Sunday, October 10, 2021

Abu Haashima #முஹம்மத் #புகழப்பட்டவர்

 


Abu Haashima

#முஹம்மத்

#புகழப்பட்டவர்

அரபகக் கவிஞர்கள் முதல்

தமிழகக் கவிஞர்கள் வரை

அகிலம் முழுக்க

அமுதக் கவிகளால்

அலங்காரம் செய்தது

உங்களைத்தானே

யா ரஸூலல்லாஹ் ... !

நூருல்லாஹ்வும் தாங்கள்

நூரே முஹம்மதும் தாங்கள்

ஹிரா மலைக் கல்லுக்கும்

இக்ரஹ் எனும்

இறைமறைச் சொல்லுக்கும்

ஒளியும் தாங்கள்

தங்கள் மீது

கல்லும் சொல்லும் எறிந்த

அபுஜஹலும்

புகழப்பட்டவரே என்ற

உங்கள் புகழ் பெயரால்தானே

உங்களை அழைத்தான்

கஃபாவின் சுவரில்

ஹஜ்ருல் அஸ்வது கல்லை

வைக்கும் போதும்

" புகழப்பட்டவரே ...

உங்கள் திருக்கரங்களால்

இதனை பொருத்துங்கள் ..."

என்றுதானே

மக்கத்து மக்களெல்லாம்

சொன்னார்கள்

இறைவனும்

தன் திரு மறையில்

#முஹம்மது_ரஸூலுல்லாஹ்

( இறைவனின் தூதர் புகழப்பட்டவர் )

என்றுதானே குறிப்பிடுகிறான்

முஹம்மதைப் புகழக் கூடாது

என்று இன்றைக்கும்

 புலம்புபவர்கள்

" புகழுக்குரியவரை

புகழக் கூடாது " என்று

உங்களைப் புகழ்ந்து கொண்டே

புலம்புவதுதான் வேடிக்கை

முஹம்மதின் பொருளே

புகழப்பட்டவர் என்பதுதான்

என்பதை

அவர்கள் அறியாமல் போனது

அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்து

அறியாமை !

அறிந்தவர்களும்

அறியாதவர்களும்

அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரஸூலல்லாஹ் என்று

உங்கள் பெயரைச் சொல்லாமல்

நிலத்தில் விழுவதுமில்லை

இறைவனைத் தொழுவதுமில்லை

அல்லாஹ்வே உங்களைப் புகழ்கிறான்

அவனே உங்கள் புகழை நிலைபெறவும்  செய்வான் !

ஸல்லல்லாஹூ அலா முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி ஸல்லம்

" காடுதோறும் கனகப் பெரும்பயிர்

வீடுதோறும் விருந்தும் வதுவையும்

நாடுதோறும் நபிசல வாத்திசை

கோடுதோறும் குயிலினம் கூவுமே ... "

#மிஃராசு_மாலையில்

#ஆலிப்புலவரப்பா

No comments: