Wednesday, October 27, 2021

குறுங்கதைகள்-கானல் / Mubeen Sadhika

 

குறுங்கதைகள்-கானல்

அவன் வீட்டின் ஜன்னலிலிருந்து பார்த்தால் சற்று தொலைவில் இருக்கும் வீட்டின் ஜன்னலும் அந்த வீட்டில் நடப்பதும் தெரியும். அது இருக்கும் தொலைவை விட அருகில் இருப்பது போல் தெரியும். அது கானல் நீர் போன்ற காட்சி என பிறகு புரிந்துகொண்டான். எப்போதும் அந்த வீட்டில் நடப்பதை இவன் உன்னிப்பாகக் கவனிப்பதில்லை. அன்றிரவு அந்த வீட்டில் ஏதோ வித்தியாசமான ஒலி வந்ததால் அந்த ஜன்னலில் பார்த்தான். ஒருவன் ஒரு பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொண்டிருந்தான். இவனுக்குப் பெரும் அதிர்ச்சியாகிவிட்டது. அந்த வீட்டுக்குச் சென்று என்ன நடந்தது என்று பார்க்கலாம் எனக் கிளம்பினான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். கழுத்தை நெறித்தவன் வந்து கதவைத் திறந்தான். அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை. வீட்டில் ஏதாவது சண்டையா என இவன் கேட்டான். அப்படி எதுவுமில்லையே என்றான் அவன். தன் வீட்டு ஜன்னலிலிருந்து பார்த்த காட்சியை அவனிடம் சொன்னான் இவன். அவன் சிரித்துக் கொண்டு இவனை வீட்டுக்குள் அழைத்து அவன் ஜன்னலில் தெரிந்தது தன் வீட்டுத் தொலைக்காட்சி எனவும் அதில் அப்போது தான் நடிக்கும் ஒரு குறும்படக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்ததாகவும் சொன்னான். உண்மையில் அங்கு ஒரு பெரிய தொலைக்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இவனும் தொல்லைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு வந்துவிட்டான். இருந்தாலும் இவனுக்குச் சந்தேகம் தீரவில்லை. அவன் பொய் சொல்வதாகக் கருதினான். இதை எப்படிக் கண்டுபிடிப்பது என யோசித்தான். மீண்டும் தன் வீட்டுக்குச் சென்று அந்த வீட்டின் ஜன்னலைக் கவனித்தான். எதுவும் சலனம் இல்லாமல் இருந்தது. அவனுக்கு அந்த வீட்டில் கொலை நடந்திருப்பதாகவே பட்டது. மீண்டும் அந்த வீட்டுக்குப் போனான். கதவைத் தட்டாமல் ஒரு முறை வீட்டைச் சுற்றி வந்தான். அந்த வீட்டின் அருகில் ஒரு மரம் இருந்தது. அதில் ஏறிப் பார்த்தான். கட்டிலில் அந்தப் பெண் தாறுமாறாகக் கிடந்தாள். பக்கத்தில் தன்னுடன் பேசியவன் கத்தியால் குத்தப்பட்டுக் கிடந்தான். தன்னுடன் பேசியது யாராக இருக்கும் என நினைத்த அவனுக்கு அச்சத்தில் வியர்வை ஊற்றியது. மரத்திலிருந்து குதித்து தலைதெறிக்க வீடு வந்து சேர்ந்தான்.

(நான் எடுத்த புகைப்படத்தை ஓவியமாக மாற்றியிருக்கிறேன்)



#எனதுஓவியம்



Mubeen Sadhika

No comments: