புரிந்து
கொள்ள மாட்டார்களா…..
‘என் வீட்டுல நான் என்ன
சொன்னாலும் புரிஞ்சுப்பாங்க’ என்கிற சூழல் இருந்தாலே
பெரும்பாலான தவறுகள் குறைந்து விடும்.
அதேபோல் என் வீட்டில் எனக்குப்
புரிய வைப்பார்கள் என்று இருந்தாலும் எந்த
விஷயமும் அங்கு தவறாக போவதற்கு
வாய்ப்பு இருக்காது. பெரும்பாலும் யாரும் பிறரோடு சண்டை
போட வேண்டும் என்றோ பிறருக்குத் தீங்கு
செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டோ
எதையும் செய்வதில்லை. எடுக்கப்படும் முடிவுகளும் பேச்சுக்களும் செயல்களும் சில சமயங்களில் அவ்வாறு
தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன. பிறருடைய கோணத்திலிருந்து பார்க்காமல் தன்னுடைய கோணத்திலிருந்து மட்டுமே பார்ப்பதால்தான் பல
பிரச்சினைகள் கிளை விடுகின்றன.
ஒரு சிறுமி தன் அம்மாவிடம்
பள்ளிக்கு கிளம்பும் நேரம், தன் ஹோம்
வொர்க்கை அவசர அவசரமாக செய்து கொண்டே, பென்ஸில்
எங்கே, நோட்புக்
எங்கே என்று ஒவ்வொன்றுக்கும் அம்மாவையே
கேட்கிறாள். உன்னுடைய பொருள்களை நீயே எடுத்து வைத்துக்
கொள்ளக் கூடாதா, எல்லாவற்றுக்கும் என்னையே
கேட்கிறாயே, ஹோம் வொர்க்கை நேற்றே
செய்து இருக்கக் கூடாதா என்று அம்மா
கேட்க பதிலுக்கு அவள் ஏதோ சொல்ல
அந்த சின்ன விவாதம் பதிலுக்கு
பதில் என்று இருவரும் பேசப்
பேச பெரும் பிரச்சனையாக மாறுகிறது.
உடனே சாப்பிடாமலும் மதிய சாப்பாட்டை எடுத்துக்
கொள்ளாமலும் கோபத்துடன் பள்ளிக்குச் சென்று விடுகிறாள் மகள்.
அம்மாவும் எதுவும் சாப்பிட மனசில்லாமல்
ஒரு இயலாமையோடு அலுவலகத்திற்கு செல்கிறார்.
செல்லும்
வழியெல்லாம அவருக்கு தன் மகளுடன் காலையில்
நடந்த விவாதமும், மகள் சாப்பிடாமல் கோபமாக
சென்றதுமே மனதில் மீண்டும் மீண்டும்
அலை மோதுகிறது, “ஏன் இந்த பொண்ணுக்கு
என்னோட அன்பு புரிஞ்சுக்க மாட்டேங்குது.
இவளுக்காகத்தானே இத்தனை கஷ்டப்படுறேன். எதற்கெடுத்தாலும்
கோபப்பட்டால் எப்படி பெரியவளான பிறகு
மற்றவர்களுடன் இணைந்து வேலை செய்வாள்?
குடும்பத்தை நடத்துவதற்கான பொறுமை இவளுக்கு எப்படி
வரும்? நான் ஒழுங்கா வளர்க்கலையா?
என்று அலுவலகம் செல்லும் வழியெல்லாம் பலவாறு தன் மனதுக்குள்
நினைத்துக் கொண்டே போகிறார்.
அதே நேரம், “அம்மா என்னை
புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறாங்களே. இவங்க என் அம்மா
தானே. என்னுடைய வயதைக் கடந்து வந்தவர்கள்தானே?
எனக்காக இதைக்கூட செய்ய மாட்டார்களா? எதற்கெடுத்தாலும்
சத்தம் போடறாங்களே என்னுடைய படிப்பு அதுக்கான சுமை
இதைக் கூட புரிஞ்சுக்கலையே.. இவங்களே
புரிஞ்சுக்கலைனா வேற யார் என்னை
புரிஞ்சுப்பாங்க? என்று பள்ளிக்குச் செல்லும்
வழியெல்லாம் மகளும் நினைத்துக் கொண்டு
போகிறாள்.
அந்த சிறுமிக்கு பள்ளி முடிந்து திரும்பும்
போது பசி வயிற்றைக் கிள்ளுகிறது.
பணம் எடுத்து வரவில்லை. வீட்டுக்கு
செல்லவும் மனம் இல்லை. களைப்புடன்
ஒரு பூங்காவில் அமர்ந்து இருப்பவளுக்கு அடுத்து என்ன செய்வது
என்று புலப்படவில்லை. சற்று நேரம் அமைதியாக
அமர்ந்து இருந்தவள் இருட்டத் தொடங்கியதும் பூங்காவை விட்டு வெளியில் வருகிறாள்.
இதற்கு மேல் இங்கு இருக்க
முடியாது ஆனால் எங்கு செல்வது
என்று குழப்பம். வீட்டுக்குச் செல்லவும் ஈகோ தடுக்கிறது. சாலையில்
இறங்கி நடந்து செல்கிறாள். இலக்கில்லாமல்
நடந்து செல்பவளின் கண்ணில் சாலையோரம் இருக்கும்
ஒரு பேக்கரி படுகிறது. அதில்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் கேக்குகள் அவள் பசியை மேலும்
தூண்டிவிட அவள் அதையே பார்த்தவாறு
கடைக்கு முன் அப்படியே நிற்கிறாள்.
அப்போது
பேக்கரியில் இருக்கும் மேனேஜர் அந்த பெண்ணைப்
பார்க்கிறார். அவள் முகத்தில் தெரியும்
சோர்வு அவளது பசியை பறைசாற்றுகிறது.
பள்ளிச் சீருடையில் இந்த நேரத்தில் ஒரு
சிறுமி பசியுடன் இலக்கின்றி நிற்பது இந்த வயதில்
ஏற்படும் கோபத்தின் நிகழ்வுகளில் ஒன்று என்பதை அனுபவம்
அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தது. உடனே
வெளியே வந்து அந்த சிறுமியை
உள்ளே அழைத்துச் சென்று கேக்குகளை சாப்பிட
தருகிறார். அந்தப் பெண்ணை கனிவோடு
பார்க்கிறார். இது அந்த பெண்ணுக்கு
அழுகையை ஏற்படுத்துகிறது. ஏன் அழுகிறாய் என்று
கேட்டதும் நீங்கள் யார் என்று
எனக்கு தெரியாது. ஆனால் நீங்கள் எவ்வளவு
கருணையோடு நடந்து கொள்கிறீர்கள். என்னை
பெற்று வளர்த்த என் அம்மாவேகூட
என்னிடம் இந்த மாதிரி கனிவாக
நடந்து கொள்ளவில்லை. இன்று நான் சாப்பிட்டேனா
இல்லையா என்றுகூட கண்டு கொள்ளவில்லை. கோபப்பட்டு
திட்டி அனுப்பி விட்டார் என்கிறாள்.
உடனே அந்த பேக்கரி மேனேஜர்
நான் ஒரே ஒரு நாள்
சாப்பாடு தந்து கனிவோடு பார்த்தது
உனக்கு என் மீது இவ்வளவு
மதிப்பையும் மரியாதையும் தந்திருக்கிறதே. இத்தனை நாள் பசி
என்றால் என்ன என்றுகூட தெரியாத
அளவுக்கு உன்னை யார் கவனித்துக்
கொண்டார்கள்? என அதே கனிவான
தொனியில் கேட்கிறார்.
உன் தேவை என்னவென்று நீயே
அறியாத அளவுக்கு உன்னை கவனித்துக் கொண்டது
உன் அம்மாதானே… ஆனால் ஒரு நாள்
சண்டை என்றதும் எல்லாவற்றையும் மறந்து விட்டு அவர்கள்
அன்பை தூக்கி எறிந்து விடுவது
சரியா? ஒரே ஒரு நாள்
யாரோ ஒருவர் உதவி செய்ததும்
அவர் மீது அன்பும் மரியாதையும்
பெருகும் அதே நேரம் தொடர்ந்து
நமக்கு இதைச் செய்யும் உறவுகள்
மீது மதிப்பும் மரியாதையும் கூட வேண்டும் என்பதுதானே
சரியாக இருக்கும் என்றும் கேட்கிறார்.
அவருடைய
அந்த பேச்சும் அதை அவர் கனிவாக
சொன்ன விதமும் அவர் கேட்ட
கேள்வியில் இருந்த உண்மையும் அந்த
சிறுமிக்கு விழிப்புணர்ச்சி தர, உண்மைதான் யாரோ
ஒருவர் உதவும் போதுதான் என்னுடைய
அம்மாவின் அருமை எனக்குத் தெரிய
வருகிறது என்று அவருக்கு நன்றி
கூறியவாறு தன் அம்மாவிடம் மானசீகமாக
மன்னிப்பு கேட்டவளாக தன் வீடு நோக்கி
விரைகிறாள்.
பொதுவாக,
எவ்வளவு இனிமையான உறவுகளும், ஒரு சின்ன பிரச்சினையில்
தாங்கள் சந்தோஷமாக இருந்த நிகழ்வுகள், விட்டுக்
கொடுத்த தருணங்கள், பகிர்ந்த ப்ரியங்கள் அத்தனையையும் மறந்து விட்டு ஒரே
நாளில் தலைகீழாக மாறிவிடுகிறது. உண்மையில் நாம் எந்த உறவின்
மீது கூடுதலாக அன்பு வைத்திருக்கிறோமோ அந்த
உறவின் மீதுதான் கோபம் சண்டை வெறுப்பு
அத்தனையும் உடனடியாக வரும்.
பெரும்பாலும்
கணவன் மீது அதீத காதலும்,
அன்பும் மரியாதையும் வைத்திருக்கிற உரிமையில்தான் ஒரு மனைவி அதிகமாக
சண்டை போடுவார். ஏன் இவ்வளவு லேட்டா
வீட்டுக்கு வர்றாரு. என்கூட ஏன் அதிகமா
பேசுவதில்லை என்று கேட்டு உடன்
இருக்கும் கொஞ்ச நேரத்திலும் இனிமையாக
இருப்பதை விட்டு சண்டைக்கு வந்து
நிற்பார். அதேபோல்தான் கணவனும்.
பொதுவாக,
நாம் எதிர்பார்க்கிற மாதிரி உறவோ நட்போ
நடந்து கொள்ளாமல் போனால் உடனே சோர்ந்து
போய் விடுகிறோம். நான் என்ன செய்தாலும்
சொன்னாலும் இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான்
என்ன செய்வது என்று எனக்கும்
தெரியவில்லை என பலரும் நொந்து
கொள்கிறார்கள். இந்த குற்றச்சாட்டை யார்
மீது வைக்கிறார்களோ அவர்களிடம் போய் கேட்டால் இதே
விஷயத்தை அப்படியே இவர்கள் எங்களை புரிந்து
கொள்ளவில்லை என்று திருப்பிச் சொல்வார்கள்.
அதனால் ஒருவர் சொல்லும் போது
எதிரே இருப்பவரின் கோபத்தை உணர்ந்து சற்று
நேரம் ஒதுக்கி புரிதலோடு சொல்வது
நல்லது. எதிரே இருப்பவரும் சற்று
நேரம் ஒதுக்கி அதே புரிதலோடு
உணர்வதற்கு முன்வரவேண்டும். இப்படியான போக்கு இருந்தால்தான் அது
மகிழ்ச்சி உலவும் இடமாக இருக்கும்
எந்த ஒரு விஷயத்திற்கும் இரண்டு
கோணம் உள்ளது என்று அறிவீர்கள்.
ஆனால் மூன்றாவது ஒரு கோணம் கூட
உண்டு. அதனால் ஒருவருடைய செயலையோ
சொல்லையோ மற்றொருவர் அப்படியே உணர்வதும் உணராமல் போவதும் மூளையின்
செயல்பாட்டைப் பொருத்தது. ஏனெனில் (kinesthetic) கினஸ்தெட்டிக், (auditory)ஆடிட்டரி, (visual) விஷுவல் என்கிற மூளையின்
செயல்பாடுகளில் இந்த புரிதல் வேறுபடும்.
அதாவது
நீங்கள் எதிர்பார்த்த அன்பை அவர்களுக்கு தெரிந்த
வழியில் வெளிப்படுத்தி இருப்பார்கள். ஆனால் உணர்தல், கேட்டல்,
பார்த்தல், என்கிற மாறுபட்ட வகையில்
நீங்கள் எதிர்பார்க்கிற முறையில் அது கிடைத்து இருக்காது.
இதை புரிந்து கொள்வதற்கான திறன் இருந்து விட்டால்
எந்த மாதிரி ஒருவர் நடந்து
கொண்டாலும் அதற்குப்பின் இருக்கும் உண்மையையும் அன்பையும் உணர முடியும்.
உண்மையில்,
எத்தனை பெரிய கூட்டத்திலும் எந்த
ஆடைகளை உடுத்திக் கொண்டு வந்தாலும் இது
எனது குழந்தைதான் என்று கண்டு கொள்வது
போலவே உங்களை நேசிப்பவர் எந்த
மாதிரியான வார்த்தைகளை வெளிப்படுத்தினாலும் இது என் மீதான
அன்பால் வெளிப்படக்கூடிய வார்த்தைதான் என்கிற நம்பிக்கையும் புரிதலுமே
உறவை வளர்க்கும்.
பாக்ஸ்
மெஸ்ஸேஜ்-:
ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருப்பது
போல், எந்த ஒரு சொல்
செயலுக்கும் வெவ்வேறு கோணங்கள் இருக்கும். நீங்கள் பார்க்கும் கோணம்
வேறு மற்றவர் பார்க்கும் கோணம்
வேறு என்ற புரிதல் இருந்தால்
எந்த உறவிலும் விரிசல் வராது.
உதாரணமாக
parallax என் சொல்லப் படும் இந்த
கோணமாற்று பயிற்சியை நீங்களே செய்து
பாருங்கள் .
நீங்கள்
அமைதியாக ஒரு சேரில் உட்கார்ந்து
கொண்டு உங்களுடைய இடது கையால் இடது
கண்ணை மூடிக் கொள்ளுங்கள். இப்போது
வலது கை பெருவிரலை தம்ஸ்அப்
என்பதாக நீட்டி உங்கள் வலது
கண்முன் வைத்து அந்த பெருவிரலுக்கு
நேர் முன்னே இருக்கும் பகுதியை
மனதில் குறித்துக் கொள்ளுங்கள். இப்போது, உங்கள் தம்ஸ் அப்
வலது கையை சற்றும் அசைக்காமல்
அதே இடத்தில் வைத்துக் கொண்டு வலது கண்ணை
மூடி இடது கண்ணால் அதைப்
பாருங்கள். நீங்கள்
எதுவும் மாற்றாமலே உங்கள் தம்ஸ் அப்
வலது கை சற்றே வேறு
பக்கம் நகர்ந்து இருப்பது போல் மாயத் தோற்றம்
தரும். இப்படி
உங்கள் வலது கண்ணும் இடது
கண்ணுமே ஒன்றுக்கு ஒன்று வேறுபட்ட கோணத்தில்
ஒரே பொருளை பார்ப்பதை நீங்கள்
புரிந்து கொண்டால், மற்றவர்களின் கோணத்தை புரிந்து உங்களால்
பிறருடன் பிரச்னை இல்லாமல் செயல்
படமுடியும். உறவுகள் மகிழ்ச்சியாய் மலரும்.
From: Fajila Azad <fajila@hotmail.com>
--
Muduvai Hidayath
Dubai - UAE
+971 50 51 96 433
muduvaihidayath@gmail.com
www.mudukulathur.com
No comments:
Post a Comment