Friday, April 20, 2012

மூன்று விதமான மனிதர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும்!


 நாம் மனதில் உள்ளதனை மற்றவர்களிடம் சொல்லி மன ஆறுதல் பெற முனைவதுண்டு. அதற்கு நாம் தேர்ந்தேடுப்பவர்கள் மீது கவனம் வேண்டும். 
 பேசுவதை கேட்பவர்கள் பலவிதம். 

அதில் மூன்று  விதமான மனிதர்களைப் பற்றி நாம் அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டும்.
1- இவரிடம் யார் கேட்டது நம்மிடம் ஏன் இதனைச் சொல்கின்றார் என்பவர்.
2 - நல்ல செய்தி கிடைத்து விட்டது மற்றவர்களிடம் பரப்ப  என நினைப்பவர்.
3- இவருக்கு இந்த சிரமமும் வேண்டும் இதைவிட அதிகமாகவும் வேண்டும்  என்று விரும்புவர்.


'மனம் திறந்து பேசுங்கள் - ஆனால் மனதில் பட்டதெல்லாம் பேசாதீர்கள் ... சிலர் புரிந்து கொள்வார்கள், சிலர் பிரிந்து செல்வார்கள்' 



உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்!
 

"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள். உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்."
-திருக்குர்ஆன் 2:42


 

புறம் பேசாதீர்கள்
 

"புறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா?" என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, "அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர்" என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’" என்றார்கள். "நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா?" என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம்
 

மிகப்பெரும் பாவங்கள்
 

"(ஒருமுறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?’ என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்) என்று கூறினோம். நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்’ என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)’ என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?’ என்றேன்.

அறிவிப்பவர் : அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம் : புகாரி
 

நாவைப் பேணுதல்
 

"முஸ்லிம்களில் எவர் சிறந்தவர்" என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, "எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி)
ஆதாரம் : புகாரி

துருவி துருவி ஆராயாதீர்கள்

"முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)

பெண்கள் மீது அவதூறு

"எவர்கள் முஃமினான ஒழுக்கமுள்ள, பேதை பெண்கள் மீது அவதூறு செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள்; இன்னும் அவர்களுக்குக் கடுமையான வேதனையுமுண்டு".

-திருக்குர்ஆன் 24:23

"எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி (அதை நிரூபிக்க) நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையோ, அவர்களை நீங்கள் எண்பது கசையடி அடியுங்கள்; பின்னர் அவர்களது சாட்சியத்தை எக்காலத்திலும் ஏற்றுக் கொள்ளாதீர்கள் – நிச்சயமாக அவர்கள்தான் தீயவர்கள்."

-திருக்குர்ஆன் 24:4

2 comments:

HOTLINKSIN.COM said...

நீங்கள் சொல்லும் அந்த 3விதமான மனிதர்களுமே ரொம்ப அபாயகரமானவர்கள்தான்...

mohamedali jinnah said...

தங்கள் வருகைக்கு நன்றி