அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா
தமிழகத்தில் இஸ்லாம்
பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும்.
சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் கண்டு அனுதாபப்படுகிறோம். ஆனால் உரித்தெடுத்த பலாச்சுளையைப் போன்றது தான் இஸ்லாம்.
இஸ்லாம் எல்லாக்காலத்திற்கும், எல்லா நாட்டினருக்கும் பொருந்திய மதமாக அமைந்திருக்கிறது. ஒரு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஏதாவது ஒரு பிரச்சினை தோன்றினாலும் செய்ய வேண்டுவதெல்லாம் நபிகள் நாயகம் அவர்களுடைய கருத்துக்களிலிருந்து பகுத்தறிவு விளக்கம் கொடுக்க வேண்டியதுதான், எல்லாப் பிரச்சினைகளுக்கும் விடை காணமுடியும்.
பிற மதங்களிலே அற்புதங்கள் அதிகம்; அடிப்படை உண்மைகள் குறைவு. இஸ்லாத்திலே அடிப்படை உண்மைகள் அதிகம்; அற்புதங்கள் குறைவாகவேயுள்ளன.
இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்ற கூற்று அர்த்தமற்றது; இஸ்லாத்தை பரப்ப வாள் பயன்பட்டதில்லை. ஆனால் சிலுவை யுத்தங்களிலே இஸ்லாத்தைக் காக்க அது பயன்பட்டதுண்டு.
இந்தியாவில் முகலாயர் ஆட்சியும் மற்ற முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியும் இருந்தபோது முஸ்லிம்கள் ஒரு கோடிபேர் கூட இருக்கவில்லை. அந்த அரசுகளெல்லாம் மறைந்த பிறகே பத்து கோடி மக்களாகப் பெருகினார்கள்.
"ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ன நன்னெறி பரவியிருந்த நாட்டிலே இடையிலே அக்கருத்துக்களெல்லாம் மறந்திருந்த நிலையில் இஸ்லாம் அக்கருத்துக்களையே வலியுறுத்தவும், 1300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இஸ்லாம் பரவிற்று.
தொட்டிலிலே படுத்துறங்கும் குழந்தையைத் தட்டி எழுப்பிய உடனே தாயை எப்படி கட்டியணைத்துக் கொள்கிறதோ அவ்வாறே தமிழகத்தில் இஸ்லாமிய கருத்துக்கள் தழுவப்பட்டன.
இருளும் ஒளியும்
இங்கு எனக்கு முன்பு பேசிய தோழர்கள் எல்லோரும், நல்ல முறையிலே, இஸ்லாமிய கோட்பாடுகளையும், நபிகள் நாயகத்தின் மாண்புகளையும் எடுத்துரைத்தார்கள். இங்கு பேசியவர்கள் அனைவரும் இளைஞர்களாகவும், இந்த இளைஞர்கள் எல்லோரும் இஸ்லாமியர்களாகவும், இருந்தார்கள் என்பதையறிந்து நான் மூன்று காரணங்களால் மகிழ்ச்சியடைகிறேன்.
இஸ்லாமிய இளைஞர்கள் நல்ல முறையிலே பேசிப் பழகவேண்டும் என்பது என் ஆசை; அதன்படி, பேசிய இளைஞர் அனைவருமே நன்றாகப் பேசினார்கள்.
இரண்டாவதாக, இஸ்லாமியருக்கும்-தி.மு.கழகத்தித் தொடர்பு அதிகம் இருப்பதால் சில முஸ்லிம் பெரியவர்கள் பயப்படுகிறார்கள். "அது தவறு" என்பதை எடுத்துரைத்தார்கள்.
மூன்றாவதாக, இஸ்லாமிய இளைஞர்கள் முகம்மது நபியின் அருமை பெருமைகளை நன்றாக அறிந்திருக்க வேண்டும் என்பதிலே நாட்டம் கொண்டவன் நான். இங்கு பேசியவர்கள் முகம்மது நபியைப் பற்றி நல்ல முறையிலே, எல்லோருக்கும் புரியும் வகையிலே, நல்ல தமிழிலே எடுத்துரைக்கும் ஆற்றலைப் பெற்றிருப்பதிலே மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இங்கு பேசிய நண்பர்கள் கூறினார்கள்- இந்த விழாவில் அண்ணா கலந்து கொள்ளலாமா என்று யாரோ சிலர் கேட்டதாக நினைத்துக் கொண்டு, அதற்கு பதிலளிக்கும் வகையிலே பேசினார்கள். இப்பொழுதெல்லாம் அப்படி கேட்பதில்லை. அதற்கு பதிலாக, "இவ்வாண்டு அண்ணாதுரை ஏன் கலந்து கொள்ளவில்லை?" என்று தான் கேட்கிறார்கள். ஒரு 20, 25ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார்கள் - முகம்மது நபி விழாவிலே அண்ணாதுரை கலந்து கொள்ளலாமா? என்று! ஆனால் இப்பொழுது கேட்பதில்லை.
எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் ஏற்பட்ட தொடர்பு இன்று நேற்றல்ல - 30 ஆண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டிருக்கிறது. நண்பர் ஒருவர் இங்கு பேசுகையில் நான் வெளியூரில் ஒரு விழாவிலே கலந்து கொண்டபோது யாரோ என்னை ஒரு கேள்வி கேட்டதாகவும், அதற்கு நான் இன்ன விதத்தில் பதிலளித்தேன் என்று குறிப்பிட்டார். அதை உங்களிடத்திலே விளக்கமாகச் சொல்லுவதும் நல்லது என்று நினைக்கிறேன். என்னைக் கேட்டவருடைய பெயர் கூட எனக்கு நினைவிருக்கிறது.
"நீங்கள் இவ்வளவு நன்றாக முகம்மது நபியையும், இஸ்லாமியக் கோட்பாடுகளையும் பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள் ஏன் இஸ்லாமியத்திலே சேர்ந்து விடக்கூடாது?" என்று அவர்கள் கேட்டார்கள்.
அவர்களுக்கு அளித்த பதில் இதுதான்: "இஸ்லாத்தில் மார்க்கக் கட்டளை என்றும், திட்டங்கள் என்றும் சில உண்டு. இஸ்லாமிய சமுதாய அமைப்புக்கு 'ஜமாஅத்' என்று பெயர். இஸ்லாமிய கோட்பாடுகளை மார்க்கத் துறையை ஏற்று, அதிலே தங்களை ஈடுபடுத்திக் கொள்பவர்கள் ஏக தெய்வம் என்ற கொள்கையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆண்டவனுக்கு உருவம் கொடுத்து, அதற்குப் பூசை செய்து பிறரை ஏமாற்றும் எண்ணம் கூடாது. அந்த வகையிலே பார்த்தால் நான் இஸ்லாமியன் தான். ஆனால் இஸ்லாமிய 'ஜமாஅத்'திலே நான் இல்லை".
நான் இஸ்லாத்தில் சேர்ந்து அதன் பிறகு பாராட்டுவதிலே அருமை பெருமை இல்லை. என்வீடு மிக நல்ல வீடு என்று நானே எடுத்துச் சொல்வது எப்படிச் சரியில்லையோ, அதைப் போலத்தான் அது அமையும். என் வீட்டைப் பற்றி நான் பெருமைப் படுவதிலே ஆச்சரியமில்லை, 'ஜமாஅத்'திலே சேராமலே இஸ்லாத்தின் நன்மைகளை எடுத்துச் சொல்வதில் தான் பெருமை.
எனக்கு முன் பேசியவர்கள் எச்.ஜி.வெல்ஸ், ஜார்ஜ் பெர்னாட்ஷா, காந்தி போன்ற பெரியவர்கள் முஹம்மது நபியைப் பற்றிக் கூறியுள்ளதை எடுத்துச் சொன்னார்கள். அந்தப் பெரியவர்களெல்லாம் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களானதால் அவர்கள் பாராட்டியதிலே பெருமை இருக்கிறது. எனவே, ஆயிரத்தோடு ஆயிரத்தொன்று என்று என்னையும் இஸ்லாமியனாக்குவதிலே பெருமையில்லை.
யார் எந்த மார்க்கத்தைச் சேர்ந்தவரானாலும், எந்த இனத்தில்-குலத்தில் பிறந்தவரானாலும் நபிகள் நாயகத்தைப் பற்றிப் பேசினால். இஸ்லாமிய சமூகத்தினர் வரவேற்கின்றனர்.
இந்நாட்டிலேயுள்ள இஸ்லாமியர்கள் சிறுபான்மையான மைனாரிட்டி சமூகமாக உள்ளவர்கள்; மற்றவர்கள் பெருவாரியான எண்ணிக்கையுள்ளவர்கள். இந்த இரு மார்க்கத்தாரிடையேயும் ஒற்றுமை நிலவ - அவர்களிடையே நல்ல தொடர்பும், சகோதரபாவமும் ஏற்பட இப்படிப்பட்ட திரு நாட்களை, பலரையும் அழைத்து நடத்துவது நல்லதாக அமையும்.
தென்னாட்டை பொறுத்த வரையில் இந்த ஒரு சமூகத்தாரிடையிலே என்றும் பகை ஏற்பட்டதில்லை. இரு சாராரிடையேயும் நல்ல தொடர்பு தலைமுறை தலைமுறையாக இருந்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் பார்த்தால் அங்குள்ள முஸ்லிம்களும் மற்ற சமூகத்தினரும் ஒருவருக்கொருவர் அண்ணன், தம்பி என்று முறை வைத்துப் பேசிக் கொள்வதைப் பார்க்கலாம்.
வடநாட்டிலே இந்து - முஸ்லிம் கலகம் கொலை வெறியாட்டம் நடந்த போது கூடத் தென்னாட்டில் நல்ல தோழமை நிலவியது. அப்படிப்பட்ட தோழமை உணர்ச்சியும் ஒற்றுமைப் பண்பாடும் வளரச் செய்வது தி.மு.கழகப்பணிகளில் ஒன்றாகும்.
நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை அவர் பிறந்த நாடு, அவர் காலத்திலிருந்த சூழ்நிலை, மத நம்பிக்கைகள், பிற்போக்கான சீர்கேடான நிலை, மூடநம்பிக்கைகள், பெண்களுக்கு இழைக்கப்பட்டு வந்த கொடுமைகள் ஆகியவற்றைப் பற்றிய துணுக்குகளை, நண்பர்கள் இங்கு உங்களிடையே விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.
முகம்மது நபி, ஒரு மார்க்கத்தை உண்டாக்கியது மட்டுமல்ல, தவறான குருட்டு நம்பிக்கையிலே சிக்கிக் கிடந்தவர்களை விடுவித்துக் காப்பாற்றி, நல்லதொரு சமுதாயத்தையும் உருவாக்கினார். அதற்கான ஒரு நல்ல அரசியலையும் ஏற்படுத்தினார். மிகுந்த நெருக்கடியான - ஆபத்தான காலத்திலேயே வெற்றிகரமாக தமது இலட்சியங்களை நிறைவேற்றிக் காட்டினார்.
அதே போல் தி.மு.கழகமும் மூன்று துறைகளில் பணியாற்றி வருகிறது; இதை நான் சொல்வதால் தி.மு.கழகத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றாக்கிக் காட்ட முயலுவதாகக் கருதவேண்டாம்! ஏனென்றால், தி.மு.கழகம் இக்கருத்துக்களை விஞ்ஞானமும் கல்வியறிவும் நன்கு பரவியுள்ள இக்காலத்தில் சொல்லி வருகிறது. இந்தக் காலத்தில் நல்ல கொள்கைகளை எடுத்துச் சொல்ல அதிகத் தைரியம் தேவையில்லை. நபிகள் நாயகம் அவர்களுடைய காலத்தில் சொல்ல வேண்டுமானால், நெஞ்சுரம் அதிகம் தேவையாக இருந்தது! "பூமி உருண்டையானது; சூரியனை பூமி சுற்றி வருகிறது" என்கின்ற உண்மைகளையெல்லாம் அறியாத - விஞ்ஞானத் தெளிவு இல்லாத காலம் அது! மக்கள் பய உணர்ச்சியும் காட்டுமிராண்டித்தனமும் கொண்டிருந்த காலம்!
இருட்டுக் காலத்தில் நல்ல ஒளியைத் தந்தார் முகம்மது நபி. அந்த ஒளியின் வெளிச்சத்தை எடுத்துக் காட்டிபவர்கள்தான் நாங்கள்.
சீர்திருத்தவாதிகள் செய்கின்ற காரியத்துக்கே இந்தக்காலத்தில் எத்தனையோ தொல்லைகள் ஏற்படும்போது, உலகத்தில் நபிகள் நாயகம் போன்றவர்கள் அந்தக் காலத்தில் எத்தனை இன்னல்களைத் தாங்க நேர்ந்திருக்கும்?
நம்மில் சிலர் நம் கொள்கைகளைப் பரப்ப அதைரியம் ஏற்படுகிற நேரத்தில் அவர்களுக்கு நபிகள் நாயகத்தினுடைய நினைவு வரவேண்டும்.
ஆரம்ப காலத்திலே முகம்மது நபியினுடைய கொள்கைகளை அங்குள்ள மக்கள் இலகுவிலே ஏற்றுக்கொண்டார்களா என்றால் இல்லை. அரேபிய பாலைவனத்திலே வசித்த மக்கள் 360 உருவங்களை ஆண்டவர்களாக வைத்து ஒரு நாளைக்கு ஒன்றாக வணங்கி வந்தனர் என்று சொல்லப்படுகிறது. அப்படிப்பட்ட மக்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் "360 உருவங்களும் ஆண்டவனல்ல" என்று எடுத்துச் சொல்ல எப்படிப்பட்ட ஆற்றல் படைத்தவராக இருந்திருக்க வேண்டும்; எப்படிப்பட்ட ஆபத்துக்களையெல்லாம் அவர் ஏற்றிருக்க வேண்டும் என்பதை எண்ணிப்பார்த்தால் நமக்கும் சீர்திருத்தக் கருத்துக்களை எடுத்துச் சொல்வதிலே ஏற்படக்கூடிய பயம் ஓரளவு நீங்கும்.
பொது வாழ்விலே உள்ள சந்தேகங்களையெல்லாம் நபிகளை நினைத்தால் பறக்கும். அவர் காலத்தில் ஏற்பட்ட ஆபத்துகளை நினைத்தால் இக்காலத்து ஆபத்துக்கள் வெறும் துரும்புக்குச் சமானம் ஆகும்.
நபிகள் நாயகம் அவர்களுடைய வரலாறு வீரத்துக்கு ஒரு ஊற்று!
சமுதாயத்துக்கு ஒரு நல்ல எடுத்துக் காட்டு!
-அறிஞர் அண்ணா-
நன்றி:
அண்ணல்நபி பற்றி அறிஞர் அண்ணா
வெளியீடு:
காஜியார் புக் டிப்போ
முஸ்லிம் தெரு, மானம்புச்சாவடி
தஞ்சாவூர்
Source : http://nihalvu.blogspot.in/2005/03/2.html
வார்த்தைகளால் வருணிக்க முடியாத வகையில் அழகிய பண்புகளையும், சிறந்த குணங்களையும் கொண்டவர்களாக நபி (ஸல்) திகழ்கிறார்கள்.
No comments:
Post a Comment