Friday, October 1, 2021

ஏன் மறந்தாய் யூசுஃபை

 நிஷாமன்சூர்

ஏன் மறந்தாய் யூசுஃபை

எனதன்புச் சகோதரனே ?

நெருக்கடியில் உடனிருந்து

நம்பிக்கையளித்த நண்பரை

சிறைச்சாலையின் நிராதரவில்

ஆதுரமாய் மிளிர்ந்த தோழரை

கனவுகளுக்கு விளக்கமளித்து

காரிருள் போக்கிய பேரழகரை

அரசவையின் அதிகாரத்தைச்

சுவைத்திருந்த காலங்களில்

ஏன் மறந்தாய்

எனதன்புச் சகோதரனே ?

கிணற்றுக்குள் முழு

நிலவாய் ஒளிர்ந்தவர்

சிறைச்சாலையை

அருந்தவசாலையாக்கியவர்

ஞாபகப் பதிவுகளிலிருந்து

அகன்றது ஏனோ ?

அடுத்த உதவி தேவைப்பட்ட போதுதானே

உனது நினைவுப் பதியன்கள்

அவர் மீது சாய்ந்தன

எதையும் நினைவூட்டிக்

குற்றம் சாட்டும்

இயல்பினர் இல்லை யூசுஃப்

அடுத்த கோரிக்கையையும்

அதுபோலவே எதிர்கொண்டார்

யூசுஃபின் நிழல்

என் மீது படிந்ததுபோல

எவரெவர் மீது படிந்துள்ளதோ

நானறியேன்

இந்த சகோதரனின் குணமோ

உலகெலாம் ஊன்றிப்

பரந்து நிறைந்துள்ளது

ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல்

ஹஸ்புனல்லாஹு நிஃமல் வகீல்



என் ரட்சகனே

எனக்குப் போதுமானவன்

எனினும் இதயம்

எப்போதாவது கேட்காமலில்லை

ஏன் மறந்தாய் யூசுஃபை

எனதன்புச் சகோதரனே ?



#நிஷாமன்சூர்

No comments: