருந்தான்
அஃதெதிலும் பயனில்லை
கைப்பிடித்து நடைப்பழக்கி
காட்சிகளைக் கற்பித்தோம்
பசிக்கின்ற உணர்வைக்கூட
பகரத்தெரியாப் பிள்ளைக்கு
வெண்குருதி மார்பிறக்கி
முன் ருசியை
கற்பித்தோம்

காணக்கண்களிரண்டிருந்தும்
காண்பதும் அறியா நிலை
ஊனக்கண் தோலுறித்து
உறவனைத்தும்
கற்பித்தோம்

சாணேறி முழமேறி
சான்றோனெனும் குலமேற
சதைக்கோர்த்த
ஏணியானோம்
நற்கரைச்சேரத்
தோணியானோம்

யாவையுமே கற்றறிந்த
யாம் பெற்ற செல்ல மகன்
எமைப்பார்த்து அழகுறவே
ஏதமறியா கிழமென்றான்

செல்லமான உறவுகளில்
மனைவியொடுப்பிள்ளையுமாய்
செல்லப்பிராணிகளையும்
சேர்த்திட்டச் செல்ல மகன்

விதைத்தீர் நீரிறைத்தீரென
வேதாந்தம் கற்பித்து
முதியோர் இல்லம் சேர்த்தான்
நான் மூச்சடைத்துப் பெற்ற மகன் .

கவிதை ஆக்கம்  தமிழ் பிரியன் நசீர்

                                            தமிழ் பிரியன் நசீர் அவர்களுக்கு நன்றி 

No comments: