உலகமெல்லாம் ஓடிப் பறந்தாலும் நம் ஊரைப்போல் ஆகுமா என்பதோடு 'எங்கள் ஊர்' வந்தாலே மன நிறைவு வந்து விடும் ஏன்று சொல்பது நம் இயல்பு,அது உள்ளத்தில் மகிழ்வைத் தருகின்றது என்பது உள்ளத்திலிருந்து வரும் உண்மை வெளிச்சங்கள் . அமரிக்காவுக்கு போனால் இந்தியர் இருக்கும் இடம் தேடி பின்பு தமிழ்நாட்டுக்காரரை நாடி அதன்பின் தன் மாவட்டம் ,பின்பு வட்டம் கடைசியில் நம் ஊர் நண்பரைக் காண பேரின்பம் .இதற்குத்தான் மண் வாசனை நம்மோடு ஒட்டியுள்ளது போலும் . ஒவ்வொரு ஊரைப் பற்றி அந்த ஊர் நண்பர்கள் எழுதியுள்ளதனை தொடர்ந்து (பகுதியாக )அறிவோம்
1.எங்கள் ஊர்
எங்கள் ஊரில்குறைந்த பட்ச வசதிகளுக்கே
குறை!
ஆனாலும்
இயற்கை அன்னை
கொடுத்திருக்கிறாள்
அதிகபட்ச அங்கீகாரம்.
மத நல்லிணக்கத்தின்
இதமான காற்று
எங்கள் வீதிகள் தோறும்
வீசிக் கொண்டே இருக்கிறது
இன்றும்.
எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.
திரு சேவியர் ( கவிதையாக சில வரிகள் மட்டும் )
எங்கள் ஊர் « கவிதைச் சாலை
----------------------------------------2.எது என் ஊர்
கருவாய்ப் பிறப்பு தந்து
உருவாய் வளர்த்தெடுத்த
தாயின் கர்ப்பப்பையோ எனது ஊர்
பிறந்த பொழுது முதல் இறந்து புதைந்தும்கூட
மீண்டும் புக முடியா ஓர் ஊர்
எப்படி என் ஊராகும்
பிறந்ததும் விழுந்தேனே
பிரிதொரு வாசமுள்ள பெரும்பை
அதுவோ என் ஊர்
எனில்
அவ்வூரெனக்குச் சந்தோசச்
சங்கதியாகவல்லவா இருக்க வேண்டும்
காண்பதற்கே அழுதேனே
என்னிரு கண்ணிறுக்கிக் கதறி
எப்படி அது என் ஊராகும்
தாலாட்டிய மடி
பாலூட்டிய முலை
தவழ்ந்த தரை
சுற்றிய வெளி
பணிசெய்த இருக்கை
படுத்துறங்கிய மெத்தை
நட்பு நெஞ்சங்கள்
வெப்ப இதழ்கள்
பரிதவித்த பருவம்
பண்படுத்திய பெண்மை
விழிதட்டும் கனவு
உயிர்நிறைக்கும் நினைவு
எது
எது
எது என் ஊர்?
திட்டுத் திட்டாய் அங்கெங்கும்
துளித் துளியாய் இங்கெங்கும்
பரவிக் கிடந்திருக்கிறேன்
உருண்டு புரண்டு நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்
ஒவ்வோர் துகளையும்
என் சொந்தமென்றே கொண்ட
இவை யாவும்தான் என் ஊரெனில்
என் ஊரென்று தனியே ஏதுமில்லை
என்பதல்லவா நிஜம்
என் ஊரை என்னைத் தவிர வேறு
யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
அந்த என் ஊர் எது
நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது
எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
அந்த ஊர்தான் எது
எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!
3. ஒரத்தநாடு - நான் பிறந்த ஊரு
தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசனிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும்.
தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்கு ஓர் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும்.
வானூறி மழை பொழியும்
.....வயலூறி கதிர் வளையும்
தேனூறி பூவசையும்
.....தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
.....கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலங்கூட
.....பசியாறும் உரந்தையில்
நான் பிறந்தேன்.
நெஞ்சிலும் தோளிலும் உரம் மிகுந்தவர்களின் நாடு உரத்தநாடு என்று சொல்வார்கள்
சரபோஜி மகாராஜாதான் ஒரத்தநாட்டை ஆண்ட மன்னர்.
ஒரத்தநாட்டின் ராணி முத்தம்பாள் தன் உயிரைத் தந்து ஒரு புதையல் எடுத்ததாகவும், அதைக்கொண்டு 40 அன்னசந்திரங்களை மன்னர் நிறுவியதாகவும் சொல்வார்கள்.
அதனால் ஒரத்தநாட்டிற்கு முத்தம்பாள் சத்திரம் என்றும் பெயருண்டு. அந்தக் காலத்தில் ஒரத்தநாட்டுச் சத்திரத்தில் வந்தோருக்கெல்லாம் இலவச உணவு உண்டு.
தற்போது அது ஏழை மாணவர்கள் படிப்பதற்கென்று மாற்றப்பட்டுவிட்டது. அதாவது எந்த செலவுமே இல்லாமல் பள்ளிப்படிப்பை ஏழை மாணவர்கள் இங்கே முடிக்கலாம்
சரபோஜி மகாராஜாவின் அரண்மனையில்தான் நான் என் பள்ளிப்படைப்பை முடித்தேன். அரண்மனையின் சுவர் முழுவதும் நிறைத்த மகாராஜாவின் படம் இப்போதும் கம்பீரமாக அங்கே இருக்கிறது. அது பதினோராம் வகுப்புக்கான வகுப்பறையும்கூட
போர்வீரர்கள் பயிற்சிபெற்ற இடம்தான் எங்களுக்கு விளையாட்டு மைதானம்.
அரணமனைக்கு அருகே தெப்பக்குளம் இருக்கும். மகாராணி நீராடிய இடம்.
ஊரின் இருபக்கமும் இரண்டு பெரும் அரசுத் தோட்டங்கள். கீழத்தோட்டம் மேலத்தோட்டம் என்பார்கள்.
கீழத்தோட்டத்தில் மாட்டுப்பண்ணை கோழிப்பண்ணை என்று சில பண்ணைகள் உண்டு. எனவே விலங்கினங்களுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களின் மூன்றாம் ஆண்டு முழுவதும் எங்கள் ஊரில்தான்.
பல ஊர்களிலிருந்தும் பாலும் முட்டையும் கோழியும் வாங்க ஒரத்தநாடு வருவோர் பலருண்டு.
மேலத்தோட்டம் என்பது அருமையான இடம். உயரமாக புற்கள் முதல் பெரும் மரங்கள்வரை வளர்க்கப்படும்.
ஊருக்குச் சற்று வெளியே ஓடுவது கல்யாண ஓடை காவிரியிலிருந்து பிரிந்து பிரிந்து வந்து ஓடும் சிற்றாறு
ஒரத்தநாட்டைச்சுற்றி ஏகப்பட்ட கிராமங்கள் உள்ளன.
ஒரத்நாடு தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர்கள்தான்.
எனவே என் ஊர் என்று தஞ்சையை அழைத்து என் நான்காம் தொகுப்பில் நான் எழுதிய கவிதை இது:
என் மண்ணில் விழுந்ததும் நான் அழுதேன் அழுதேன். ஏன் அழுதேன்? என் ஊரில் என்னை இறக்கிவிடாமல் இதுவரை ஏனம்மா உன் வயிற்றிலேயே பூட்டிவைத்திருந்தாய் என்ற கோபத்தில் இருக்கலாம். அப்படி என்னதான் இருக்கிறது என் ஊரில்?
வானூறி மழைபொழியும்
.......வயலூறிக் கதிர்வளையும்
தேனூறிப் பூவசையும்
.......தினம்பாடி வண்டாடும்
காலூறி அழகுநதி
.......கவிபாடிக் கரையேறும்
பாலூறி நிலம்கூட
.......பசியாறும் தஞ்சாவூர்
தேரோடித் தெருமிளிரும்
.......திருவோடி ஊரொளிரும்
மாரோடி உயர்பக்தி
.......மதமோடி உறவாடும்
வேரோடிக் கலைவளரும்
.......விரலோடித் தாளமிடும்
பாரோடிப் பொருள்வெல்லும்
.......பொன்னோடும் தஞ்சாவூர்
சேறோடி நெல்விளைத்து
.......ஊரோடி உணவளித்து
யாரோடி வந்தாலும்
.......கண்ணோடிக் கறிசமைத்து
நீரோடி வளர்வாழை
.......நிலமோடி இலைவிரிக்க
ஓடோடி விருந்தோம்பி
.......விண்ணோடும் தஞ்சாவூர்
வாய்மணக்கும் வெத்திலைக்கும்
.......வயல்மணக்கும் காவிரிக்கும்
காய்மணக்கும் தென்னைக்கும்
.......கைமணக்கும் பட்டுக்கும்
சேய்மணக்கும் சேலைக்கும்
.......சிகைமணக்கும் பெண்ணுக்கும்
தாய்மணக்கும் பண்புக்கும்
.......தரம்மணக்கும் தஞ்சாவூர்
தலையாட்டும் பொம்மைக்கும்
.......அலைகூட்டும் பாட்டுக்கும்
கலையூட்டும் கோவிலுக்கும்
.......சிலைகாட்டும் சோழனுக்கும்
மழைகூட்டும் மண்ணுக்கும்
.......பிழையோட்டும் தமிழுக்கும்
நிலைநாட்டும் புகழோடு
.......எழில்காட்டும் தஞ்சாவூர்
-----------------------------------------------------
நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal
நீடூர் - நெய்வாசல்
முகவரி: நீடூர் அஞ்சல்மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203
எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.
இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.
தயவு செய்து இங்கு கிளிக் செய்து படியுங்கள் http://nidurseasons.blogspot.in
No comments:
Post a Comment