Sunday, April 15, 2012

பள்ளிவாசளில் மார்க்க சொற்பொழிவு செய்வோர் கவனத்திற்கு!

பள்ளிவாசளில் மார்க்க  சொற்பொழிவு செய்வோர் கவனத்திற்கு!
பொதுவாக மார்க்க சொற்பொழிவு செய்வோர் நல்ல மார்க்க அறிவு பெற்றவராகவே மற்றும் இறைபக்தியுடையவராக  இருப்பார்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. நான் கேட்டதும் அதனால் பெற்ற ஞானமும் அவர்கள் ஆற்றிய  சொற்பொழிவினால் கிடைத்த பெரும் பயன்தான். சம்சுல்ஹுதா ஹழ்ரத்  அவர்கள்  நீடுர் -நெய்வாசல்  பெரிய பள்ளிவாசல்  இமாமாக இருந்து சிறந்த சேவைகள் செய்தார்கள். அவர்கள் ஆற்றிய சொற்பொழிவுகள் அனைத்தும் மறக்க முடியாதாவைகளாக எக்காலத்திலும்  மனதில் நிலைத்து நிற்கக் கூடியதாக  இருப்பதனை அனைவரும் அறிவார்கள். அவர்கள்போல் இன்னும் பல மார்க்க அறிர்களும் இருக்கின்றனர்.
      சம்சுல்ஹுதா ஹழ்ரத் அவர்களின் சொற்பொழிவு யார் மனதையும் புண்படுதுவதில்லை. குறித்த நேரத்தில் தனது உரையை முடித்துக் கொள்வதில் மிகவும் கவனம் செலுத்துவார்கள். அவர்கள் தலைப்புக்கு தகுந்ததுபோல் பேசுவது அவர்களது இயல்பு . முன்னுரை ,தெளிவுரை , கருத்துரை ,எப்படி இருக்க வேண்டும் என்பதில்   முக்கியம் கொடுத்து பேசுவதற்கு தன்னை தயார் செய்துக் கொள்ள அதிகமாகவே படிப்பார்கள். அவர்களது ஜும்மா பிரசங்கத்தில் குரான் வசனங்களும் அதன் விளக்கங்களும் அதற்கு தகுந்ததுபோல்  ஹதீஸ்களும் ( நபிமொழியும்) நிறைந்து நிற்கும்.முடிவுரையில் தனது கருத்தினை அதற்கு ஏற்றதுபோல் இஸ்லாமிய நெறியோடு ஒரு விளக்கத்தினை தந்து முடிப்பார்கள். அவர்களது  சொற்பொழிவினை கேட்ட பின்பு இறைபக்தி நம் மனதில் வந்து ஒட்டிக்கொள்ள அந்த இறைவனது அருள்நாடி அவனை தொழ ஆரம்பிப்போம்.அந்த தொழுகையில் மனமொன்றி தொழுது நிற்போம். மன அமைதி கிடைக்க உள்ளம் உவகையடைய  அதனால் ஆத்ம திருப்தி ஏற்படும்.

     காலம் மாறிவிட்டாலும் அந்த உயர்ந்த செயல்பாட்டு முறையே சிறந்தது. அரசியல் பேசுவதும் , அறிவுரைகள் சொல்லும் எண்ணத்தோடு ஒரு சாராருக்காக பேச முனைந்து  அடுத்தவர்கள் மனதை புண்பட வைப்பதும் ஒரு காலமும் சிறப்பான சொற்பொழிவாக  இருக்க முடியாது. ஜும்மா மேடை அரசியல் மேடையாக மாறிவிடக் கூடாது  அது குழப்பதிற்குத்தான் வழி வகுக்கும். மனதைத் தொடக்கூ டியதாக,உள்ளத்தை வருடிவிடக்கூடியதாக மார்க்கதின்மீது பற்று வரும்படியதாக பேசுவது சாலச் சிறந்தது. குறையை காணாமல் நிறையைக் காண முயற்சித்து மக்களை உயர்த்த வழிக்கு திருப்ப அன்பான வார்த்தைகளோடு,சிறந்த மார்க்க விளக்கங்களோடு சிறந்த சொற்களைப் பயன்படுத்தி மக்கள் மனதில் ஆழமாக பதியும் படி மார்க்க விளக்கங்கள்  அடங்கிய பிரசங்கங்கள் அமைய வேண்டும. அதற்கு பேசும் மொழி வல்லமை மற்றும் சிறந்த உலக அறிவும் இன்றியமைதாக தேவைப் படுகின்றது. உங்கள் கடமையினை  முறையாக செய்து விடுங்கள்.மற்றதனை இறைவனிடம் விட்டு விடுங்கள்  ஒரு தலைப்பு வைத்து பேசுங்கள். தொடர்ந்த சேவை இன்ஷா அல்லாஹ் நல்ல பயனைத் தரும். தேவையில்லாமல் 'மற்றவர்கள் பேசுவது  தவறானது மார்கத்திற்கு புறம்பானது' என்ற வாதத்திற்கு வழி வகுத்து 'அவர் என்ன சொன்னார்?' அவர் சொன்னதில் தவறு உள்ளதா! அல்லது அதில் ஒன்றும் தவறில்லையே!  என்பது போன்ற சிந்தனைக்கு இடமளிக்க  நீங்களே முக்கியம் கொடுத்து விடுகின்றீர்கள். நீங்கள் சொல்வது உயர்வாக உண்மையாக இருந்து அது மக்களை இறை நாட்டத்தில் ஈடுபட வைத்தால் அதுவே சிறப்பானது .
 ----------------------------------------------------------------------       

No comments: