Thursday, July 5, 2012

என் ஊர்

                                                                         என் ஊர்
by நாகூர் ரூமி
  
தான் பிறந்து வளர்ந்த ஊரான நாகூரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நாகூர் ரூமி.

ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் நாகூரின் இரு கண்கள் என்றால் மிகையல்ல. நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு புலவர் அல்லது பாடகரின் மேல் விழவேண்டும் என்றும் கூறுவார்கள். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சச இலக்கிய ஆளுமைகள் 19-ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டே ஆகவேண்டியவர் குலாம் காதிர் நாவலர். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்றும் இவர் குறிப்பிடப்பட்டவர்.”வித்தியா விசாரிணி”, ”ஞானாசிரியன்” ஆகிய பத்திரிக்கைகளை 1888ல் நடத்தியவர்.

தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி மூன்றாவதுக்கு மேல் படிக்காத சித்தி ஜுனைதா பேகம். இவரது ”காதலா கடமையா” என்ற நாவல் 1938-ம் ஆண்டு உவேசா முன்னுரை, புதுமைப்பித்தன் வாழ்த்துரையுடன் வெளிவந்தது  கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், அப்துல் கய்யூம், ஆபிதீன், சாருநிவேதிதா போன்ற படைப்பாளிகள் அனைவரும் நாகூர்க்காரர்கள்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கம்பராமாயண அறிஞருமான எம்.எம். இஸ்மாயீல், புலவர் ஆபிதீன் காக்கா, மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடகர்களை உருவாக்கிய கவிஞர் கலைமாமணி சலீம், கவிஞர், பேச்சாளர் இஜட் ஜபருல்லா, கவிஞர் இதயதாசன், நாகூர் இஸ்மாயீல் என்று இலக்கியம், கவிதை, நீதித்துறை, திரைத்துறை என பல பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீள்கிறது.



இசைத்துறையில் நாகூரின் பங்களிப்பு அதிசயமானது என்று கூறவேண்டும். கர்நாடக இசையில் கரைகண்டவர் நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர். நாகூர் இ.எம். ஹனிபா என்றால் தெரியாத தமிழர்கள் எவரும் இருக்க முடியாது.



நாகூரில் இலக்கியத்தோடு பின்னிப் பிணைந்தது ஆன்மிகம். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் ஷாஹுல் ஹமீது காதிர் வலீ மகான் உத்திரப்பிரதேசத்தில் இருந்த மாணிக்கப்பூரிலிருந்து நாகூருக்கு வந்து, 28 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி, நாகூருக்குப் புகழைக் கொடுத்தவர். முஸ்லிம்களின்மீது வெறுப்புகொண்டு வன்முறையில் ஈடுபட்ட போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போர் செய்ய குஞ்சாலி மரைக்காயர் போன்ற வீரர்களை உருவாக்கி இந்திய விடுதலைக்கும் தொண்டாற்றினார்.



ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாகூர் தர்காவுக்கு வரும் பத்து பேரில் ஒன்பது பேர் முஸ்லிமல்லாதவர்களாகவே இருப்பார்கள். நாகூர் தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் 14 நாள் கந்தூரி விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து கொள்கின்றனர்.



500 ஆண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்தைக் கட்டிக் காக்கும் ஊராக உள்ளது எங்கள் ஊர். நாகூர் தர்காவுக்கு ஐந்து மினாராக்கள் அழகு சேர்க்கின்றன. அதில் பிரதான வாயிலின் எதிரில் இருக்கும் 131 அடி உயர, பத்து அடுக்குகள் கொண்ட பெரிய மினாராவைக் கட்டிக் கொடுத்தவர் தஞ்சையை ஆண்ட மன்னர் பிரதாபசிங். நாகூர் நாயகம் அடக்கம் செய்யப்பட்டுள்ள மூலஸ்தானத்தையும், மேல் விட்டத்தையும் முதன் முதலில் கட்டிக் கொடுத்தது கடற்கரையோரமாக இருக்கும் பட்டினச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள்.



கந்தூரி பத்தாம் நாள் நாகூர் நாயகத்தின் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். அப்போது சமாதியில் போர்த்தப்படும் போர்வையை நெய்து தருவது சென்னையைச் சேர்ந்த றா.பழனியாண்டிப் பிள்ளையின் குடும்பத்தினர். நாகூர் நாயகத்தின் அடக்கஸ்தலத்துக்கு மேலிருக்கும் கும்பத்தின் தங்கக் கலசம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த மகாதேவ அய்யரால் கட்டிக் கொடுக்கப்பட்டது.



தர்காவுக்கான தளத்தை கோவிந்தசாமி செட்டி என்பவர் அமைத்துக்கொடுத்துள்ளார். கந்தூரி ஊர்வலத்தில் சந்தனக்கூடு வருமுன் வரும் பல்லக்கும் செட்டியார்களால் செய்யப்படுவது. அதற்கு ‘செட்டிப் பல்லக்கு’ என்றே பெயர். நாகூரின் பிரதான சாலையில் ‘கூட்டு ஃபாத்திஹா வீடு’ என்று உள்ளது. கந்தூரி நடக்கும் 14 நாட்களும் இந்துப் பெருமக்கள் அவர்களுடைய செலவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுமிடம் அது.

பேச்சு, எழுத்து, இசை, கலை, ஆன்மிகம், வாணிகம் எனப் பல துறைகளில் கேட்பவர்களை மூக்கில் விரல் வைக்கவைக்கும் ஊர் நாகூர் என்பது உண்மை.



படங்கள்: ச வெங்கடேசன், செ.சிவபாலன்.



என்னைப் பற்றிய பெட்டிச் செய்திகள்



நாகூரைச் சேர்ந்த படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், வசனகர்த்தா தூயவன் ஆகியோர் நாகூர் ரூமியின் தாய் மாமாக்கள். சித்தி ஜுனைதா பேகம் ரூமியின் பெரியம்மா!



இப்போது ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்பன் கவிதைகள் மற்றும் மில்டன் கவிதைகள் குறித்து பிஹெச்டி ஆய்வினை மேற்கொண்டவர்!



ஆங்கிலத்தில் ஐந்து, தமிழில் 27, மொழிபெயர்ப்பு ஆறு என இதுவரை 38 நூல்களை எழுதி இருக்கிறார் நாகூர் ரூமி!



இவர் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்து உள்ளது. இவருடைய ஹோமரின் இலியட் காவியத் தமிழ் மொழிபெயர்ப்புக்காக திசையெட்டும் தமிழாக்க விருது பெற்றுள்ளார்

நன்றி என் விகடன் 04.07.12 மற்றும் நண்பர்கள் மனா, வெங்கடேசன்

குறிப்பு:

என் விகடன் அட்டையில் என் படத்தைப் போட்டு “யாரும் வருவார் நாளும் தொழுவார்  நாகூர் ஆண்டவர் சந்நிதியில்” என்ற திரைப்படப் பாடல் வரிகளை மேற்கோள் மாதிரி போட்டுள்ளார்கள். ஏதோ நானே சொல்வது போன்ற ஒரு தொனியை அது தருகிறது. ’நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா…உன்னை நாளும் வேண்டவா” என்ற முட்டாள்தனமான, இஸ்லாத்தின் அடிப்படையைப் புரிந்து கொள்ளாத பல்லவியைக் கொண்ட பாடலின் வரிகளில் ஒன்று அது. எங்களைப் பொறுத்தவரை பாதுஷா நாயகம் அவர்கள் ஒரு மாபெரும் மகான், ஞானி. அவர்கள் ஆண்டவனல்ல. மனிதர்தான். அவரை எந்த முஸ்லிமும் தொழுவதில்லை. வணக்கம் எல்லாம் இறைவன் ஒருவனுக்குத்தான். இதைச் சொல்ல வேண்டியது என் கடமை.

நான் ஒரிஜினலாக எழுதி அனுப்பிய முழு கட்டுரை:

என் ஊர்

ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வரலாறு உண்டு. ஆனால் சில ஊர்கள் வரலாறு படைக்கின்றன. அவ்வகையில் தொடர்ந்து வரலாறு படைக்கும் ஊர்களில் ஒன்றுதான் நாகூர்.

இலக்கியம் மற்றுக் கலை

கன்னித் தமிழுக்குப் பெருமை சேர்த்த

கவிஞர்களைத் தந்த நாகூராம்

மன்னவரெல்லாம் மலரடி பணிந்த

மகிமைக் காதிர் மீராவாம்



கலைமாமணி கவிஞர் நாகூர் சலீமின் ”தமிழகத்து தர்காக்களைப் பார்த்து வருவோம்” என்ற புகழ்பெற்ற பாடலின் இவ்வரிகள் நாகூரின் ஆத்மாவைத் தொட்டவரிகள் என்று கூறலாம். ஏனெனில் ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் நாகூரின் இரு கண்கள் என்றால் மிகையல்ல. நாகூருக்குப் “புலவர் கோட்டை” என்றொரு பெயரும், நான்காம் தமிழ்ச்சங்கம் அமைத்த பெருமையும் உண்டு. நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு புலவர் அல்லது பாடகரின் மேல் விழவேண்டும் என்றும் கூறுவார்கள்.

கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சச இலக்கிய ஆளுமைகள் 19-ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டே ஆகவேண்டியவர் குலாம் காதிர் நாவலர்(1833-1908). நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார். இவர் தமிழ் கற்றது மதுரை மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம். இவரிடம் தமிழ் கற்றவர் மறைமலை அடிகள்! நாவலர் ஒரு புலவர் மட்டுமல்ல, சொற்பொழிவாளர், அரபி, ஆங்கிலம் போன்ற மொழிகள் நன்கறிந்த பன்மொழி அறிஞர். பத்திரிக்கைத் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்தவர். ”வித்தியா விசாரிணி”, ”ஞானாசிரியன்” ஆகிய பத்திரிக்கைகளை 1888ல் நடத்தியவர். இவற்றில் முன்னது மார்க்க வினா விடைகள், சமய சட்டதிட்டங்கள், நெறிமுறைகள், இலக்கிய விளக்கங்கள், உலக நடப்புச் செய்திகளைத் தாங்கி, பினாங்கிலிருந்தும் நாகூரிலிருந்தும் வெளிவந்தது.

குலாம் காதிர் நாவலர் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியவர். ”நாகூர்ப்புராணம்”, ”ஆரிபு நாயகம்” ஆகிய காவியங்களும், அனேக கலம்பகங்களும், மாலைகளும், அந்தாதிகளும் அவற்றில் அடக்கம். ரைனால்ட்ஸ் எழுதிய ”Omar” என்ற ஆங்கில வரலாற்று நாவலை ”உமறு பாஷா யுத்த சரித்திரம்” என்ற பெயரில் 900 பக்கங்களில் 1889-லேயே வெளியிட்டார்.  அது 2001-ல் சென்னை கல்தச்சன் பதிப்பகத்தால் மறுவெளியீடு செய்யப்பட்டது. தமிழகஅரசு குலாம்காதிர் நாவலரின் படைப்புகளை நாட்டுடமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலக்கிய ஆளுமைகளும் படைப்புகளும் நாகூரில் தொடர்ந்த வண்ணமே உள்ளன. முதன் முதலில் தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி மூன்றாவதுக்கு மேல் படிக்காத சித்தி ஜுனைதா பேகம். இவரது ”காதலா கடமையா” என்ற நாவல் 1938-ம் ஆண்டு உவேசா முன்னுரை, புதுமைப்பித்தன் வாழ்த்துரையுடன் வெளிவந்தது (இந்நாவலை நான் மறுபதிப்பு செய்துள்ளேன்). கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், அப்துல் கய்யூம், ஆபிதீன், சாருநிவேதிதா போன்ற படைப்பாளிகள் அனைவரும் நாகூர்க்காரர்கள். என்னையும் இதில் ’கஞ்சாடெ’யாக சேர்த்துக்கொள்ளலாம். (குழந்தைகள் விளையாடும்போது விளையாட்டு விதிகள் அறியாதவர்களை போனால்போகிறதென்று சேர்த்துக்கொள்வார்கள். அவர்களுக்கு நாகூர் பாஷையில் ’கஞ்சாடெ’ என்று பெயர்).

திரைப்படத்துறையிலும் நாகூரின் பங்களிப்பு கணிசமாக உள்ளது. குறிப்பாக இரண்டு பேர். ஒருவர் ரவீந்தர். எம்ஜியார் நடித்த மஹாதேவி படத்துக்கு வசனம் எழுதியவர். இன்னொருவர் தூயவன் என்ற அக்பர். வைதேகி காத்திருந்தாள், அன்புள்ள ரஜினிகாந்த போன்ற படங்களை தயாரித்தவர். எண்பது படங்களுக்கு மேல் வசனம் எழுதியவர். தேவர் பிலிம்ஸின் ஆஸ்தான வசனகர்த்தா. இவர் ஆனந்த விகடனிலிருந்து உருவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. விகடனில் தொடர்ந்து முத்திரைக்கதைகள் எழுதி பரிசு பெற்று அதன் மூலமாக சினிமாவுக்குச் சென்றவர். அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குனராக நாகூர் ஃபரீத் காக்கா பணியாற்றினார்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியும், கம்பராமாயண அறிஞருமான மு.மு. இஸ்மாயீல், புலவர் ஆபிதீன் காக்கா, மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடகர்களை உருவாக்கிய கவிஞர் கலைமாமணி சலீம், கவிஞர், பேச்சாளர் இஜட் ஜபருல்லா, கவிஞர் இதயதாசன், நாகூர் இஸ்மாயீல் என்று இலக்கியம், கவிதை, நீதித்துறை, திரைத்துறை என பல பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீளுகிறது.

இசைத்துறையில் நாகூரின் பங்களிப்பு அதிசயமானது என்று கூறவேண்டும். கர்நாடக இசையில் கரைகண்டவர் நாகூர் தர்கா சங்கீத வித்வான் எஸ்.எம்.ஏ. காதர். கர்நாடக சங்கீதத்தில் இஸ்லாமியப் பாடல்களை எச்.எம்.வி.யில் பாடி பிரபலப்படுத்தியவர். மூன்று காலங்களிலும் அனாயாசமாகப் பாடக்கூடியவர். (காலம் என்றால் நிகழ்காலம், இறந்த காலம் வருங்காலமல்ல. கர்நாடக இசையுலகில் ஸ்வர வரிசையை இருமடங்கு, மும்மடங்கு என வேகம் கூட்டி, ஆனால் தாளம் தவறாமல் பாடுவதை ஒன்னாம் காலம், ரெண்டாம் காலம் மூன்றாம் காலம் என்று கூறுவார்கள்). எஸ்.எம்.ஏ. காதர் அவர்களின் குரு உஸ்தாத் தாவூத் மியான் கான். கர்நாட இசையில் புகழ்பெற்ற கிட்டப்பாவும், காதர் அவர்களும் தாவூத் மியானிடம் பயின்றவர்கள் என்பது பலருக்குத் தெரியாது. முதியவர் எஸ்.எம்.ஏ. காதர் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை வழங்க வேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

நாகூர் இ.எம். ஹனிபா என்றால் தெரியாதவர்கள் தமிழ்நாட்டில், ஏன் இந்தியாவிலும்கூட இருக்க முடியாது. வெண்கலக்குரலுக்குச் சொந்தக்காரர். இஸ்லாமியப் பாடல்களுக்கு இஸ்லாமியர் அல்லாதவர்கள் மத்தியிலும் ரசனையையும் மரியாதையும் ஏற்படுத்தியவர்.  இலக்கியம் மற்றும் கலைத்துறை பற்றிய ஒரு சிறு குறிப்புதான் இது. கவிஞர்கள், படைப்பாளிகள், பாடகர்கள், பேச்சாளர்களின் பட்டியலுக்கு தனியாக ஒரு புத்தகமே போடலாம்.

ஆன்மிகம்

நாகூரில் இலக்கியத்தோடு பின்னிப் பிணைந்தது ஆன்மிகம். 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த இறைநேசர் ஷாஹுல் ஹமீது காதிர் வலீ மகான் அவர்கள் உத்திரப்பிரதேசத்தில் இருந்த மாணிக்கப்பூரிலிருந்து நாகூருக்கு வந்து, 28 ஆண்டுகள் வாழ்ந்து பல அற்புதங்களை நிகழ்த்தி, நாகூருக்குப் புகழையும் வரலாற்றையும் கொடுத்தவர்கள். முஸ்லிம்களின்மீது வெறுப்புகொண்டு வன்முறையில் ஈடுபட்ட போர்ச்சுக்கீசியர்களை எதிர்த்துப் போர்செய்ய குஞ்சாலி மரைக்காயர் போன்ற வீரர்களை உருவாக்கி இந்திய விடுதலைக்கும் தொண்டாற்றினார்கள். ஒவ்வொரு வியாழக்கிழமையும் நாகூர் தர்காவுக்கு வரும் பத்து பேரில் ஒன்பது பேர் முஸ்லிமல்லாதவர்களாகவே இருப்பார்கள். மருத்துவ மேதையாகவும், இசை மேதையாகவும், ஆன்மிக ஞானியாகவும் இருந்த நாகூர் நாயகத்தின் தர்காவில் ஆண்டுதோறும் நடக்கும் 14 நாள் கந்தூரி விழாவின்போது லட்சக்கணக்கான மக்கள் உலகெங்கிலுமிருந்து வந்து கலந்து கொள்கின்றனர். 500 ஆண்டுகளுக்கும் மேலாக மதநல்லிணக்கத்தைக் கட்டிக் காக்கும் ஊராக உள்ளது சில வரலாற்று உதாரணங்கள்.

நாகூர் தர்காவுக்கு ஐந்து மினாராக்கள் அழகு சேர்க்கின்றன. அதில் பிரதான வாயிலின் எதிரில் இருக்கும் 131 அடி உயர, பத்து அடுக்குகள் கொண்ட பெரிய மினாராவைக் கட்டிக் கொடுத்தது தஞ்சையை ஆண்ட மன்னர் பிரதாபசிங். (கி.பி. 1739-1763). நாகூர் நாயகம் இறந்து 199 ஆண்டுகள் கழித்து, அவர்களிடம் வைத்த வேண்டுதல் நிறைவேறியதன் பொருட்டு அது அவரால் கட்டிக் கொடுக்கப்பட்டது. பிரதாபசிங் கட்டிக்கொடுத்த பெரிய மினாரா தொடர்பாக 12 பிரிவுகளாக கல்வெட்டு வாசகங்கள் உள்ளன.

நாகூர் நாயகம் அடங்கியுள்ள மூலஸ்தானத்தையும், மேல் விட்டத்தையும் முதன் முதலில் கட்டிக் கொடுத்து காணிக்கையாக்கியது கடற்கரையோரமாக இருக்கும் பட்டினச்சேரியைச் சேர்ந்த மீனவர்கள். நாகூர் நாயகத்தின் தலைமாட்டில் அவர்கள் ஏற்றி வைத்த முதல் விளக்கே இன்றும் எரிந்து கொண்டிருக்கிறது.



கந்தூரி பத்தாம் நாள் நாகூர் நாயகத்தின் சமாதிக்கு சந்தனம் பூசப்படும். அப்போது சமாதியில் போர்த்தப்படும் போர்வையை நெய்து தருவது சென்னையைச் சேர்ந்த றா.பழனியாண்டிப் பிள்ளையின் குடும்பத்தினர். ரயில்வே நிலையம் அருகில் உள்ள சத்திரம், பிரதான நுழைவாயில் செம்புக் கதவு ஆகியவற்றை அமைத்துக் கொடுத்ததும் பழனியாட்டிப் பிள்ளைதான்.

நாகூர் நாயகத்தின் அடக்கஸ்தலத்துக்கு மேலிருக்கும் கும்பத்தின் தங்கக் கலசம் கூத்தா நல்லூரைச் சேர்ந்த மகாதேவ அய்யரால் 09.02.1956 கட்டிக் கொடுக்கப்பட்டது.

தர்காவுக்கான தளத்தை கோவிந்தசாமி செட்டி என்பவர் அமைத்துக்கொடுத்துள்ளார். கந்தூரி ஊர்வலத்தில் சந்தனக்கூடு வருமுன் வரும் பல்லக்கும் செட்டியார்களால் செய்யப்படுவது. அதற்கு ‘செட்டிப் பல்லக்கு’ என்றே பெயர்.

நாகூர் வரும் பிரதான சாலையில் ‘கூட்டு ஃபாத்திஹா வீடு’ உள்ளது. கந்தூரி நடக்கும் 14 நாட்களும் இந்துப் பெருமக்கள் அவர்களது செலவில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுமிடம் அது. அரை நூற்றாண்டுக்கும் மேலாக இந்தப் பணி நடந்து வருகிறது. மற்ற நாட்களில் திருமணம் போன்ற விழாக்கள் நடக்கும்.



நாகூர் நாயகத்தின் சீடர்களில் ஒருவர் ரெங்கையா. முத்துச்சாமி என்பவர் 19-ம் நூற்றாண்டில் தர்காவின் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

“ஞானமென்பது உங்கள் நீண்ட அங்கியிலோ ஜபமாலையிலோ இல்லை”, “இதயம் பரிசுத்தமாக இருக்கும் அளவுக்கு அதில் ஏற்படும் தெய்வீக உதிப்பும் உயர்வானதாக இருக்கும்” போன்றவை நாகூர் நாயகத்தின் பொன்மொழிகளில் சில.

நாகூர் நாயகம் மறைந்த பிறகு அவர்களது ஆன்மிகச் சேவைகள் முடிந்துபோய்விடவில்லை. அற்புதங்கள் தொடர்கின்றன. இன்றும் வேண்டுதல்கள் நிறைவேறிய வண்ணம், ஞானிகளின் மறைவாழ்வு பற்றி உணர்த்திக்கொண்டுதான் உள்ளன. அந்த பாரம்பரியத்தில் வந்தவர்தான் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆன்மிக நூல்களின் ஆசிரியரும், நாடிவந்தவர்களின் நோய்களையும் பிரச்சனைகளையும் தீர்த்தவருமான ஞானி எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி. பாகர் ஆலிம் சாஹிப், யாசீன் ஆலிம் சாஹிப் போன்ற பரவலாக அறியப்படாத எத்தனையோ மகான்களின் வாழ்வும் நாகூர் மண்ணில் புதைந்து கிடப்பது உண்மை.

வாணிபத்துக்கும் நாகூர் பெயர் பெற்றது. மரைக்காயர்கள், மாலிமார்கள் போன்ற பெரும் வணிகர்கள் கப்பல் வாணிபம் நடத்திய வரலாறு உண்டு. சொந்தமாகக் கப்பல் வைத்திருந்தவர் அனேகம் பேர்.

நாகமரங்கள் அதிகம் இருந்ததால் நாக ஊர் என்பது மருவியும், நாவன்மை மிகுந்தவர்களைக் கொண்ட ஊரானதால் நாகூர் என்றும் ஆனது என்று கூறுவார்கள். ”சோறு எங்க விக்கும்?” (விற்கும்) என்று நாகூருக்கு வந்த ஒரு புலவர் கேட்டாராம். அதற்கு, தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன், “தொண்டையில்தான் விக்கும்” என்று சொல்லிவிட்டு ஓடினான் என்று ஒரு கதை சொல்வார்கள். பேச்சு, எழுத்து, இசை, கலை, ஆன்மிகம், வாணிகம் என பல துறைகளில் கேட்பவர்களை மூக்கில் விரல் வைக்க வைக்கும் ஊர் நாகூர் என்பது உண்மை. மேலதிக விபரங்களை http://en.wikipedia.org/wiki/Nagore, http://ta.wikipedia.org/wiki/நாகூர்_(தமிழ்_நாடு), http://www.nagoredargha.com/, http://abedheen.wordpress.com/, http://nagoori.wordpress.com/ போன்ற வலைத்தளங்களிலும் காணலாம்.

மேற்கூறிய படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், தூயவன் ஆகியோர் எனக்கு தாய் மாமாக்கள்.  சித்தி ஜுனைதா பேகம் என் பெரியம்மா. நீதிபதி மு.மு.இஸ்மாயீல் நண்பர் ஆபிதீனின் பெரிய மாமனார்.

Source : http://nagoorumi.wordpress.com

No comments: