Monday, April 16, 2012

மனைவியின் அருமை அறிய முதுமை தேவை,


முதுமையின்   காரணமாக    உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய   சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள் ,கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ ,முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே …இப்படி பல எண்ணங்கள்   எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே  இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள்  லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .
எனது குளிர்ந்த கை  மீது மற்றவரின் உள்ளங்கை  வைக்கப்படுவதனை உணர்கின்றேன் அது என் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு .
அந்த நிலை நீடிக்க விரும்பினேன் , என் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது ,எனது கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை எனது கன்னம்வழி வளர்ந்த கண்ணீரை துடைத்து விட்டது.
(ஒரு சொட்டு கண்ணீர் ஒரு கேலன் நீரில் ஊட்றினால்  அதன் கிருமிகளை அழித்துவிடும் உயர்ந்த தன்மை கொண்டது .கண்ணீர் நம் கண்களை பாதுகாக்கின்றது .)
காலமெல்லாம்  உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது   அதிகமாகவே   உணர்கின்றேன்.
“நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைக்க விரும்புகின்றேன்” என வாய் புலம்ப அந்த மூதாட்டி எனது வாயினை பொத்தி எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது என்று என்னை அமைதி படுத்துகிறாள் .
காலமெல்லாம் நான்  அவளுக்கு கொடுத்த ஆறுதல் ….!
அவளின் தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி எனக்கு தந்த ஆறுதல் வார்த்தை… மிக்க சக்தி வாய்ந்ததாக இருந்து  என் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது .

எங்கள் இறைவனே! எங்கள் மனைவியரிடமும், எங்கள் சந்ததியரிடமும் இருந்து எங்களுக்கு கண்களின் குளிர்ச்சியைத் தருவாயாக! இன்னும் இறையுணர்வுடையோர்க்கு எங்களை இமாமாக (வழிகாட்டியாக) ஆக்கி அருள்வாயாக. (அல்குர்ஆன் 25:74)

நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)

 நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: அல்லாஹ்வின் திருப்தியை நாடி நீ (உன் மனைவிக்கு) செலவு செய்த எந்த செலவுக்கும், ஏன்? உன் மனைவிக்கு அன்புடன் நீர் ஊட்டிவிட்ட உணவுக்கும் அல்லாஹ் கூலி கொடுக்காமல் இருப்பதில்லை. அறிவிப்பு: ஸஃது இப்னு அபிவக்காஸ் (ரலி) ஆதாரங்கள்: புகாரி, முஸ்லிம், முஸ்னத் அஹ்மத்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.--திருக்குறள்

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.--திருக்குறள்

1 comment:

sharmila hamid said...

///ஒரு சொட்டு கண்ணீர் ஒரு கேலன் நீரில் ஊட்றினால் அதன் கிருமிகளை அழித்துவிடும் உயர்ந்த தன்மை கொண்டது .கண்ணீர் நம் கண்களை பாதுகாக்கின்றது///
இது வரை எனக்கு தெரியாத தகவல்.... நன்றி சகோ.... :)
அருமையான பதிவு....

LinkWithin

Related Posts with Thumbnails