Saturday, October 23, 2021

யாசகன்

 

Abu Haashima

#யாசகன்

இரவு நேரம் .

கடைவீதியில் நின்று கொண்டிருந்தேன் ...

மிக ஏழையான ஒருவர்

என்னை மெதுவாகக் கடந்து சென்று கொண்டிருந்தார்.

ஒடிசலான  மனிதரவர் .

மெல்லிசான குரலில் ...

" ஒரு சாயா குடிக்க காசு கிடைக்குமா " என்று கேட்டார்.

கேட்டு விட்டு பதிலுக்குக் கூட காத்திருக்காமல் அவர் போக்கில்

போய் கொண்டிருந்தார்.

என்னடா இப்படி கேட்டுட்டுப் திரும்பிப் பார்க்காம போறாரேன்னு ஆச்சர்யபட்டேன்.

மூளை உடனே வேலை செய்யலே.

அப்புறம் சுதாரிச்சுகிட்டு

வேகமாக ஓடிப் போய்

" சாயா வேணுமா அண்ணே " என்று கேட்டேன் .

ஆமாம் என்று தலையாட்டினார்.

அவர் முகத்தில் ஒரு கூச்சம் குடியிருந்தது .

பார்க்க பாவமாகவும் இருந்தது.

சாப்பிடுறீங்களா என்று கேட்டேன்.

வேண்டாம் என்று அரைகுறை

மனதோடு மறுத்தார்.

பசிக்குதான்னு கேட்டேன்.

ஆமான்னு தலையாட்டினார்.

புரோட்டா சாப்புடுறீங்களான்னு கேட்டேன் .

வேண்டாம் ... தோசை திங்கிறேன்னு

சொன்னாரு.

இரண்டு தோசை வேணும்னு

கேக்கவும் செய்தாரு.

தோசைன்னா இது சாதா தோசையில்லே. முறுவல் தோசை.

பெருசா இருக்கும். உங்களால ஒரு தோசையே சாப்பிட முடியாதுன்னு சொன்னேன்.

நான் சாப்பிடுவேன்னு சொன்னாரு..

பேச்சில் ஒரு குழந்தைத் தனமும்

கண்களில் ஆர்வமும் மின்னியது.

எதிரிலேயே ஜுப்லி ஹோட்டல் .

அங்கே அழைத்துப்போய் ...

அண்ணனுக்கு ஒரு தோசை போட்டு கொடுங்கன்னு சொன்னேன்.

அந்த முறுவல் தோசையை பார்த்ததும்

ஒண்ணு போதும்னு சொல்லிட்டாரு.

ஒரு ஆம்லெட் சாப்பிடுறீங்களான்னு கேட்டேன்.

வேண்டாம்னு மறுத்துட்டாரு.

ஒரு ரசவடையாவது சாப்பிடுங்கன்னு சொன்னேன்.

சரின்னாரு.

சாயா வேணுமான்னு கேட்டேன்.

ஆமான்னு சந்தோஷமா தலையாட்டினாரு.

வேறு ஏதாவது வேணுமான்னு கேட்டேன்.

இதுவே போதும்னு மனசு நெறஞ்சு சொன்னாரு.

ஹோட்டல்காரங்களும் அவரை நல்லா கவனிச்சாங்க .

சாப்பிட்ட பிறகு அவர்

எப்படிப் போனாரு

எங்க போனாருன்னும் தெரியாது .

நானும் கவனிக்கல.

அப்புறம் நான் பள்ளிவாசல்ல போயி

நேர்ச்சை வாங்கிட்டு வீட்டுக்குப் போயிட்டேன்.

அவர் யாசகனா இல்லையான்னு

எனக்குத் தெரியாது.

சாயாக்குடிக்க காசு கேட்டாரு .

யாருகிட்ட கேட்டாருன்னும் தெரியாது .

ஆனால் ....

நான் யாசகன்.

மீலாதுன்னபி விழா தொடங்கிய

முதல் பிறை முதல்

12 ம் பிறை முடிய மஸ்ஜிதுல் அன்வரில்

மெளலூது ஷெரீஃப் நடைபெற்றது.

ஓரிரு நாட்களைத் தவிர மற்ற நாட்களில்

தவறாமல் அங்கே போய் நேர்ச்சை வாங்கினேன்.

வீட்டில் உணவு இருக்கிறது.

இல்லையென்றாலும் ஹோட்டலில் ஏதாவது வாங்க முடியும்.

ஆனாலும் நபிகளார் பெயரில் ஓதப்படுகின்ற மெளலிதுக்குப் பிறகு

வழங்கப்படுகின்ற நேர்ச்சையை வாங்க வேண்டும் என்ற ஆசை எனக்கிருந்தது.

நானும் ஒரு யாசகனைப்போல்

போய் நின்று பள்ளியில் தரும்

நேர்ச்சையை சந்தோஷமாக

வாங்கி வந்தேன்.

சிலர் என்னை வினோதமாகப் பார்த்தார்கள்.

சிலர் ஏளன சிரி சிரிக்கவும் செய்தார்கள்.

அவர்களுக்குத் தெரியாது ...

நான் யாசித்தது நேர்ச்சையை மட்டுமல்ல

நபிகளாரின் நேசத்தை....

அவர்களின் துஆ பரக்கத்தால் இறைவன்

தருகின்ற பரக்கத்தை என்பது.

யாசித்த கரங்களை

இறைவன் வெறுமனே அனுப்பமாட்டான் என்பதில் நம்பிக்கை உள்ளவன் நான்.

நபிகளின் பொருட்டால் ...

அவன் தோழரின் பொருட்டால்

கேட்டவர்கள் யாருக்கும்

இல்லையென்று சொல்லாமல் எல்லோருக்கும் தன் பரக்கத்தை

வழங்கி இருக்கின்றான் ....

கருணையுள்ள இறைவன் !

எனக்கும் வழங்கி இருக்கின்றான்

என்பதை உணர்ந்து

அல்ஹம்துலில்லாஹ் என்று

நன்றி கூறுகிறேன்.


                                                            Abu Haashima

No comments: