Sunday, July 8, 2012

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)

 அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)

அரசியல் வாழ்க்கை

(இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்) ஹாஜியார் அவர்களின் அரசியல் ஈடுபாடும் அதன் வாயிலாக ஆற்றிய பணியும் சிறப்பு வாய்ந்தன. .முஸ்லிம்களுக்கிடையே அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும், ஒற்றுமையை  உண்டாக்கவும் நாடெங்கும் முஸ்லிம் மாநாடுகள் நடைப்பெற்றன.  ஹாஜியார் அவர்கள் மாயூரம்  வட்டத்திற்கு தலைமையேற்றார்கள், அவர்களின் தலமையின் கீழ் அனைத்து  ஊர் மக்களும் அணி வகுத்தனர்.  1938-ம் ஆண்டு மாயூரம் தாலுக்கா மாநாட்டைக் கூட்டினார்கள். மிகுந்த கோலாகலத்துடன் பேறு வெற்றியுடன் நடந்தது அம்மாநாடு. பெருந்  தலைவர்கள் பலர் பங்கு பெற்றனர். இதுகாறும் இந்த பகுதியிலே அம்மாதிரியொரு மாநாடு நடைபெற்றதில்லை என்று  சொல்லுமளவுக்கு இருந்தது. மாநாட்டையொட்டி ரூபாய் ஆயிரத்திற்கு மேல் சொந்த பணத்தை செலவு செய்தார்கள்.

 பிறகு 1942-ம் ஆண்டு சென்னையில் மாநில முஸ்லிம்லீக் மாநாடு பெருமளவில் நடந்தது. பட்டி தொட்டிகளிலிருந்தும் மக்கள் மாநகரை நோக்கி திரண்டனர். அலைகடளென  ஆர்ந்தெழுந்த மக்களை ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் அழைத்து செல்லும் பொறுப்பு ஹாஜியார் அவர்கள் மீதே சார்ந்திருந்தது. அவர்கள் அயரவில்லை. பிறைகொடி பிடித்த அப்பெருங் கூட்டதிற்கு தனி இரயில் வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சரித்திரத்தையே  சமைத்தார்கள். ஒழுங்கோடும் உவகையோடும் அனைவரும் இரயில் ஏறி மாநாடு கண்டு வெற்றிகரமாக ஊர் திரும்பினர். தனி  இரயில் ஏற்படுத்தியதின் மூலமாக சொந்த பணம் வெகுவாக செலவழிந்ததையும் அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. சமுதாயப் பணியே அவர்களது இதய மூச்சாக இருந்தது.

நீடூர் வளர்ச்சி.

நீடூரில் இட நெருக்கடி மிகுந்து வந்தது. அதை விரிவு படுத்த வேண்டிய தருணமும் வந்தது. ஊரைச் சார்ந்துள்ள நஞ்சைப் பகுதிகள் ஏனாதிமங்களம் சோமசுந்தரம் பிள்ளை அவர்களுக்கு சொந்தமாக இருந்தது. ஹாஜியார் அவர்கள் தாமே பெருத்த முதலீடு போட்டு அவற்றை வாங்கி வீட்டு மனைகளாகவும் தெருக்களாகவும் பிரித்தார்கள். வீடு கட்டுவோருக்கு மனைகள் விற்று ஊரை விரிவடையச் செய்தார்கள்.

துளசேந்திரபுரம்  உருவாகுதல்.

கொள்ளிடத்தைச் சார்ந்த துளசேந்திரபுரம் சிறிய ஊர். அங்குள்ள முஸ்லிம்களுக்குக்  குடியிருப்பு  வசதிகளோ,
இறைவணக்கதிற்கு பள்ளிவாசலோ, சிறுவர் சிறுமியர்க்கு அறிவுக்கண் திறக்கச் செய்யும்  ஓர் அரபி மதரஸாவோ  இல்லாமலிருந்தன. அந்த ஊர் மக்கள் தங்களுக்கிருந்த அப்பெருங் குறைகளை  ஹாஜியார் அவர்களிடம் வந்து முறையிட்டனர். இவ்வளவு குறைகளையறிந்தும் ஹாஜியார் வாளாவிருப்பார்களா?
  
எவர்கள் விசுவாசம் கொண்டு கருமங்களை செய்கிறார்களோ, அவர்களை இறைவன் தன்னுடைய அருகில் புகுத்துவான். இதுவே தெளிவான வெற்றியாகும் ஜாஸியா(45:49)என்பது  குர்ஆனின் மணிமொழி.


நற்செயல்களே தம் நாடித்துடிப்பாக கொண்ட ஹாஜியார் அவர்கள் இந்த காலத்தில் இப்படியும் ஓர் ஊர் இருக்குமோ! என்று  கசிந்துருகி, மின்னல் வேகத்தில் செயல்பட்டார்கள். முதலில் ஓர் இடத்தை சொந்தத்தில் வாங்கி எழில்மிகு பள்ளிவாசல் ஒன்றையும் மதரஸா ஒன்றையும் சிறந்த முறையில் கட்டிக்கொடுத்து. மக்களின் மனங்களிக்கச் செய்தார்கள். அவ்வூருக்கு   அருகில் ஆணைதாண்டவபுரம் எம். கிருஷ்ணசாமி என்பவருக்கு  சொந்தமாகவிருந்த 3  வேலி நிலத்தைத் தாமே  ரூபாய் எண்பதாயிரம்  பணம் போட்டு விலைக்கு வாங்கி வீட்டு மனைகளாகவும்,தெருக்களாகவும்  பிரித்தார்கள். வீடில்லா அவ்வூர்  மக்களுக்கு மனைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்து அவ்வூர் மக்களின் துயரத்தை துடைத்தார்கள்.  அல்லாஹ்வுக்கு உதவியென்பது  அல்லாஹ்வின் நல்லடியாருக்கு உதவியென்றாகின்றது. இம்மாதிரி கைமாறு  கருதாத உதவியினால் ஆண்டவன் தன் கூற்றிகேற்ப ஹாஜியார் அவர்களயும் வளர்த்து வந்தான்.
 தொடரும்...

Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்  

 அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)

No comments: